வெள்ளி, அக்டோபர் 19, 2012

காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நெருங்குகிறது


சென்னை,அக்.20 - வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினத்திலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-​ வங்க கடலில் நேற்று (நேற்று முன்தினம்) தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று மேற்கு நோக்கி நகர்ந்தது. அது தென்மேற்கு வங்க கடல் முதல் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் வரை டிக்கிறது. அதாவது இலங்கை, தமிழ்நாடு, ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் இன்று (நேற்று) காலை முதல் நிலை கொண்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். உள்மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் பலத்த மழை பெய்யும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். தற்போது இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை அருகே உள்ளது. அது அப்படியே மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அப்போது மன்னார் வளைகுடா பகுதியை கடந்துதான் கரைக்கு வரும். அந்த சமயத்தில் மிக பலத்த மழை பெய்யும். கடந்த கால பதிவுகளை வைத்து பார்க்கும்போது காற்றழுத்த தாழ்வு நிலையானது, மன்னார் வளைகுடா பகுதியில் கடக்கும் போதும், அந்த பகுதியில் நிலை கொண்டு நீடிக்கும் போதும் மிக, மிக பலத்த மழை பெய்யும். எனவே அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். சென்னையை பொறுத்த வரை 2 நாட்களுக்கு விட்டு, விட்டு மழை பெய்யும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இன்று காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக மரக்காணத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.கல்பாக்கத்தில் 11 செ.மீ., கடலூரில் 8 செ.மீ., செங்கல்பட்டு, மகாபலிபுரம், சீர்காழியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. சிதம்பரம், சோழவரம், ராமேசுவரம், ராமநாதபுரத்தில் 6 செ.மீ., உத்தரமேரூர், கேளம்பாக்கம், திருத்துறைப் ண்டி, திருச்செந்தூர், விருத்தாச்சலத்தில் 5 செ.மீ., மீனம்பாக்கத்தில் 3 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது. மழை பெய்யும்போது திடீரென பயங்கர சத்தத்துடன் இடி தாக்குகிறது. இதில் சில இடங்களில் உயிரிழப்பு ஏற்படுவதுடன் வீடுகளும் சேதம் அடைகிறது. இடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வெட்ட வெளியில் நிற்க கூடாது. ஒற்றை மரத்தின் கீழ் நிற்க கூடாது. நிறைய மரங்கள் இருந்து அதில் உயரமான மரத்தின் கீழும் நிற்க கூடாது. மழை பெய்யும்போது வீட்டில் இருப்பது நல்லது. வீடுகளில் மழை பெய்யும்போது தொடர்ந்து டி.வி. பார்க்காமல் இருப்பது நல்லது. உயரமான வீடுகளாக இருந்தால் இடிதாங்கி வைப்பது அவசியம் ஒரு வீட்டில் இடிதாங்கி இருந்தால் அது அந்த வீட்டை மட்டுமே காப்பாற்றும். மற்ற வீடுகளை காப்பாற்றாது. இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், அக்டோபர் 16, 2012

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு ஏர் ஏசியா கூடுதல் விமான சேவை


திருச்சி, : திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவையை ஏர் ஏசியா விமான நிறுவனம் நேற்று முதல் துவக்கியது. திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு இந்திய அரசின் அரசு நிறுவனமான ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முதன் முதலாக விமான போக்குவரத்தை துவக்கியது. அதன் பின்னர் மலேசியா நிறுவனமான ஏர்-ஏசியாவும் திருச்சி-மலேசியா இடையே போக்குவரத்தை துவக்கியது. இரு விமான நிறுவனங்களும் தினசரி தலா இரு டிரிப்புகளை இயக்கின. திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாட்டு பயணிகள் கூட்டம் அதிகளவில் வந்து செல்வதால், இந்த போக்குவரத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. நிர்வாக கோளாறு காரணமாக ஏர் இந்தியா நிறுவனமும் படிப்படியாக விமானப் போக்குவரத்தை குறைத்து, பின்னர் முற்றிலுமாக ரத்து செய்து விட்டது. அதன்பின் ஏர்- ஏசியா நிறுவனம் ஒரு சர்வீசை ரத்து செய்தது. இதனால் மலேசியா செல்ல பயணிகள் சிரமப்பட்டனர். டிக்கெட் கட்டணமும் பலமடங்கு எகிறியது. இந்நிலையில் ஏர்-ஏசியா விமான நிறுவனம் மலேசியாவுக்கு கூடுதல் விமானங்களை மீண்டும் இயக்க திட்டமிட்டது. அக்டோபர் 15ம் தேதி முதல் கூடுதல் போக்குவரத்து துவங்கும் எனவும் அறிவித்திருந் தது. அதன்படி நேற்று முதல் கூடுதல் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. முதல் டிரிப் பில் மலேசியாவிலிருந்து 140 பயணிகள் திருச்சி வந்தனர். திருச்சியிலிருந்து 120 பேர் மலேசியா சென்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா நிலைய மேலாளர் டேவிட் தலைமையில் ஊழியர்கள் பயணிகளை வரவேற்றனர். வார நாட்களில் திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இந்த விமானம் பிற்பகல் 4 மணிக்கு திருச்சி வந்து 4.30க்கு மீண்டும் மலேசியா (கோலாலம்பூர்) புறப்பட்டுச் செல்லும். பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு திருச்சி-மலேசியா இடையே விமான டிக்கெட்டுகள் கிடைக்காத காரணத்தினால், திருச்சி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பயணிகள் பலரும் சிங்கப்பூர் சென்று திருச்சி வந்தனர். அல்லது மலேசியாவிலிருந்து சென்னை சென்று அதன்பின் திருச்சிக்கு சாலை அல்லது ரயில் மார்க்கமாக வந்து சென்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் ஏர் ஏசியா நிறுவனம் கூடுதல் சேவையை திருச்சிக்கு வழங்கியிருப்பது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல சிங்கப்பூர் திருச்சி இடையே டைகர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களும் கூடுதல் போக்குவரத்தை விரைவில் துவக்கவுள்ளன. இதன் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை விகிதம் மீண்டும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.