செவ்வாய், ஜனவரி 31, 2012

கட்சத்தீவை திரும்பப் பெறுவதின் மூலமே இதற்கு தீர்வு காணமுடியும் என்று ஆளுனர் ரோசய்யா தமது உரையில் வலியுறுத்தியுள்ளார்.


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், அடிக்கடி தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் தொடர்கதையாகி உள்ளதால், கட்சத்தீவை திரும்பப் பெறுவதின் மூலமே இதற்கு தீர்வு காணமுடியும் என்று ஆளுனர் ரோசய்யா தமது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுனர் ரோசய்யா தொடக்க உரையாற்றினார். அப்போது தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறைக்கொண்டு, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

வரும் 12-வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் ஒரு லட்சத்து 85-ஆயிரம் கோடி ரூபாயை திட்டப்பணிகளுக்காக அரசு செலவிட திட்டமிட்டுள்ளதாகவும், இது கடந்த ஐந்தாண்டு திட்டத்தை விட அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு பதிலாக ரூபாய் ஆயிரம் கோடி செலவில் ஒரு லட்சம் காங்கிரட் வீடுகள் கட்டி தரும் திட்டத்தை அரசு தொடங்கும் என்று ஆளுனர் ரோசய்யா தமது உரையில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று முல்லைப்பெரியாறு அணைவிவகாரம் குறித்து நடுவண் அரசின் அலட்சிய போக்காலும், குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட பரப்புரைகளாலும், பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தின் உரிமையை அரசு நிலைநாட்டுவதில் திட்டவட்டமாக உள்ளதாக ரோசய்யா தெரிவித்தார். மேலும் அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், அடிக்கடி தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் தொடர்கதையாகி உள்ளதால், கட்சத்தீவை திரும்பப் பெறுவதின் மூலமே இதற்கு தீர்வு காணமுடியும் என்றும், மீனவர்கள் இழந்த உரிமையை மீட்க முடியும் என்றும் ஆளுனர் தனது உரையில் தெரிவித்துள்ளார். 

இதுமட்டுமின்றி, நெகிழி கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத்தடுத்து, நீடித்த பயந்தரும் சுற்றுச்சூழல் அஈர்கேட்டை தடுத்து, நீடித்த பயந்தரும் சாலைகளை அமைக்க விவானதொரு திட்டம் செயல்படுத்தப்படும் என்று ரோசய்யா அறிவித்துள்ளார்.
தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் தொன்மையான பண்பாட்டைப்பாதுகாக்கவும், நடவடிக்கை எடுத்துவரும் அரசு தமிழ்மொழியை நடுவன் அரசினின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக அறிவிக்க வலியுறுத்தும் என்று ரோசையா தெரிவித்துள்ளார்.

அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து நடுவண் குழுவுடன் போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் போராட்டக்குழுவினர் ஆட்சியர் அலுவலகம் வந்தபோது அங்கிருந்த இந்து முன்னணி உள்ளிட்ட அணுஉலை ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தையை புறக்கணித்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இடிந்தகரை உள்பட மீனவ  கிராமங்களில் காட்டுத் தீ போல் பரவியதால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கூடங்குளம்அணுமின் நிலையம் முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், ஜனவரி 30, 2012

சென்னையில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினால் இன்று முதல் இரண்டு மடங்கு அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.



இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இருசக்கர வாகனப் பதிவைப் புதுப்பிக்கத் தவறினால், முதல் முறை பிடிபடும் போது 100-ரூபாயும், அதற்கு அடுத்த ஒவ்வொரு முறையும் 300-ரூபாயும் வசூலிக்கப்படும். பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டினால், முதல் முறை 2 -ஆயிரத்து 500-ரூபாய் வசூலிக்கப்படும்.
இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தால் 100 ரூபாயும், இரண்டாம் முறை அதே தவறுக்கு 300 ரூபாயும் விதிக்கப்படும். அபாயகரமாக வாகனம் ஓட்டினால் 1000 ரூபாயும், மீண்டும் தவறு செய்தால் 2 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும்.
அதிவேகமாக வாகனம் ஓட்டினால், 400 ரூபாயும், அடுத்தடுத்த தவறுகளுக்கு 1000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தலைக் கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டி, முதல் முறை பிடிபட்டால் 100 ரூபாயும், அடுத்தடுத்த முறைகளில் 300 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டத் தவறினால், 100 ரூபாயும் அடுத்தடுத்த முறைகளுக்கு 300 ரூபாயும் விதிக்கப்படும். இந்தப் புதிய உத்தரவு, சென்னை மாநகரில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 


பெரு தலைநகரில் பயங்கர தீவிபத்து: 26 பேர் பலி


 1/1 

லிமா, ஜன.- 30 - பெரு நாட்டின் தலைநகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த மறுவாழ்வு மையத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், போதைக்கு அடிமையானவர்கள் என ஏராளமானவர்கள் இந்த மறுவாழ்வு மையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இம்மையத்தில் உள்ள 26 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என்றும் அஞ்சப்படுகிறது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடியுள்ளனர். இந்த முயற்சியில் 10 தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா-பாக். இடையே நல்லுறவு கட்டாய தேவையாகும்: கிலானி


 1/1 

தேவோஸ்,ஜன.- 30 - இந்தியாவுடன் நல்லறவு கட்டாய தேவையாகும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.  தேவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் சென்றுள்ளார். இந்திய விஞ்ஞானம்,தொழில்நுட்ப இணை அமைச்சர் அஷ்வினி குமாரும் அங்கு சென்றுள்ளார். இரண்டு பேரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் கிலானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவ வேண்டியது கட்டாய தேவையாகும் என்றார். இந்தியாவுடனான இதர பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் உள்துறை செயலாளர் விரைவில் புதுடெல்லி செல்வார். இந்தியா-பாகிஸ்தான் இடையே விரைவில் நல்லுறவு ஏற்படும் என்றும் கிலானி கூறினார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நல்வாழ்த்துக்கள் கூறியதாக தெரிவிக்கும்படியும் அமைச்சர் குமாரை கிலானி கேட்டுக்கொண்டார். மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி ஹர், இம்ரான் கான் ஆகியோர்களையும் அமைச்சர் குமார் சந்தித்து பேசினார். தாய்லாந்து, டென்மார்க், பின்லாந்து, ஆகிய நாடுகளின் பிரதமர்களும் சர்வதேச நிதியுதவி ஸ்தாபன தலைவர் கிறிஸ்டின் லாகார்டீ, உலக வர்த்தக அமைப்பு இயக்குனர் ஜெனரல் பஸ்கல் லாமி, உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோயல்லிக் மற்றும் முக்கிய தலைவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

ஞாயிறு, ஜனவரி 29, 2012

இலங்கை அமைச்சருக்கு கருப்புக்கொடி

சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த ,லங்கை அமைச்சருக்கு நாம் தமிழர் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நேற்று ,ரவு சுமார் 9 மணியளவில் ,லங்கை அமைச்சர் தொண்டமான் தரிசனம் செய்யவந்தார். கோயிலுக்குள் சென்று தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, நாம் தமிழர் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட தமிழர் நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் வருகையை கண்டித்து, ராஜபக்சேவுக்கு எதிராக முழக்கமிட்டவாறு கறுப்புக் கொடி காட்டினர்.
அவர்களை தடுத்த காவல்துறையினர் அமைச்சரை பாதுகாப்புடன் அங்கிருந்து கூட்டிச்சென்றனர்.  ,தனால் திருநள்ளாறு கோயில் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மையில்  ராஜபக்சேவின் மைத்துனருக்கு ராமேஸ்வரத்தில் வைத்து தமிழர் அமைப்புகள் செருப்படி கொடுத்து கடும் தாக்குதலைத் தொடுத்தநிலையில் தற்போது தொண்டமானுக்கு எதிராக போராட்டம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் ரூ.30 கோடி செலவில் விளையாட்டு அரங்குகள்


தமிழகத்தில் 20 மாவட்டங்களில் ரூ.30 கோடி செலவில் விளையாட்டு அரங்குகள்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
 1/1 

சென்னை, ஜன.29 - இளைய சமூகத்தின் மத்தியில் விளையாட்டு துறையை மேம்படுத்த பல்நோக்கு நடவடிக்கைகளை எடுக்கும் முதல்வர் ஜெயலலிதா முதற்கட்டமாக திருச்சி, மதுரை உள்விளையாட்டு அரங்கை அமைக்க நிதியை ஒதுக்கியுள்ளார். மேலும் 20 மாவட்டங்களில் உள்விளையாட்டு அரங்குகளை அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா என்ற பாரதியின் கூற்றுப்படி, ஒவ்வொருவருக்கும் படிப்பும், விளையாட்டும் இரண்டு கண்களாகும்.  படிப்பு, அறிவை வளர்க்கும்;  விளையாட்டு, உடல் நலத்தை காக்கும்; என்பதை உணர்ந்து கல்வி, விளையாட்டு என்ற இரண்டிலும் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதன் மூலம் அறிவார்ந்த ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாகும். இதன் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கல்வியைப் போல, விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில், கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில், திருச்சி, திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் கால்வாலியம் செயற்கை தகடுகளான மேற்கூரை வசதியுடன் கூடிய கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து விளையாட்டு மைதானங்கள், 1 கோடியே 50 லட்சம் ரூபாயில், அதாவது ஒவ்வொரு இடத்திலும் 50 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், மதுரையில் பன்னாட்டு தரம் வாய்ந்த செயற்கை இழை ஹாக்கி மைதானம், நீர்தெளிப்பான், மூடிய வடிகால் வசதி மற்றும் மின்னொளி வசதியுடன் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாநகரில் தடகளப் போட்டியினை ஊக்குவிக்க, 8 ஓடுகளப் பாதைகளுடன் கூடிய செயற்கை இழையிலான தடகள ஒடுபாதை, மூடிய வடிகால் வசதி மற்றும் மின்னொளி வசதியுடன் 6 கோடி ரூபாயில் செலவில் உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
முதலமைச்சர் கோப்பைக்காக, மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடை பந்து, கால்பந்து, ஹாக்கி , கபாடி மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகள் 4 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
உலகத் திறனாளர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் 3,240 இளம் விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி வாகை சூட ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் 6,000/​  ரூபாய் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இத் திட்டத்திற்கு 1 கோடியே 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்.   தற்போது உலக அளவில் அனைத்து விளையாட்டுகளும், செயற்கை தளங்களில் உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கிலும் நடைபெற்று வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு உலகத் தரம் வாய்ந்த செயற்கை தளங்கள் அமைக்க மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் பல்வேறு விளையாட்டுக்களை மேம்படுத்தி, பல்வேறு இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணிக்காக முதற்கட்டமாக 8 வாகனங்களை 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்குவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
மாவட்டங்களில் பல்வேறு விளையாட்டுகளில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திறனை வளர்பபதற்கு பல்நோக்கு வசதிகள் கொண்ட விளையாட்டு அரங்கங்களை அமைப்பது மிகவும் அவசியம்.  எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 30 கோடி ரூபாய் செலவில் பார்வையாளர்களுக்கான இருக்கை வசதி, மரத்தாலான தரைத்தளம் மற்றும் மின்வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய உள் விளையாட்டு அரங்கங்களை 20 மாவட்டங்களில் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள்.   முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இவ்விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் தற்போது 9 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.  இந்த விளையாட்டு விடுதிகள் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்க இயலாத சூழ்நிலை உள்ளது.  இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு விளையாட்டு விடுதி வீதம், 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகளை அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  ஆணையிட்டுள்ளார்கள். இதன்படி, ஒவ்வொரு விளையாட்டு விடுதியிலும் 60 மாணவ, மாணவியருக்கு உயர்தர பயிற்சி அளிக்கப்படும்.  இவர்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் இதர வசதிகள் அனைத்தும் வழங்கப்படும்.  முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும்.  இதற்காக அரசுக்கு 3 கோடி ரூபாய் தொடரா செலவினமும், 1 கோடியே 15 லட்சம் ரூபாய் தொடர் செலவினமும் ஏற்படும்.
மேற்கூறிய, அரசின் பல்நோக்கு நடவடிக்கைகளினால், தமிழகத்தில்  விளையாட்டுத்துறை ஒரு புதிய சகாப்தம் படைக்கும் என்று சொன்னால் மிகையாகாது. இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள்: சுப்ரீம் கோர்ட் வேதனை


ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள்: சுப்ரீம் கோர்ட் வேதனை
 1/1 

புது டெல்லி, ஜன.29 - பட்டதாரி பெண்களும், நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்களும் பணத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதாக சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது. விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அல்டமஸ் கபீர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவை சேர்ந்த வழக்கறிஞர்களை பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது நீதிபதிகள் கூறுகையில், 
இன்றைய தினம் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் பயிலும் பட்டதாரிகள் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதை காண்கிறோம். அவர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அத்தகைய பெண்களின் மறுவாழ்வுக்காக நாம் எத்தனையோ கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துகிறோம். ஆனால் அத்துடன் அந்த பிரச்சினையை முடித்துக் கொள்கிறோம். உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஏதாவது நடவடிக்கை எடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அது நமது மனசாட்சிக்கு திருப்தியாக அமைய வேண்டும். வெறும் கண்துடைப்பாக அமைந்து விடக் கூடாது. எனவே மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றனர். மேலும் வக்கீல்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரை கொண்ட சிறப்பு கமிட்டி செயல்பட சட்ட கமிஷன் அலுவலகத்தில் 3 வாரங்களுக்குள் இடம் ஒதுக்குமாறு கூடுதல் அட்டர்னி ஜெனரல் பி.பி. மல்கோத்ராவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சனி, ஜனவரி 28, 2012

ராமர் கோயில் பிரச்சினையை மீண்டும் எழுப்பும் பா.ஜ.


உ.பி. சட்டசபை தேர்தலையொட்டி ராமர் கோயில் பிரச்சினையை பா.ஜ. மீண்டும் எழுப்புகிறது
 1/1 

லக்னோ,ஜன.29 - உத்திரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலையொட்டி ராமர் கோயில் பிரச்சினையை பாரதிய ஜனதா மீண்டும் எழுப்புகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று உறுதி அளித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பெரிய மாநிலமாக இருக்கும் உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிர, பாரதியஜனதா,சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆட்சியை பிடிப்பதற்காக அரசியல் கட்சிகள் உறுதிமொழியை அள்ளிவீசி வருகின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இழந்த செல்வாக்கை பிடிக்க பாரதிய ஜனதாவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் ராமர்கோயில் கட்டாயம் கட்டுவோம் என்று அந்த கட்சி சார்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 1980-ம் ஆண்டுகள் மற்றும் 90-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு இருந்தது. மாநிலத்தில் தனியாகவும் கூட்டணியாகவும் ஆட்சி செய்தது. இதனால் இந்திய அரசியலில் பாரதிய ஜனதா முக்கிய பங்கு வகிக்க முடிந்தது. ராமர்கோயில் கட்ட வேண்டும் என்பது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையுடனானது. ராமா என்ற சின்னம் நாட்டின் கெளரவும் மற்றும் கண்ணியம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். ராமர் என்றாலே இந்தியாவுக்கும் இந்து மதத்திற்கும் பெரும் கெளரவமாகும். போலி மதசார்ப்பற்ற தன்மையாலும் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதாலும் ராமர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தடைகளையும் நீக்கி ராமர் கோயில் கட்டுவதில் பாரதிய ஜனதா உறுதியாக இருக்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லக்னோவில் உள்ள பாரதிய ஜனதா மாநில தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவர்களான உமாபாரதி, கல்ராஜ் மிஸ்ரா, முஹ்தர் அப்பாஸ் நக்வி, நரேந்திர சிங் தோமர், சுதீந்திர குல்கர்னி,சூர்யா பிரதாப் சாஹி ஆகியோர் சேர்ந்து வெளியிட்டனர். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்விகள் கேட்டதற்கு பதில் அளித்த சாஹி, நாட்டு மக்களின் வாழ்க்கை ஆதராமே இந்துமதம் என்று எங்கள் கட்சியின் கருத்தாகும். ஆனால் ஓட்டு வங்கிக்காக் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், இடதுசாரி கட்சிகள் எதிர்த்து வருகின்றன என்றார். மத ரீதியாக இடஒதுக்கீடு செய்வதை பாரதிய ஜனதா கடுமையாக எதிர்க்கிறது என்று மாநில பா.ஜ. தலைவர் ஓம் பிரகாஷ் சிங் பேட்டி அளிக்கையில் கூறினார்.

தானே புயல் நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்கள் விபரம்


தானே புயல் நிவாரண நிதி: முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கிய அமைச்சர்கள், பிரமுகர்கள் விபரம்: இதுவரை ரூ.52 கோடி குவிந்தது
 1/1 

சென்னை, ஜன.28 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், கடந்த 30.12.2011 அன்று தமிழகத்தை தாக்கிய தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் நிதிகளை வழங்கினர்.  தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன், தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின்தொடர் அமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக 8 கோடி ரூபாய் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சார்பாக 7 கோடி ரூபாய், என மொத்தம் 15 கோடி ரூபாயை வழங்கினார். 
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக 3 கோடியே 33 லட்சத்து 6 ஆயிரத்து 142 ரூபாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக 1 கோடியே 65 லட்சத்து 7 ஆயிரத்து 37 ரூபாய், என மொத்தம் 4 கோடியே 98 லட்சத்து 13 ஆயிரத்து 179 ரூபாயை வழங்கினார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  கூட்டுறவுத்துறை மற்றும் கூட்டுறவுத் துறை நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளமான 5 கோடியே 59 லட்சம் ரூபாயை வழங்கினார்.கோயம்புத்தூர் மாநகராட்சி ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் செ.ம. வேலுச்சாமியின் சொந்த பங்களிப்பான 5 லட்சம் ரூபாயுடன் சேர்த்து, மொத்தம் 27 லட்சத்து 44 ஆயிரத்து 733 ரூபாயை மேயர் வேலுச்சாமி வழங்கினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும் செட்டிநாடு குழுமத்தின் தலைவருமான எம்.ஏ.எம்.இராமசாமியின் சொந்த பங்களிப்பான 1 கோடி ரூபாயும் சேர்த்து மொத்தம் 2 கோடியே 8 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.
வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் ​ 10 லட்சம் ரூபாய், திரைப்பட நடிகர்  ரஜினிகாந்த் ​ 10 லட்சம் ரூபாயையும் வழங்கினர்.  தமிழக முதலமைச்சரிடம், தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 28 கோடியே 4 லட்சத்து 65 ஆயிரத்து 912 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று அளிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 52 கோடியே 41 லட்சத்து 89 ஆயிரத்து 451 ரூபாயாகும்.

முதல்வர் சார்பில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு


சென்னை நீதி மன்றத்தில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு: முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு வக்கீல் தொடர்ந்தார்
 1/1 

சென்னை, ஜன.28 - சென்னை நீதிமன்றத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சென்னை நகர அரசு குற்றவியல் வக்கீல் எம்.எல்.ஜெகன் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. சென்னை தேனாம் பேட்டையைச் சேர்ந்த சேஷாத்திரி குமார் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது மகன் உதய நிதி ஸ்டாலின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த புகார் தொடர்பாக கடந்த 2.12.2011 அன்று மு.க.ஸ்டாலின் போலீஸ் டி.ஜி.பிக்கு புகார் மனு கொடுத்துள்ளார்.
அப்பொழுது செய்தியாளர்கள் நடுவில் பேட்டி அளித்த ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார். கொட நாடு சிறுதாவூர் நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் உண்மையான நில ஆக்கிரமிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் முதல்வர் ஜெயலலிதா மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகார் பொய்யானது எனத் தெரிந்திருத்தும் முதல்வர் மீது ஸ்டாலின் பொய் புகார் கொடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பேட்டி கொடுத்துள்ளார்.
தமிழக முதல்வருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை இந்த புகார் மற்றும் பேட்டி ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியானது பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அவதூறு பேட்டி கொடுத்த மு.க.ஸ்டாலினை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

வெள்ளி, ஜனவரி 27, 2012

வேகத்தை அதிகரிக்க தங்க ரயில் பாதை பணிகள் ஆரம்பம்


ரயில்களின வேகத்தை அதிகரிக்கும் தங்க ரயில் பாதை பணிகள் ஆரம்பம்
 1/1 
புதுடெல்லி,ஜன.26 - மும்பை-புதுடெல்லி இடையே ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் தங்க ரயில்பாதை திட்டப்பணிகள் தொடங்கின. இந்த பணிகளை இந்தியாவும் ஜப்பானும் சேர்ந்து செயல்படுத்த உள்ளன.  உலக அளவில் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுவும் அந்த பணிகள் அவசரகால பணிகளாக உள்ளன. இதை சமாளிக்க போக்குவரத்து நேரத்தை குறைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ரயில்கள் செல்லும் வேகத்தை அதிகரிக்கும் பணியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டுள்ளன. சீனாவில் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்கள் விடப்பட்டுள்ளன. அதேமாதிரி ஜப்பானில் அதிவேகமாக செல்லும் ரயில்கள் உள்ளன. அதேமாதிரி இந்தியாவிலும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க செய்யும் பணியில் ஜப்பானுடன் இந்தியா சேர்ந்து செயல்படுத்த உள்ளன. இதன் முதல் கட்டமாக மும்பையில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் ரயில்களின் வேகத்தை முதலில் தற்போதுள்ள ரயில்பாதைகளிலேயே அதிகரிப்பதற்கான பணி தொடங்கப்பட்டுவிட்டது என்று இந்திய ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ஜப்பானுடன் சேர்ந்து தங்க ரயில்பாதை திட்டம் என்ற பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் மும்பையில் இருந்து டெல்லிக்கு 160 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலை இருக்கும் ரயில்பாதையிலேயே விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக மின்சாரத்தில் ஓடும் ரயில் எஞ்ஜின் மற்றும் பெட்டிகளை ஜப்பானில் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக இருக்கும் ரயில்பாதைகள் மாற்றப்பட்டு ரயில்கள் வேகமாக செல்லும்படி ரயில்பாதைகள் அமைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார். தற்போது மும்பையில் இருந்து புதுடெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேகமாக செல்லும் ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.

வியாழன், ஜனவரி 26, 2012

குடியரசு விழா: விருந்தினரான ஆசியாவின் 4-வது தலைவர்


குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆசியாவின் 4-வது தலைவர்
 1/1 
புதுடெல்லி,ஜன.27 - இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக ஆசியா கண்டத்தில் இதுவரை 4 தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவின் முதல் சுதந்திர தினம் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் வெளிநாட்டு தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவின் 63-வது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பில் கலந்துகொண்டு பார்வையிட தாய்லாந்து நாட்டு பெண் பிரதமர் யிங்லுக் ஷினவத்ரா கலந்துகொண்டார். தாய்லாந்து நாட்டில் இருந்து கலந்துகொண்ட முதல் பெண் பிரதமர் இவர்தான். இந்திய குடியரசு தின விழாவில் இதுவரை 3 பெண் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 1961-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதனையடுத்து 1974-ம் ஆண்டு இலங்கை பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தாய்லாந்து பிரதமர் யிங்லுக் ஷினவத்ராவுக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாத்திற்கு ஜனாதிபதி பிரதீபாட்டீலுடன் யிங்லுக் வந்தார். அவரை முக்கிய பிரமுகர்கள் இடத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நமஸ்தே கூறி வரவேற்றார். யிங்லுக்வும் பதிலுக்கு நமஸ்தே கூறினார்.

மதுரையில் ரூ.80 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்


ரூ.80 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்: தேசிய கொடியை ஏற்றி வைத்து மேயர் ராஜன்செல்லப்பா அறிவிப்பு
 1/1 

மதுரை,ஜன.27 - மதுரை மாநகராட்சி நடந்த குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசிய மேயர் ராஜன்செல்லப்பா ரூ.80 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.  மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. காலை 9 மணிக்கு மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாநகராட்சி பள்ளியில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மேயர் ராஜன்செல்லப்பா பேசியதாவது, தமிழக முதல்வர் அம்மா தலைமையிலான மக்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொலை நோக்குடன் நிறைவேற்றி வருகிறது. மதுரை மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 2வது பெரிய மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி உருவாகி உள்ளது. மதுரை மாநகரில் 15 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். முதல்வர் அம்மாவின் ஆலோசனைப்படி மதுரை மாநகராட்சியின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக திடக்கழிவு மேலாண்மைக்காக ரூ.40 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.10 கோடி முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
    நகரில் தெருவிளக்குகள் அமைக்க ரூ.10கோடியும், நகரின் சாலைகளை சீரமைக்க முதலில் ரூ.15கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் 43 இடங்களில் புதிய கழிப்பறைகளை கட்டவும், 52 இடங்களில் கழிப்பறைகளை மராமத்து செய்யவும் 470 குடியிரிப்புக்களில் ரூ.8 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க பெரியார் பஸ்நிலையம், ஜான்சிராணி பூங்கா அருகில் ரூ.80 கோடி செலவில் அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே தனியார் பஸ்களை நிறுத்த ரூ.70 கோடியிலும், கோரிப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ.70  கோடியிலும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
    விழாவில் மாநகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன், எம்எல்ஏக்கள் அண்ணாதுரை, சுந்தர்ராஜன், மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, மு.இராஜபாண்டியன், கே.ஜெயவேல், கே.ராஜபாண்டியன்,கல்வி குழுத்தலைவர் சுகந்தி அசோக் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழச்சிகள் நடைபெற்றது.

ஆஸ்கார் விருது பட்டியலில் டேம் 999-க்கு இடமில்லை


ஆஸ்கார் விருது பட்டியலில் டேம் 999-க்கு இடமில்லை
 1/1 
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜன. 26 - ஆஸ்கார் விருதுக்காக இந்தியாவில் இருந்து சென்ற சோகன்ராயின் டேம் 999 படம் பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை. முல்லை பெரியாறு அணை குறித்து தேவையில்லாமல் பீதியை கிளப்பும் வகையில் கேரளாவை சேர்ந்த சோகன்ராய் எடுத்து வெளியிட்ட படம்தான் இது. வெளிநாட்டுவாழ் மலையாளிகளின் நிதியுதவியுடனும், கேரள அரசின் ஆதரவோடும் இந்த படத்தை அவர் உருவாக்கி இருந்தார். 84 வது ஆஸ்கார் விருது போட்டியில் இந்த படமும் கலந்து கொண்டது. இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள கோல்டுவின் தியேட்டரில் ஆஸ்கார் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் டேம் 999 இல்லை. அணை உடைந்து பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவது போன்று எடுக்கப்பட்ட படம் டேம் 999. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த படம் தமிழகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது. சிறந்த படம், பாடல்கள் மற்றும் ஒரிஜினல் இசை ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இறுதி பட்டியலில் இடம் பெறத் தவறியதால் சோகன்ராயின் ஆஸ்கார் கனவு பொய்த்து விட்டது.

ஜப்பானிய வர்த்தகக் குழு முதல்வருடன் சந்திப்பு


ஜப்பானிய வர்த்தகக் குழு முதல்வருடன் சந்திப்பு
 1/1 
சென்னை, ஜன.26 - ஜப்பானிய வர்த்தகக் குழுவினர் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சென்னைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.இந்திய ஜப்பானிய வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் தலைவர் நோபுயா ஒகாஷி தலைமையிலான குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த போது, தமிழகத்தில் அன்னிய முதலீடுகள் பெருக அதிக வாய்ப்புள்ள சூழலை உருவாக்கியதற்குப் பாராட்டுத் தெரிவித்தார். ஜப்பானில் உள்ள பெருமளவு சிறிய நடுத்தர ரக தொழிலகங்கள், அதிக அளவில் முதலீடு செய்வதற்கான ஒரு மாநிலமாக தமிழகத்தைக் கருதுகின்றனர் என்றும், ஜப்பானிய வர்த்தகக் குழு இங்குள்ள தொழில் பேட்டைகளைக் கண்டதுடன், தொழில் அதிபர்களையும் சந்தித்துப் பேசி திருப்தி அடைந்ததாகவும் முதல்வரிடம் ஒகாஷி தெரிவித்தார்.
மேலும், ஜப்பானிய தொழில் முதலீட்டுக்கு உரிய ஆதரவை தமிழக முதல்வர் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்குப் பதிலளித்த முதல்வர், அதற்கு நன்றி தெரிவித்ததுடன், தமிழகத்தில் சர்வதேச தரத்திற்கு ஈடாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு நோக்கமாகக் கொண்டு இருக்கிறது என்றும், ஜப்பானிய முதலீடுகளை தமிழகம் வரவேற்க தயாராயிருக்கிறது என்றும், தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றும் உறுதி கூறினார்.
இதற்கு ஜப்பானியக் குழுவின் சார்பில் ஒகாஷி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

புதன், ஜனவரி 25, 2012

சென்னை அருகே நீர் தேக்கம் அமைக்க ரூ.330 கோடி


சென்னை அருகே புதிய நீர் தேக்கம் அமைக்க ரூ.330 கோடி ஒப்புதல்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
 1/1 

சென்னை,ஜன.25 - சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய நீர் தேக்கம் ஒன்றை அமைக்க ரூ. 330 கோடி, முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்க செறிவு நீர்த் துளைகள் அமைக்கும் திட்டத்திற்காக 11.49 கோடி ரூபாய்க்கும் ஒப்புதல் வழங்கி உத்திரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீரின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு குடிநீர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மேலும்,  மழைக்காலத்தில் கிடைக்கும் உபரி நீர் மற்றும் கிருஷ்ணா குடிநீர்த் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அதிகப்படியான நீரை தேக்கி வைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்ண்டி வட்டம் கண்ணன் கோட்டை மற்றும் தேர்வைகண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளான கண்ணன் கோட்டை மற்றும் தேர்வைகண்டிகையை இணைத்து 330 கோடி ரூபாய் செலவில் ஒரு நீர்த்தேக்கம் அமைக்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீரை இருமுறை நிரப்புவதன் மூலம் ஓராயிரம் மில்லியன் கன அடி (1.00 பஙஇ) தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.   புதியதாக அமைக்கப்பட உள்ள இந்த நீர்த்தேக்கம் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்ண்டி வட்டம் பாலவாக்கத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும், ஊத்துக் கோட்டை கிராமத்திலிருந்து 14 கி.மீ தொலைவிலும் அமையப்பெறும்.  
இதே போன்று, கண்டலேறு ண்டி கால்வாய் நெடுகை 0 மீட்டரிலிருந்து 6,800 மீட்டர் வரை ஒரு மண் அணை அமைக்கப்படும்.   மேலும் கண்டலேறு ண்டி கால்வாய் நெடுகை 900 மீட்டரிலிருந்து 7,500 மீட்டர் நீளத்தில் கால்வாய் ஒன்று அமைக்கப்படும்.  இந்தக் கால்வாய் தாமரைக்குப்பம், செஞ்சி, அகரம், பள்ளிக்குப்பம் கிராமங்கள் மற்றும் பள்ளிக்குப்பம் காப்பு வனத்தின் வழியாக செல்லும்.  இந்தக் கால்வாய் ஆந்திர மாநில நீர்பிடிப்பு பகுதியிலிருந்து கிடைக்கப் பெறும் நீரினை எடுத்துச் செல்கின்ற வகையில் அமைக்கப்படும்.  மேலும், நெடுகை 4,125 மீட்டரில் உபரிநீர் வழிந்தோடியும்,  நீரின் போக்கை சீராக்க சமநிலைப் பொறிகளும் அமைக்கப்படும்.   
இத்திட்டத்திற்காக 560.05 ஏக்கர் அரசு நிலம் உள்ளிட்ட 1,252.47 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும். இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுக் காலத்தில் முடிவு பெறும்.  இதன் மூலம் மழைக்காலத்தில் கடலில் வீணாக கலக்கும் உபரி நீர் தேக்கி வைக்கப்பட்டு, மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்.
தற்பொழுது அதிக பயன்பாட்டின் காரணமாக, நிலத்தடி நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.  எனவே நிலத்தடி நீரின் அளவினை அதிகரிக்க,  செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  இத் திட்டத்தின் கீழ் ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஒடைகளின் குறுக்கே தடுப்பணைகள், ஊருணிகள் ஆகியவை அமைக்கப்பட்டு செயற்கை முறையில் நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது.   இத்திட்டத்தின் கீழ் , தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும் பாபநாசம் வட்டங்களில் செயற்கை முறையில் செறிவு நீர் துளைகள் அமைக்க, 63 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயும், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் மன்னார்குடி வட்டங்களில் செயற்கை முறையில் செறிவு நீர் துளைகள் அமைக்க,  1 கோடியே 55 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும்,  கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டு துளை கிணறுகள் அமைக்க, 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும்,   தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டத்திலுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டு துளை கிணறுகள் அமைக்க, 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும்,  திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், போளூர் வட்டம், செங்கம் வட்டம், ஆகிய பகுதிகளில்  செய்யாற்றின் குறுக்கே கீழ்மட்ட தடுப்பு சுவர் அமைக்க 3 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 5 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கி, நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் கொல்லப்பள்ளி கிராமத்தில் பொன்னையாற்றின் குறுக்கே கீழ் மட்ட நிலத்தடி தடுப்புச் சுவர் அமைக்க, 1 கோடியே 90 லட்சம் ரூபாயும், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம்,  கொருக்காத்தூர் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே கீழ்மட்ட நிலத்தடி தடுப்புச் சுவர் அமைக்க,  2 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சார்ந்த 41 கிராமங்களில் உள்ள முறை சார்ந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செயற்கை முறையில் 100 செறிவுநீர் துளைகள் அமைக்கும் திட்டத்திற்கு 2 கோடியே 5 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 6 கோடியே 16 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப் பணிகளுக்காக மொத்தம் 11 கோடியே 49 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேற்கூறிய நடவடிக்கைகளினால் தமிழகத்தில் நீர்வள ஆதார அமைப்புகளில், நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்கும்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.