வியாழன், ஆகஸ்ட் 22, 2013

காவல்துறை வாகனங்களை உடைத்து நொறுக்கிய காவல்துறையினர் - தடியடி!


காரைக்கால்: காவல்துறை வாகனங்களை காவல்துறையினரே உடைத்து நொறுக்கிவிட்டு முஸ்லிம்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உடைத்ததாகக் கூறி தடியடி நடத்தியுள்ள சம்பவம் காரைக்காலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை சுதந்திர தின பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகள் நடத்த தமிழக அரசும் காவல்துறையும் தடை விதித்திருந்தது. இதனைக் கண்டித்து காரைக்காலில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற போது காவல்துறையினர் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரி அந்த அமைப்பினர் இன்று ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர். அது சமயம், காவல்துறையினரே காவல்துறை வாகனங்களை உடைத்து நொறுக்கிவிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் உடைத்ததாகக் கூறி அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இது குறித்து காரைக்காலில் இருந்து நமது சிறப்புச் செய்தியாளர், காவல்துறை வாகனங்களை காவல்துறையினரே உடைத்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளதாகவும், இதனைக் கொண்டு காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரிவித்தார். மேலும், இது குறித்து நாளை காரைக்காலில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பதாகவும் அக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.