திங்கள், ஏப்ரல் 30, 2012

நேபாளத்தின் தெற்கு பகுதியில் குண்டு வெடித்து 4 பேர் பலி

காத்மாண்டு, மே - 1- நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள நகரில் சுறுசுறுப்பான சந்தை பகுதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 4 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தெற்கு பகுதியில் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ஜனக்பூர் என்ற நகரில் நேற்று காலை ஒரு மார்க்கெட் பகுதி சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அந்த சந்தையில் திரளாக கூடியிருந்தனர். அப்போது திடீர் என்று பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடித்ததில் 4 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்நகரில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. வெடி குண்டு வெடித்ததையும் 4 பேர் பலியானதையும் நேபாள போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த வெடி குண்டு யாரால் வைக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இச்சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

2 ஏர் இந்தியா விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கம்- விபத்துகள் தவிர்ப்பு

சென்னை: எரிபொருள் கசிவு காரணமாக ஏர் இந்தியா விமானம் சென்னையில் இன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இன்று காலை சென்னையில் இருந்து 106 பயணிகள், 5 சிப்பந்திகளுடன் கொச்சிக்கு சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் (எண் AI 520) நடுவானில் எரிபொருள் கசிவதை விமானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து உடனடியாக சென்னைக்கே விமானத்தைத் திருப்பிய விமானிகள் அதை அவசரமாகத் தரையிறக்கினர். பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் கொச்சிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா துபாய் விமானம்: அதே போல கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானம் 148 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் காலை 10 மணிக்கு புறப்பட்டது. அப்போது விமானத்தின் வலது பக்க என்ஜின் அருகே இறக்கையில் பறவை மோதியது. இதில் என்ஜினின் இரு பிளேடுகள் சேதமடைந்துவிட்டன. இதையடுத்து விமானத்தில் இருந்த எரிபொருள் அனைத்தும் கடலில் கொட்டப்பட்டு அடுத்த 40 நிமிடங்களில் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு விமானத்தில் துபாய் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு!

புது டெல்லி, ஏப். 27 - பிரிட்டன் சென்று படித்த பின் அங்கேயே தங்கி பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு விசா வழங்க அந்நாடு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பான தகவல் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் டி. புரந்தேஸ்வரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு: முன்பு பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்கள் படிப்பு முடித்த பின் அங்கேயே தங்கி பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை ஏப்ரல் மாதம் 6 ம் தேதியுடன் முடிவுக்கு வந்து விட்டது. எதிர்காலத்தில் பிரிட்டன் செல்லும் மாணவர்கள் அங்கு பணியாற்றவும் விரும்பினால் தாங்கள் படிப்புக்காக பெற்றுள்ள விசா காலாவதியாகும் முன்பே தங்களுக்கு பணி அளிக்கும் நிறுவனத்திடம் இருந்து சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்கள் அங்கு படிப்பு முடித்து பணியாற்ற முடியும் என்று தெரிவித்தார். தங்கள் நாட்டில் வந்து பணியாற்றும் வெளிநாட்டு மாணவர்களை கட்டுப்படுத்தும் வகையில் பிரிட்டன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மதுரை - கொழும்பு விமான சேவை: மத்தியரசு ஒப்புதல்

புது டெல்லி, ஏப். 27 - மதுரை - கொழும்பு இடையே முதலாவது சர்வதேச பயணிகள் விமான சேவையை தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித்சிங் கூறியதாக விருதுநகர் எம்.பி. மாணிக்தாகூர் நிருபர்களிடம் தெரிவித்தார். சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்ல வசதியாக ஓடுதளம் விரிவுபடுத்தப்பட்டு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மதுரை விமான நிலையத்தை சுங்க விமான நிலையம்(கஸ்டம்ஸ் நோட்டிஃபைடு ஏர்போர்ட்) என கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் மாணிக்தாகூர், விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. ராம்பாபு உள்ளிட்டோர் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங்கை சந்தித்து பேசி வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே சர்வதேச பயணிகள் சேவையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய மதுரைக்கு வல்லுனர் குழு அனுப்பி வைக்கப்படும் என்று ஏர் இந்தியா விமான நிறுவன தலைவர் ரோஹித் நந்தன் தெரிவித்தார். டெல்லியில் அவரை முன்னாள் எம்.பி. ராம்பாபு, மதுரை டிராவல்ஸ் கிளப் தலைவர் முஸ்தபா, முன்னாள் தலைவர்கள் வாசுதேவன், ஸ்ரீராம் ஆகியோர் சந்தித்தனர். அப்போது இந்த தகவலை ரோஹித் நந்தன் தெரிவித்துள்ளார்.

வியாழன், ஏப்ரல் 26, 2012

”இலங்கைத் தூதரகம் முற்றுகை ” - இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு !

சென்னை - இலங்கையின் தம்புல்ல ஜும்மா மசூதி தகர்க்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனை கண்டிக்கும் விதமாக வரும் சனிக்கிழமை (28/04/12) மாலை இலங்கை தூதரகத்தை முற்றுகையிட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. இது பற்றி அதன் பொது செயலாளர் இக்பால் தெரிவிக்கையில்,”கடந்த சில வருடங்களாகவே இலங்கையில் இஸ்லாமியர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் முதல் படியாக கடந்த சில மாதங்களுக்கு முன் அங்குள்ள தர்காவை தகர்த்துள்ளனர். அதனைக் கண்டிக்காமல் விட்டதின் காரணத்தால் புத்தபிக்குகளின் புனித பூமி என கூறி இன்று தம்புல்ல தொழுகை பள்ளியை தகர்த்துள்ளனர். இதனைக் கண்டிக்கும் விதமாக மாபெரும் முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளோம்” என்றார் .

”குடிமகன்களால் வருமானம் 18 ஆயிரம் கோடி”

2011 - 2012 ஆண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு கிடைத்திருப்பதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த வருமானத்தை மேலும் பெருக்கிட எலைட் என்ற உயர்ரக மதுவகைகள் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீது அமைச்சர் நத்தம் விசுவநாதன் கொள்கை விளக்கக் குறிப்புகளை சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபான விற்பனையை தனியார் விற்பனை செய்து வந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கு பதிலாக சில்லரை விற்பனை செய்யும் உரிமையை அரசுக்கு முழுவதும் சொந்த நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்துக்கு வழங்குவது என்று 2003-ம் ஆண்டு துணிச்சலான முடிவை அ.தி.மு.க., அரசு எடுத்தது. இதன்மூலம் தனியார் செய்து வந்த தீர்வை செலுத்தப்படாத மதுபான விற்பனை தடுக்கப்பட்டு அரசு வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது குறித்த விவரம் வருமாறு: ரூ.3 ஆயிரத்து 639.93 கோடி ( 2003-2004) , ரூ.4ஆயிரத்து 872.03 கோடி ( 2004-2005 ) , ரூ.6 ஆயிரத்து 030.77 கோடி( 2005-2006), ரூ.7ஆயிரத்து 473.61 கோடி ( 2006-2007) , ரூ.8 ஆயிரத்து 821.16 கோடி (2007-2008 ), ரூ.10 ஆயிரத்து 601.50 கோடி ( 2008-2009 ) , ரூ.12 ஆயிரத்து 498.22 கோடி( 2009-2010 ) , ரூ.14 ஆயிரத்து 965.42 கோடி ( 2010-2011 ) , ரூ.18 ஆயிரத்து 081.16 கோடி (2011-2012 ) மொத்த வருவாய் கிடைத்துள்ளது. எனவே உயர்தர மதுபானம் தயாரிக்க தேவைப்படும் சாராவி தயாரிக்கும் வடிப்பாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசாட்-1 செயற்கைக் கோள் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை, ஏப். 26 - பனி, மழை போன்ற பருவ காலத்திலும் துல்லியமாக படங்களை எடுத்து தரும் ரிசாட் - 1 செயற்கைக் கோள் பி.எஸ்.எல்.வி. சி - 19 ராக்கெட் மூலம் இன்று காலை 5.47 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான 71 மணி நேர கவுன்ட் டவுன் திங்கட்கிழமை காலை 6.47 மணிக்கு தொடங்கியது. ராக்கெட்டை ஏவுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக இஸ்ரே அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போது பனி அதிகமுள்ள காலங்களில் தெளிவான படங்களை பெற வேண்டுமானால் கனடா நாட்டின் செயற்கைக் கோளையே நம் நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. ரிசாட் - 1 செயற்கைக் கோளை ஏவுவதன் மூலம் அத்தகைய படங்களை மற்ற நாட்டின் துணையின்றி நாமே பெறலாம். இந்த ரிசாட் - 1 செயற்கைக் கோள் 1,858 கிலோ எடையுள்ளது. பி.எஸ்.எல்.வி. சி 19 வகை ராக்கெட் என்பது எக்ஸ்ட்ரா லார்ஜ் எனப்படும் எக்ஸ்.எல். வகையாகும். இது போன்ற ராக்கெட் இஸ்ரோவால் மூன்றாவது முறையாக இப்போது விண்ணில் ஏவப்படுகிறது. மற்ற நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சந்திராயன் - 1 மற்றும் ஜி சாட் 12 ஆகிய செயற்கைக் கோள்களை அதன் சுற்று வட்ட பாதைகளில் செலுத்துவதற்கு இந்த பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல். ராக்கெட் தான் பயன்படுத்தப்பட்டது. இப்போது ரிசாட் - 1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கு பயன்படுத்தப்படவுள்ளது. இந்த செயற்கைக் கோளை வடிவமைக்க ரூ. 178 கோடியும், ராக்கெட்டை தயாரிக்க ரூ. 120 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

மலேசியாவில் சிபிஐ அதிகாரிகள்: தயாநிதி-ஏர்செல்-மேக்சிஸ் 'டீல்' விசாரணை தீவிரம்!

டெல்லி: முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் சம்பந்தப்பட்ட 2ஜி-ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் பணப் பரிவர்த்தனை குறித்து விசாரிக்க சிபிஐ குழு மலேசியாவில் முகாமிட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார் தயாநிதி மாறன். அந்த காலகட்டத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்தது. ஆனால், லைசென்ஸ் தராமல் தயாநிதி மாறன் இழுத்தடித்ததாகவும், மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அனந்த கிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் சிவசங்கரன் சிபிஐயிடம் வாக்குமூலம் தந்தார். கடும் நெருக்கடியால் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்ற பிறகுதான், ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்சை தயாநிதி மாறன் கொடுத்ததாகவும் சிவசங்கரன் கூறினார். இதற்கு பிரதிபலனாக, தயாநிதி மாறன் குடும்பத்துக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ ஆல் ஏஷியா என்ற நிறுவனம் ரூ.547 கோடியை முதலீடு செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதன் அடிப்படையில், தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் டி.அனந்த கிருஷ்ணன், ஆஸ்ட்ரோ ஆல் ஏஷியா மற்றும் மேக்சிஸ் ரால்ப் மார்ஷல் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் மீது சிபிஐ கடந்த அக்டோபர் மாதம் வழக்குப் பதிவு செய்தது. தயாநிதி மாறனின் சென்னை, டெல்லி வீட்டிலும் அலுவலகங்களிலும் சிபிஐ சோதனையும் நடத்தியது. இந்த விவகாரத்தில் லண்டன், பெர்முடா, மலேசியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் பணப் பரிவர்த்தனை நடந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து இந்த பணப் பரிவர்த்தனை பற்றிய தகவல்களை அளிக்குமாறு இந்த 4 நாடுகளுக்கும் சிபிஐ நீதிமன்றம் கடிதம் அனுப்பியது. இந் நிலையில், பணப் பரிவர்த்தனை பற்றிய தகவல்களை திரட்டுவதற்காக சிபிஐ குழு இப்போது மலேசியா சென்றுள்ளது. மலேசிய சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகளை இந்தக் குழு சந்தித்து பேசி தகவல்களை திரட்டி வருகிறது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மலேசியாவின் மேக்சிஸ் நிறுவன அதிகாரிகளிடமும் சிபிஐ வாக்குமூலம் பெறவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

திங்கள், ஏப்ரல் 23, 2012

கும்பகோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு

கும்பகோணம் ஏப்ரல் - 23 - கும்பகோணம் நேற்று காலை நாகர்கோவில் இந்திய உணவுக் கழகத்திலிருந்து அரிசி ஏற்ற கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரெயில் இணைப்பு பாதையிலிருந்து சரக்கு கையாளும் இடத்திற்கு ரெயில் பெட்டிகளை கொண்டு செல்வதற்காக ரெயில் இன்ஜினை பின்னோக்கி ஏற்றும் போது இருப்புப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டைகளையும், இரயில்வே சிக்னலையும் கவனிக்காமல் இயக்கயதால் இரயில் பாதையில் இருந்து தடுப்புக் கட்டைகளை தாண்டி 100மீட்டர் தரையில இறங்கி நின்றது. எதிரில் செக்காங்கண்ணி பகுதி மக்கள் வசிப்பிடங்களும் கார் மெக்கானிக் செட்டும் இருக்கிறது. அடிக்கடி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயில் இன்ஜின் டிரைவர் பார்த்திபன் என்பவர் நாகர்கோவில் சந்திப்பிலிருந்து கும்பகோணம் ரெயில் நிலையம் வரை ஓட்டி வந்தார். இது குறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசாரும், கும்பகோணம் காவல் துறையும் வழக்கு பதிவு செய்து விபத்து நடந்தது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலேயே இதுவரை இது மாதரி தடம் புரண்ட சம்பவம் இல்லை. ஆதலால் இந்த சம்பவத்தை நேரில் பார்ப்பதற்கு மக்கள் பரபரப்பாக கூடினார்கள். திருச்சி ரெயில்வே மண்டலத்தை சார்ந்த கும்பகோணம் ரெயில் நிலையம் என்பதால் திருச்சி ரெயில்வே மண்டலத்தை சார்ந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தப்பிச் சென்ற ரெயில் டிரைவரை தேடி வருகிறார்கள் மற்றும் சம்பவம் நடந்த பகுதியல் செக்காங்கண்ணி ரெயில்வே கேட் கீப்பரிடம் திருச்சி உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடததினார்கள். சம்பந்தபட்ட ஓட்டுனர் பார்த்திபன் மீது ரெயில்வே காவல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகிறார்கள். ரெயில் படத்துக்கான விளக்கம் தடுப்புக் கட்டைகளை மோதி இரும்பு பாதையை விட்டு சுமார் 100மீட்டர் ஓடி நின்ற படம் ரெயில் இன்ஜினின் பட்டை உடைந்திருக்கும் காட்சி இணைப்பு ரெயில் பாதையில் விபத்து நடந்த பகுதியில் மெயின் லயனில் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது எடுத்த படம் சம்பவத்தை மக்கள் பார்க்கும் போது எடுத்த படம் ரெயில் பாதையில் இருந்;து ரெயில் இன்ஜின் சக்கரங்கள் உடைந்து நிற்கும் காட்சி

ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

அன்புடன் அழைக்கிறது நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா அரபிக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவிற்கு ! ! !

இலங்கை:புத்த சாமியார்களின் வெறிச்செயல் – மஸ்ஜித் மீது தாக்குதல் – ஜும்ஆ தொழுவதற்கு தடை!

தம்புள்ளை:இலங்கை தம்புள்ளையில் 50 ஆண்டுகால பழமை வாய்ந்த மஸ்ஜித் மீது புத்த சாமியார்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குண்டுவீசப்பட்டதில் பள்ளிவாசல் சேதமடைந்துள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற முஸ்லிம்களுக்கு தடை விதிக்கப்பட்டது. புத்தர்களின் புனித ரங்கிரி விகார் அமைந்துள்ள தம்புள்ளையை புனித பூமி என்று புத்த சாமியார்கள் கொக்கரிக்கின்றனர். இங்கு அந்நிய மத வழிப்பாட்டுத் தலங்கள் இருக்கக்கூடாது என்று அச்சுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் வியாழக்கிழமை இரவு பள்ளிவாசலில் குண்டுவீசப்பட்டது. ஆனால் எவருக்கும் அபாயம் இல்லை. மேலும் நேற்று 2000 புத்தச் சாமியார்களும், புத்தர்களும் கலந்துகொண்ட பேரணி தம்புள்ளை நகரில் நடத்தப்பட்டது. நேற்று காலை முஸ்லிம்கள் காலை 10 மணிக்கு தொழுகைக்காக சென்ற வேளையில் அங்கு திரண்டிருந்து புத்த சாமியார்கள் தலைமையிலான மதவெறிக் கும்பல் பள்ளிவாசலை முற்றுகையிட்டு கற்களால் தாக்கியுள்ளனர். அங்கு காவலிலில் இருந்த போலீசார், புத்த சாமியார்களின் வன்முறையை தடுக்க தங்களால் இயலாது என்று கூறி முஸ்லிம்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். தற்பொழுது ரங்கிரி புத்த அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் மஸ்ஜித் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசல் வருகிற 23 ஆம் தேதி வரை போலீஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுவரை முஸ்லிம்கள் யாரும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தடை விதித்து மஸ்ஜிதுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 23-ம் தேதி இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அவ்வேளையில் அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் எடுக்கப்படாவிட்டால், தாங்களே முன்னின்று பள்ளிவாசலை இடிக்கப் போவதாக புத்த சாமியார்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். தம்புள்ளை முஸ்லிம் மஸ்ஜிதின் அறங்காவலாளரான ரஹ்மத்துல்லாஹ் கூறுகையில், “புத்தர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பகுதியில் இம்மஸ்ஜித் கடந்த 50 ஆண்டுகளாக நிலைப்பெற்றுள்ளது.” என்றார். இப்பகுதியில் உள்ள இந்துக் கோயிலையும் புத்த மத வெறியர்கள் தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அனுராதாபுரத்தில் உள்ள தர்கா ஒன்று சிங்கள கயவர்களால் உடைக்கப்பட்டது.

இந்திய எம்.பி.க்கள் குழுவின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு!

கொழும்பு: இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் நேற்று குருனெகல பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மலையகமான ஹட்டனுக்கு முதலில் இந்திய எம்.பிக்கள் குழு சென்றது. இதைத் தொடர்ந்து மட்டக்களப்பு நிகழ்ச்சிகளிலும் இந்தியக் குழு பங்கேற்றது. மட்டக்களப்பிற்குச் சென்றுவிட்டு கொழும்பு திரும்பும் வழியில் மோசமான வானிலை காரணமாக குருநாகல் பகுதியில் தரையிறக்கட்டது. இதனால் ராஜபக்சேயுடனாந சந்திப்பை ஒரு நாள் தள்ளிப் போட்டனர். நேற்று அவர்கள் மாலை சாலை மார்க்கமாகவே கொழும்பு திரும்பினர். இதனால்தான் இன்று காலை அக்குழு ராஜபக்சேவை கொழும்பில் சந்தித்துப் பேசினர் என தெரிவிக்கப்பட்டது.

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

பாகிஸ்தான் விமான விபத்தில் 127 பேர் பலி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 127 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமாபாத் அருகே சக்லாலா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு, இந்தத் துயர நிகழ்வு நடந்துள்ளது. கராச்சியில் இருந்து விமானப் பணிக்குழு உள்பட 127 பேருடன் இஸ்லாமபாத் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம், மாலை 6.50 மணியளவில் தொடர்பை இழந்துள்ளது. இதையடுத்து, அந்த விமானம், சக்லாலா பகுதியில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு உடனடியாக மீட்புப் படையினர் விரைந்தனர். ஆனால், அந்த விமானத்தில் இருந்த அனைவருமே உயிரிழந்துவிட்டனர். இதனை, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்தாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து குறித்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அகமத் முக்தார்,விபத்துக்குள்ளான விமானம் நொறுங்கி விழுவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாகவும்,விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அஸ்ஸாம் பயணம்

கவுகாத்தி, ஏப்.- 21 - ஒரு நாள் பயணமாக நேற்று பிரதமர் மன்மோகன் சிங் அஸ்ஸாம் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஒரு நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தி சென்றார். கவுகாத்தியின் புறநகர் பகுதியில் போஜ்ஹார் என்ற இடத்தில் உள்ள லோக்பிரியா கோபிநாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை 10.50 மணிக்குவந்துசேர்ந்த மன்மோகநஅ சிங்கை அம்மாநில கவர்னர் ஜே.பி. பட்நாயக், முதல்வர் தருண் கோகோய் ஆகியோர் வரவேற்றனர். பிறகு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கவுகாத்தியின் மையப்பகுதியில் உள்ள நேரு ஸ்டேடியத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் சென்றார். அவரது பாதுகாப்பிற்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான வேறு இரண்டு ஹெலிகாப்டர்களும் உடன் சென்றன. பின்னர் பரூவா புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயம் செய்த மன்மோகன்சிங், அஸ்ஸாம் சட்டமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் துவக்க விழாவிலும் பங்கேற்றார். கவர்னர் மாளிகையில் சிறிதுநேர ஓய்விற்குப் பிறகு அவர் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அஸ்ஸாமில் உள்ள தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்தார். பிறகு மீண்டும் நேரு ஸ்டேடியத்திற்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் விமான நிலையத்திற்கு சென்றார். பிரதமரின் அஸ்ஸாம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உல்பா தீவிரவாதிகள் நேற்று 12 மணிநேர பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதையும் மீறி பிரதமர் தனது ஒருநாள் அஸ்ஸாம் பயணத்தை மேற்கொண்டார். அவரது வருகையை முன்னிட்டு அஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

புதன், ஏப்ரல் 18, 2012

இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் முகாம் தமிழர்கள் சரமாரி புகார்!

கொழும்பு:வவுனியா முகாம்களில் உள்ள தமிழர்களை இந்திய எம்.பி.க்கள் குழுவினர் இன்று சந்தித்தபோது, தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததோடு, பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் அவர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் ஆறு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவினர்,இலங்கை நாடாளுமன்றத்துக்கு நேற்று விஜயம் செய்து அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து உரையாடினர். அப்போது அபிவிருத்தி பணியை காட்டிலும் இனப்பிரச்னைக்கான உடனடி அரசியல் தீர்வு அவசியம் என்று சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை அரசு பிரதிநிதிகளை வலியுறுத்தினார்.அத்துடன் இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்சவையும் அவர் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து இந்திய எம்.பி.க்கள் குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியது. அப்போது,”மீளக்குடியமர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியா உதவிகளை வழங்குகிறது.ஆனால் அதைவிட முக்கியமான அரசியல் தீர்வு ஒன்றை விரைவில் காண இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பது அவசரமும்,அவசியமுமான தேவையாகும்’என்று கூட்டமைப்பினர் இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் தெரிவித்தனர். இந்நிலையில்,இந்திய எம்.பி.க்கள் குழு இன்று வடக்கு மாகாண பகுதிகளுக்கு இரண்டு ஹெலிகாப்டர்களில் சென்றனர்.அங்கு அவர்கள் வவுனியாவில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை சந்தித்துப் பேசினர். அப்போது முகாம் தமிழர்கள் தங்களது அவல நிலைகளை அவர்களிடம் எடுத்துரைத்தனர்.தங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததோடு,கூரைகளாகவும்,சுவர்களாகவும் இருக்கும் இரும்புத் தகடுகள் காற்றில் அடித்துச் செல்லப்படுவதால் தாங்கள் பாதுகாப்பற்ற சோழலில் வசிப்பதாகவும் அவர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். இவையெல்லாவற்றையும் விட தங்களை தங்களது சொந்த ஊர்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிகை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆவின் நூற்றாண்டுவிழா ! ! !

இன்ஷா அல்லாஹ் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா அரபிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா ஜூலை 1, 2012 அன்று நடைபெற உள்ளதாகவும், விழாவை 29-06-2012 இரவு துவங்கி,30-06-2012 நாள் முழுவதும், 01-07-2012 மாலை(அசர்) வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஜாமிஆவின் முதல்வர் முஹம்மது இஸ்மாயில் ஆலிம் பாகவி அவர்கள் உலக மக்களுக்கு தெரிவிக்கின்றார்கள். உலகெங்கும் வாழும் சமுதாய சொந்தங்கள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சிறப்பிக்க ஏதுவாக தங்களின் பயணங்களை அமைத்துக் கொள்ளுமாறும் வேண்டுகிறார்கள்.

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

இந்தியாவில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

கடன் வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதில் பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதை விட அபிவிருத்தியை ஊக்குவிப்பதென்பதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி குறைப்பது என்பது கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே முதல் முறை. 2010 மார்ச் மாதம் முதல் இந்த வட்டி விகிதம் 13 தடவைகளில் உயர்த்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலக பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவில் வளர்ச்சியை சந்தித்திருக்கவில்லை என்ற சூழ்நிலையில், பொருளாதாரத்தை மேலும் மந்தமாக விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த வட்டிக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஆப்கானில் கடும் சண்டை ராணுவம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

புதுடெல்லி,ஏப்.- 16 - ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் தொடர்மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவம் விழிப்புடன் இருக்க என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வலியுறுத்தியுள்ளார். ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி நடந்தது. அப்போது பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்திற்கு அவர்கள் ஆதரவாக இருந்தார்கள். அல்கொய்தா இயக்கத்தினர்தான் அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டிடங்களைதற்கொலை படையினர் மூலம் விமானம் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கினர். இதனால் அமெரிக்காவிற்கு பலத்த பொருள் நஷ்டமும், உயிர் நஷ்டமும் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா பின்லேடனையும் அவரது இயக்கத்தையும் அடியோடு அழிக்க முயன்றனர். இந்த நிலையில் ஆப்கானில் ஒளிந்திருந்த பின்லேடனுக்கு அந்நாட்டில் அரசாட்சி செய்து வரும் தலிபான்கள் உதவி செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா ஆப்கான் மீது படையெடுத்து தலிபான் அரசை அகற்றி அங்கு ஜனநாயக அரசை உருவாக்கியது. பின்னர் பாகிஸ்தானில் ஒளிந்திருந்த பின்லேடனையும் சுட்டுக்கொன்றது அமெரிக்கா. தற்போது மீண்டும் தலையெடுத்து வந்த தலிபான்கள் அமெரிக்க உதவியோடு ஆட்சியை பிடித்த ஆப்கன் அரசை எதிர்த்து போரில் இறங்கியுள்ளது. இந்த போர் கடுமாயாகவும், தொடர்ந்தும் நடந்து வருகிறது. இந்த கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ராணுவ தளபதிகளுடனான 3 நாள் மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கலந்து கொண்டார். அப்போது ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார். தலிபான் தாக்குதல் நடைபெற்றாலும் கூட அந்நாட்டிற்கு இந்தியாவின் உதவி தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திங்கள், ஏப்ரல் 16, 2012

டெல்லியில் ஜெயலலிதா

டெல்லி: உள்நாட்டுப் பாதுகாப்பு நிலவரம் குறித்து விவாதிக்க டெல்லியில் முதல்வர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ள உள்ளனர். முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். அவருடன் தலைமைச் செயலாளர் தேபேந்திர நாத் சாரங்கி உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுள்ளனர். ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலையே தமிழகம் திரும்புவார் என்று தெரிகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இம்மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி, ஏப்ரல் 14, 2012

70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ் - நைஜீரியாவில் தான் இந்த கொடூரம்!

அபுஜா: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயுடன் பிறந்திருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர் கூறியுள்ளார். நைஜீரிய நாட்டில் உள்ள ஓகுன் மாநில அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரி ஜாண்இடாகோ இது குறித்து வெளியிட்டு அறிக்கையில் கூறியுள்ளதாவது: நைஜீரியாவில் பிறந்துள்ள 70 ஆயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான தாய்மார்கள் எய்ட்ஸ் நோயுடன் இருப்பதும், மேலும் மலேரியா , காசநோய் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மாநில நடவடிக்கை கமிட்டி கட்டுப்படுத்த முழு முயற்சி எடுக்க வேண்டும். தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் இந்த எய்ட்சை கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து முழு அளவில் ஆய்வு செய்து வருகிறோம் என்றும் ஜாண் இடாகோ தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபரத்தின் படி, இங்கு நகர பகுதிகளை விட கிராம பகுதிகளில்தான் எய்ட்ஸ் அதிகம் பரவுவதாகவும், இதன் கொடூரத்தை புரிய வைக்க தீவிர பிரசாரம் துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.நைஜீரியாவில் எய்ட்ஸ்சை ஒழிக்க 255 மில்லியன் டாலர் நிதியாக உலக வங்கி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஷாரூஹ்கான் கைது: அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன்,ஏப்.15 - பிரபல இந்தி நடிகர் சாரூஹ் கான் மீண்டும் கைது செய்யப்பட்டதில் எந்தவித உள்நோக்கமோ அல்லது இனப்பாகுபாடோ இல்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. பிரபல இந்தி நடிகர் சாரூஹ் கான் அடிக்கடி அமெரிக்காவுக்கு பல்வேறு காரணங்கள் சம்பந்தமாக சென்று வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு சாரூஹ்கான் அமெரிக்காவுக்கு சென்றார். அப்போது அவர் நியூ ஜெர்சி நகர விமான நிலையத்தில் இறங்கியபோது அவரை அமெரிக்க நாட்டு குடியுரிமை அதிகாரிகள் பல மணி நேரம் பிடித்து வைத்திருந்தனர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசும் கண்டனம் தெரிவித்தது. இந்தநிலையில் சமீபத்தில் சாரூஹ் கான் அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக ஒரு தனி விமானத்தில் அவர் சென்றார். அவருடன் நித அம்பானியும் சென்றார். சாரூக்ஹான்,நியூயார்க் நகர் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அவரை அமெரிக்க நாட்டு குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வைத்திருந்தனர். சாரூஹ் கான் அமெரிக்க அதிகாரிகளால் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டிருப்பதற்கு இந்தியாவில் பல தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சாரூஹ்கான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளது. சாரூஹ்கான் கைது செய்யப்பட்டது எந்தவித உள்நோக்கமும் இல்லை.இனம். மத காரணமும் இல்லை. அமெரிக்க விதிமுறைகளின்படி பயணம் செய்யாததால்தான் அவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் முதலில் புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதகரத்திற்கு தாங்கள் யார், பயணத்திட்டம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். ஆனால் சாரூஹ்கான் அவ்வாறு தெரிவிக்கவில்லை. இந்தியாவில் இருந்தும் வேறுநாடுகளில் இருந்தும் ஏராளமான முஸ்லீம் பெருமக்கள் அமெரிக்காவுக்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் முறைப்படி பயணம் செய்கிறார்கள். அதனால் அவர்களில் யாரும் கைது செய்யப்படவில்லை. சாரூஹ்கான் அவ்வாறு பயணம் செய்யாததால்தான் கைது செய்யப்பட்டார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

வெள்ளி, ஏப்ரல் 13, 2012

சிரியாவில் உள்நாட்டுப் போர் நிறுத்தம் - இந்தியா வரவேற்பு

அரபு நாடுகளில் கடந்த ஆண்டு முதல் ஏற்பட்ட 'அரபு வசந்தம்' எனப்படும் முல்லைப் புரட்சியின் அங்கமாக சிரியாவிலும் மக்கள் கிளர்ச்சி வெடித்து இருந்தது. சிரியாவில் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 10,000க்கும் அதிகமான மக்களை இராணுவம் கொன்று குவித்துள்ளது. இந்நிலையில், ஐ.நா சார்பில் அதன் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் தலைமையில் சமாதான குழு அங்கு சென்றுள்ளது. கோஃபி அன்னான் தலைமையிலான குழு சிரிய அரசுடன் நடாத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து அங்கு தாக்குதலை நிறுத்த அரசு இணங்கியது. இதனால் சிரியாவில் துப்பாக்கிச் சப்தம் ஓயத் தொடங்கியுள்ளது. கொஃபி அன்னான் தலைமையிலான குழு பேச்சுவார்த்தைகளின் மூலம் உள்நாட்டுப்போரை நிறுத்தியுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. மேலும் பல ஆக்கப்பூர்வமான செயல்களை கோஃபி அன்னான் குழு செய்து அமைதியை நிலைநிறுத்த ஆவன செய்யும் என்று நம்புவதாக இந்திய அரசுத் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது

ஊட்டி பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ணமலர்கள்

ஊட்டி, ஏப்.13 - ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ணமலர்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் பரவசமடைந்தனர். ஊட்டி விஜயநகரம் பகுதியில் தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமான சுமார் 5 ஹெக்டேர் நிலப்பரப்பில் கடந்த 1993 ம் ஆண்டு அ.தி.மு.க.,ஆட்சிக்காலத்தில் ரோஜா பூங்கா துவங்கப்பட்டது. இப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மஞ்சள், பச்சை, கருப்பு, சிவப்பு, இளம்சிவப்பு, நீலம் உள்ளிட்ட 3600த்திற்கும் அதிகமான ரகங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இப்பூங்காவில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் ரோஜா காட்சி நடத்தப்படும். அதன்படி இந்தாண்டுக்கான ரோஜா காட்சி வரும் மே மாதம் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. தற்போது இப்பூங்காவில் உள்ள ரோஜா செடிகளில் பல வண்ண ரோஜாமலர்கள் பூத்துக்குலுங்க துவங்கியுள்ளன. ரோஜா காட்சி நடக்கும் நாட்களில் அனைவரின் கண்ணைப்பறிக்கும் வகையில் அனைத்து செடிகளிலும் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கும். இதனைக் காண கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களை பார்த்து விதவிதமான பல வண்ணங்களில் உள்ள மலர்களின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ச்சிக்கடலில் நெகிழ்ந்து செல்கின்றனர்.

ஊட்டி பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ணமலர்கள்

ஊட்டி, ஏப்.13 - ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ணமலர்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் பரவசமடைந்தனர். ஊட்டி விஜயநகரம் பகுதியில் தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமான சுமார் 5 ஹெக்டேர் நிலப்பரப்பில் கடந்த 1993 ம் ஆண்டு அ.தி.மு.க.,ஆட்சிக்காலத்தில் ரோஜா பூங்கா துவங்கப்பட்டது. இப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மஞ்சள், பச்சை, கருப்பு, சிவப்பு, இளம்சிவப்பு, நீலம் உள்ளிட்ட 3600த்திற்கும் அதிகமான ரகங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இப்பூங்காவில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் ரோஜா காட்சி நடத்தப்படும். அதன்படி இந்தாண்டுக்கான ரோஜா காட்சி வரும் மே மாதம் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. தற்போது இப்பூங்காவில் உள்ள ரோஜா செடிகளில் பல வண்ண ரோஜாமலர்கள் பூத்துக்குலுங்க துவங்கியுள்ளன. ரோஜா காட்சி நடக்கும் நாட்களில் அனைவரின் கண்ணைப்பறிக்கும் வகையில் அனைத்து செடிகளிலும் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கும். இதனைக் காண கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களை பார்த்து விதவிதமான பல வண்ணங்களில் உள்ள மலர்களின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ச்சிக்கடலில் நெகிழ்ந்து செல்கின்றனர்.

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

சுனாமி எச்சரிக்கை எதிரொலி: கடலோரப் பகுதி மக்களை வெளியேற்றிய நாடுகள்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து இந்தோனேசியா உள்பட பல நாடுகளின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே அசே பகுதியில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்தி்ல் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளில் வாழ்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எச்சரிக்கை விடப்பட்டாலும் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அந்நாட்டு அதிபர் சுசிலோ பம்பாங் தெரிவித்துள்ளார். அங்கு ஏறப்ட்டுள்ள சேதமதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் அங்கு மீண்டும் 6.5 அளவுக்கு நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் தெருக்களிலேயே அமர்திருந்தனர். இலங்கையின் கடலோரப் பகுதியில் உள்ள மக்களை உடனே வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவித்தது. இன்று மாலை 5 மணிக்கு சென்னையை சுனாமி தாக்கும் என்று கூறப்பட்டதையடுத்து தமிழகத்தின் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தை சுனாமி தாக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலும், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதயைடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் கொல்கத்தாவில் சிறுது நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்கியது. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 8வது மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதியில் 18 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த தமிழர் மீட்பு: விரைவில் ஊர் திரும்புகிறார்

துபாய்: கடந்த 18 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் கொத்தடிமையாக இருந்த தமிழர் மீட்கப்பட்டார். அவர் விரைவில் சொந்த ஊர் திரும்பவிருக்கிறார். பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு பகுதியைச் சேர்ந்தவர் பி.பெரியசாமி (45). அவர் திருமணம் முடிந்து ஓராண்டான நிலையில் தனது 27வயதில் கடந்த 1994ம் ஆண்டு வேலைக்காக சவூதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு அவர் ஹெயில் என்ற பகுதியில் ஒட்டகம் மேய்த்து வந்தார். அவருக்கு அந்த வேலையை வாங்கிக் கொடுத்தவர் அதாவது ஸ்பான்சர் அவருக்கு சம்பளத்தை கொடுக்காமல், அவரை சொந்த ஊருக்கும் செல்ல அனுமதிக்காமல் இருந்துள்ளார். வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் சவூதிக்கு வந்து இப்படி சிக்கிக் கொண்டோமே என்று மனமுடைந்த பெரியசாமி வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக அவர் கடந்த 18 ஆண்டுகளாக குரல் கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் படும் துயரத்தைப் பற்றி அறிந்த சவூதி குடிமகன் ஒருவர் இது குறித்து போலீஸ் மற்றும் ஆளுநரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து பெரியசாமியின் ஸ்பான்சர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் 18 ஆண்டுகளாக சி்க்கித் தவித்த பெரியசாமியை மீட்டு அல் ஷாம்லி போலீசாரின் பராமரிப்பில் வைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெரியசாமியின் சம்பளபாக்கியை மொத்தமாக கொடுப்பதோடு அவருக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்குமாறு அநத ஸ்பான்சருக்கு உத்தரவிட்டது. பெரியசாமியின் சம்பளபாக்கியை பெற்றுத்தருமாறும், அவரை விரைவில் ஊருக்கு அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறும் அல் ஷாம்லி போலீசாருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பெரியசாமியிடம் பயணம் செய்யத் தேவையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அங்குள்ள இந்திய தூதரகம் அவருக்கு அவுட்பாஸ் கொடுத்துள்ளது. இதையடுத்து அவர் விரைவில் சொந்த ஊருக்கு திரும்பவிருக்கிறார். இதற்கிடையே அவரது குடும்பத்தாரை கண்டுபிடிக்க தூதரகம் முயற்சி செய்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்தை தடை கோரி மனு

சென்னை, ஏப்.10 - ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து ஏப்ரல் 13 தேதி வெள்ளித்திரையில் வெளிவரும் நிலையில் அந்த படத்திற்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து தர்மா சக்தியின் செயலாளர் தேவசேனாதிபதி என்பவர். இந்து மதத்தை சேர்ந்தவர்களை கொச்சைபடுத்தி, அவர்களின் மனம் புண்படும் வகையில் இப்படத்தில் காட்சிகள் உள்ளதால், இந்த படத்தை வெளியிட தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரின் மனுவில் கூறியிருப்பதாவது:- `` ஒரு கல் ஒரு கண்ணாடி '' என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாகியாகவும் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் காட்சிகளை டிவிகளிலும் திரையரங்கங்களிலும் சமீப காலமாக காண்பித்து வருகின்றனர். அதில் உளுந்தூர்பேட்டை உலகானாந்தா என்ற பாத்திரத்தில் சாமியார் வேடம்போட்டு நடிக்கும் காட்சியில் சாமியார்களை அவமானப்படுத்தும் வகையிலும் வசனங்கள் உள்ளது. ஒரு சாமியார் தவறு செய்தார் என்பதை வைத்து அனைத்து சாமியார்களையும் அதே நிலையில் வைத்து வசனம் அமைத்திருப்பது, காட்சிகளை அமைத்திருப்பது, பெரும்பாலான இந்து மதத்தினரின் மனதை துன்புறுத்துவதாக உள்ளது ஆகவே இந்த படத்திற்கு சென்சார் அனுமதிக்க கூடாது. படத்தை தடை செய்ய வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி வினோத்குமார் சர்மா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி முன் தேதி அறிவிப்பின்றி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

திங்கள், ஏப்ரல் 09, 2012

காதலில் 'மோசடி'.. சென்னை ஐ.ஐ.டி யில் உ.பி மாணவர் தற்கொலை!

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் படித்துவந்த உத்திரபிரதேசத்தை மாணவர் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரம்தான் இவரது தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் குல்தீப்யாதவ் (வயது 19). இவரது தந்தை பெயர் ரோகித்சிங். விவசாய பண்ணை வைத்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் சிவில் என்ஜினீயரிங் 2-வது ஆண்டு படித்து வந்த இவர், ஐ.ஐ.டி.வளாகத்தில் உள்ள நர்மதா மாணவர்கள் விடுதியில் அறை எண் 311-ல் தங்கி படித்து வந்தார். நன்றாக படிக்கும் மாணவரான குல்தீப் ஞாயிறுக்கிழமை அன்று தான் தங்கி இருந்த அறைக்குள்ளேயே தூக்குபோட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். மாணவர்கள் காப்பாற்ற முயற்சி குல்தீப் தூக்கில் தொங்குவதை பக்கத்து அறையைச் சேர்ந்த பார்த்து விட்டனர். உடனடியாக கதவை உடைத்து அறைக்குள் புகுந்தனர். தூக்கில் தொங்கிய மாணவர் குல்தீப்பை கீழே இறக்கினார்கள். அப்போது அவருக்கு உயிர் இருந்தது. அவரை உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அவர் உயிர் பிழைத்துக் கொண்டார் என்று தான் முதலில் சொல்லப்பட்டது. ஆனால் மாலை 4 மணி அளவில் அவர் இறந்து போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவர் குல்தீப்பின் உடல் அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குல்தீப் இறந்த தகவலை உடனடியாக ஆக்ராவில் வசிக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கு மாணவர்கள் தெரிவித்தனர். உயிரை மாய்த்த காதல் குல்தீப் தற்கொலைக்கு காதல் பிரச்சினையே காரணமாக கூறப்படுகிறது. மாணவரின் அறையில் போலீசார் சோதனை போட்டபோது, டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. தன்னோடு படிக்கும் மாணவி ஒருவரை குல்தீப் உயிருக்கு உயிராக காதலித்துள்ளார். ஆனால் அந்த மாணவியும் குல்தீப்பை காதலித்துள்ளார். அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் காதலித்து மோசடி செய்து விட்டதாக தெரிகிறது. இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மூன்று முறை பேசினார் குல்தீப் உயிரை விடுவதற்கு முன்பு தனது காதலியோடு 3 முறை செல்போனில் பேசி இருக்கிறார். முதலில் காலை 8.57 மணிக்கு குல்தீப்புடன் அவரது காதலி பேசி இருக்கிறார். அடுத்து 9.27-க்கு ஒரு முறை கூப்பிட்டு பேசி இருக்கிறார். இறுதியாக 9.42 மணிக்கு என்னோடு பேசு என்று செல்போனில் எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பி உள்ளார். குல்தீப்பும் உடனடியாக பேசி உள்ளார். அதன்பிறகுதான் அறையில் தூக்கில் தொங்கி உள்ளார். இந்த செல்போன் பேச்சுகள்தான், குல்தீப்பின் இறுதி அத்தியாயத்தை எழுதி இருக்கிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அசாம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து

கோலாகாட்(அசாம்), ஏப். - 9 - அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு உல்பா பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இது தொடர்பாக சுத்திகரிப்பு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், மாலை 6.30 மணியளவில் ஆலையில் பெரும் வெடி சப்தம் கேட்டது. அதை தொடர்ந்து ஆலையில் தீப்பற்றியது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். பல மீட்டர் உயரத்திற்கு தீ ஜூவாலை கிளம்பியதால் சுமார் 15 கி.மீ. தூரம் சுற்றளவில் உள்ளவர்கள் ஆலையில் தீப்பற்றியதை அறிந்துள்ளனர். தீ பரவியவுடன் அனைவரும் வெளியேறி விட்டதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பின் இரவு 9 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. சேத மதிப்பு குறித்து மதிப்பிட்டு வருகிறோம். தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார். அதே நேரத்தில் இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று உல்பா பயங்கரவாதிகள் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு இமெயில் அனுப்பி உள்ளனர். அதில் தங்கள் எழுச்சி நாளை முன்னிட்டு நவீன வெடிகுண்டு மூலம் இந்த பெரும் தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாகவும், போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

சென்னை கடலில் இந்தியா​- அமெரிக்க கப்பல்கள் கூட்டாக போர் பயிற்சி

சென்னை, ஏப்.- 8 - சென்னை கடலில் இந்தியா​- அமெரிக்க கப்பல்கள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டன இந்தியா ​ அமெரிக்க கப்பல் படைகள் கூட்டாக போர் பயிற்சி செய்ய முடிவு செய்துள்ளன. இருநாட்டு உறவை மேம்படுத்துவதற்காக நல் எண்ண அடிப்படையில் 1992​ம் ஆண்டு முதல் இந்தியா​அமெரிக்க படையினர் கூட்டுப் பயிற்சி நடத்தி வருகிறார்கள். இதுவரை 15 முறை இது போன்ற பயிற்சிகள் நடந்து உள்ளன. 16​வது பயிற்சி சென்னை மற்றும் அந்தமான் நிக்கோ பார் தீவுகளின் அருகே உள்ள இந்திய கடல் பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த கூட்டு ராணுவப்பயிற்சிக்கு 'மலபார்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. போர் பயிற்சிக்காக அமெரிக்க கடற்படை வீரர்களுடன் யு.எஸ்.எஸ். கார்ல் வில்சன் என்ற பிரமாண்ட கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. இது அமெரிக்காவின் 7​வது பிரீட் என்ற கடற்படை பிரிவைச் சேர்ந்தது. இந்த கப்பலுடன் யு.எஸ்.எஸ். பங்கர்சில், யு.எஸ்.எஸ். ஹல்சே என்ற கப்பல்களும் வந்துள்ளன. அணு சக்தியில் இயங்கும் கார்ல் வில்சன் கப்பல் உலகை கலக்கிய தீவிரவாதி பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியது. ஏராளமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் இந்த கப்பலில்தான் பின்லேடனின் இறுதிச் சடங்கு நடந்தது. அமெரிக்க கடற்படை வீரர்களுடன் இணைந்து போர்ப் பயிற்சி செய்வதற்காக இந்திய கடற்படை ராணுவ வீரர்களுடன் ஏவுகணைகள் தாங்கிய இந்திய கடற்படை கப்பல்களான ஐ.என்.எஸ். சத்nullர், ஐ.என்.எஸ். ரான்விஜய், ரன்வீர், குலிஷ், பீரங்கி தாங்கிய கப்பல் ஐ.என்.எஸ். சக்தி, விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் நீnullர் மூழ்கி கப்பல்களும் வந்துள்ளன. நேற்று முதல் வருகிற 9​ந்தேதி வரை இந்திய​ அமெரிக்க கடற்படை வீரர் களுக்கான கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதில் போர் பயிற்சி நுணுக்கங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எந்தவிதமான பயிற்சியை நடத்துவது என்பது குறித்தும் முடிவு செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து 16​ந்தேதி வரை கூட்டுப் போர் பயிற்சி நடக்கிறது. பல்வேறு பிரச்சினைகளில் இந்தியாவுக்கு எதிராக சீனா நடந்து வருகிறது. சமீபத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் இலங்கை சீனாவுடன் உள்ள நெருக்கத்தை மேலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள வங்க கடலில் சென்னை அருகிலும், இலங்கைக்கு கிழக்கே உள்ள அந்தமான் ​ நிக்கோபார் பகுதியில் இருக்கும் இந்திய கடல் பகுதியிலும் இந்தியா ​ அமெரிக்க கடற்படையினர் கூட்டுப் பயிற்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது.

சனி, ஏப்ரல் 07, 2012

ராமஜெயம் படுகொலை - காயின் போட்டுப் பேசும் தொலைபேசி மூலம் துப்பு கிடைத்தது!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மார்ச் 29 ம் தேதியன்று மர்மநபர்களால் கடத்திப் படுகொலை செய்யப் பட்டார். ராமஜெயம் சயனைடு விஷம் கொடுத்துப் படுகொலை செய்யப் பட்டுள்ளார் எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ராமஜெயத்தைக் கொலை செய்த கொலையாளிகளைப் பிடிக்க 7 தனிப் படைகள் அமைக்கப் பட்டு விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீ ரங்கம் கோவில் முன்பு இருந்த காயின் போட்டுப் பேசும் தொலைபேசியில் இருந்து சிலர் அடிக்கடி பேசியதாக காவல்துறைக்குக் கிடைத்த தகவலை அடுத்து அந்த தொலைபேசியில் இருந்து யாருக்கெல்லாம் பேசப் பட்டது என்று விசாரணை நடத்தப் பட்டது. விசாரணையில், காயின் போட்டுப் பேசும் தொலைபேசியில் இருந்து திருநெல்வேலியில் உள்ள ஒரு நம்பருக்கு அடிக்கடிப் பேசி இருப்பது காவல்துறையினருக்குச் சந்தேகத்தை கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நடத்தப் பட்ட விசாரணையில் திருநெல்வேலி உள்ள செல்போன் எண்ணில் இருந்து சென்னையில் உள்ள இரு செல்போன் நம்பருக்கு பேசியுள்ளதன் அடிப்படையில் சென்னையில் இருவரைக் கைது செய்து காவல்துறை விசாரித்து வருவதாகத் தெரிகிறது. மேலும் அந்த செல்போன் நம்பருக்கு தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் சாந்தியும் தொடர்பு கொண்டு பேசியுள்ளது விசாரணையில் தெரிய வந்து காவல்துறையினர் அதிமுக கவுன்சிலர் சாந்தியையும் அவரது கணவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். காவல்துறை விசாரணைக்குப் பின்னர் அதிமுக கவுன்சிலர் சாந்தி விடுவிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

'சும்மா மிரட்ட வேண்டாம்; தென் சீனக் கடல் உலகின் பொது சொத்து!'- இந்தியா பதிலடி

பெங்களூர்: தெற்கு சீன கடல் பகுதியில் இந்தியாவின் எண்ணெய் ஆய்வுப்பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனாவின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அந்தப் பகுதி, உலகின் பொது சொத்து. எனவே ஆய்வு நடத்த இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை பதிலளித்துள்ளது. சீனாவின் தெற்கு கடல் பகுதியில் 52 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளும், அந்தக் கடல் பகுதியும் தங்களுக்கு சொந்தம் என்று சீனா கூறுகிறது. ஆனால், தங்களுக்குத்தான் சொந்தம் என்று வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பாக மேற்கண்ட 4 நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. அந்த கடல் பகுதியில் இந்தியாவின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், விதேஷ் நிறுவனம் ஆகியவை வியட்நாம் நாட்டுடன் சேர்ந்து கடந்த மாதம் முதல் எண்ணெய் ஆய்வு நடத்தி வருகின்றன. பிரச்சினைக்குரிய வியட்நாம் நாட்டுடன் சேர்ந்து இந்தியா ஆய்வு செய்வதால், வியட்நாம் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதாக கருதி, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுக்கு மிரட்டலும் விடுத்தது. எஸ்.எம்.கிருஷ்ணா இந்தநிலையில், பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், "தெற்கு சீன கடல் பகுதிகள் அனைத்தும் உலகத்தின் சொத்து. தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஏசியன்) இதை ஏற்றுக் கொண்டுள்ளன. சீனாவும் இந்த கருத்தை ஏற்றுள்ளது. தெற்கு சீன கடல் பகுதிகள், வளர்ந்து வரும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அங்கு எந்த ஒரு நாட்டின் தலையீடும் இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் இந்திய-சீன பரஸ்பர உறவில் எந்த பாதிப்பும் நிச்சயமாக இல்லை. சீன அதிபர் ஹு ஜின்டாவோ, 'பிரிக்ஸ்' மாநாட்டுக்காக சமீபத்தில் இந்தியா வந்தார். அவருடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாகவே இருந்தது," என்றார்.

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

காதலுக்கு எதிர்ப்பு - பெற்றோர் கொலை - பெண் கைது!

காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர் கொலையுண்ட வழக்கில் 22 வயது இளம் பெண் ஒருவரை மே.வங்க மாநில காவல்துறை கடந்த புதன் இரவு கைது செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் (ச்)சின்சுரா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த இளம் பெண் மௌசுமி சர்க்காரை பதினான்கு நாள்கள் சிறைக்காவலில் வைத்து மேலும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன் பெற்றோருக்கு ஒரே மகளான மெளசுமி, மொய்துல் ஆலம் எனப்படும் ரிப்பன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் மெளசுமியின் பெற்றோர் இக்காதலை ஏற்காமல் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த மெளசுமி, பெற்றோருக்கு பாடம் கற்பிக்கும் படி காதலனிடம் கோரியுள்ளார். அதன் படி அந்தக் காதலனும் 30,000 ரூபாய்க்கு கூலிப்படை வைத்து மெளசுமியின் பெற்றோரை கொலை செய்துள்ளார். பெற்றோரை, கூலிப்படை வீட்டில் வெட்டிக்கொலை செய்துகொண்டிருந்த போது அதே வீட்டில் வேறு தளத்தில் இருந்த மெளசுமி பெற்றோரைக் காக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது காவல்துறையின் குற்றச்சாட்டு.

ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்ததால் இந்தியா மீது வருத்தமோ, பகையோ இல்லை - பெரீஸ் பேச்ச

கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததால், இலங்கை - இந்தியா உறவில் பாதிப்பு ஏற்படாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்ன நடந்தது என்பதையே நினைத்து, அதே இடத்தில் நிற்கக் கூடாது. அடுத்த நிலையை நோக்கி நமது கவனம் இருக்க வேண்டும். ஐ.நா. தீர்மானத்தை இந்தியா சில நிர்பந்தங்கள் காரணமாகவே ஆதரிக்க நேர்ந்தது என்று ஏற்கனவே தெரிவித்தேன். எனவே, இந்தியா மீது வருத்தமோ, பகையோ இலங்கைக்கு கிடையாது.இரு நாடுகள் இடையே உறவு ஒரே பரிமாணத்தை கொண்டதல்ல. அது பல வகைகளில் இணைந்தது. எனவே, உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த மாதத்தில் இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழு இலங்கை வருகிறது. இதுவே இரு நாடுகள் இடையே நிலவும் நல்லுறவுக்கான அறிகுறி என்றார்.

வியாழன், ஏப்ரல் 05, 2012

ஜெனிவா தீர்மானத்தை செயல்படுத்தாவிட்டால் இலங்கை தனிமைப்படுத்தப்படும்: ஐ.தே.க. எச்சரிக்கை

கொழும்பு: இலங்கையில் இறுதிப் போரின் போது படையினரால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த தவறினால் ஜெனீவாவில் ஆதரித்த நாடுகளின் ஆதரவையும் இலங்கை அரசு இழக்க நேரிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது அவர் கூறியதாவது:

1988-89 ஆம் ஆண்டுகளில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பேசிய மகிந்த ராஜபக்ச, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நரகத்திற்கு செல்லவும் தயாராக இருப்பதாக கூறினார். அப்போது அவருக்கு நான்தான் ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தேன்.

தற்போது அதே ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.. இந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஓடினார். ஆனாலும் பலன் எதுவுமில்லை. இறுதியில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் 24 வாக்குகளுடன் நிறைவேறியது.

அதேநேரம் தீர்மானத்துக்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் 15 நாடுகள் வாக்களித்திருந்தன. இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளும்கூட இலங்கை அரசு அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு தான் கூறியிருக்கின்றன. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறினால் இந்த 15 நாடுகளின் ஆதரவையுமே இலங்கை இழந்துவிடும். இதனால் ஜெனிவா தீர்மானத்தைப் பின்பற்றி ஆணைக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றியாக வேண்டும். இல்லையெனில் நிச்சயமாக இலங்கை அரசு சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுவிடும் என்றார் அவர்.

போதையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை


திருவள்ளூர்: போதையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியை அடுத்த சொக்காநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35). தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்டவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் ரமேஷின் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு போயிருந்தார். மனைவி வீட்டில் இல்லாததால் ரமேஷ் அதிகமாக மது குடித்துள்ளார். இரவு போதையில் வீட்டிற்கு வந்தவர் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். ரமேஷ் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் நேற்று இறந்தார். புகாரின் பேரில் வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

புதன், ஏப்ரல் 04, 2012

இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யவேண்டும்

புதுடெல்லி,ஏப்.- 5 - இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஹபீஸ் சய்யீது பிடித்துக்கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசாக அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியும் வரவேற்றுள்ளது. தீவிரவாதம் குறித்த இந்தியாவின் கவலைக்கு அமெரிக்கா மதிப்பு அளித்துள்ளது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம்தான் என்று இந்தியா கூறி வருகிறது. இந்தநிலையில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மன்மோகன் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றார். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஹபீஸ் சய்யீதை பிடித்து தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர் விருதாக அளிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

செவ்வாய், ஏப்ரல் 03, 2012

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தமிழ்நாட்டைச்சேர்ந்த கலிபுல்லா பதவியேற்றார்

புதுடெல்லி, ஏப்.- 3 - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா நேற்று பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கலிபுல்லா ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து இப்போது இந்த பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இவர் சென்னை ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக கடந்த 2000 மாவது ஆண்டு மார்ச் மாதம் 2 ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன்பிறகுதான் இவர் ஜம்மு காஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1951 ம் ஆண்டு ஜுலை 23 ம் தேதி பிறந்த கலிபுல்லா, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர். இவர் 1975 ம் ஆண்டு ஆகஸ்டு 20 ம் தேதி தன்னை ஒரு வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார். இவர் தொழிலாளர் சட்ட வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்காக வாதாடி இருக்கிறார். இவர் தமிழ்நாடு மின்சார வாரிய நிலைக்குழுவிலும் இடம்பெற்று இருந்தார்.

திங்கள், ஏப்ரல் 02, 2012

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி 29 பேர் பலி!


மாஸ்கோ: சைபீரியா நோக்கி சென்ற ரசிய பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 29 பேர் பலியானதாக தெரிகிறது.

ரஷ்ய நேரப்படி காலை 5. 30 மணியளவில் இரட்டை இன்ஞ்சின் பொறுத்தப்பபட்ட ஏ.டி.ஆர்., 72 என்ற ரக விமானம் டியூமென் நகரின் அருகில் உள்ள ரோஷ்சினோ விமான நிலையத்தில் இருந்து சூர்குட் நோக்கி சென்ற புறப்பட்டு சென்றது.

இந்த விமானம் புறப்பட்டு சென்ற நில நிமிடத்தில் ரேடார் கருவியில் இருந்து விலகியது. இதனையடுத்து பதட்டமடைந்த விமான அதிகாரிகள் அருகில் உள்ள விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு துறையினருடன் தொடர்பு கொண்டனர்.

இந்நிலையில் மேற்கு சைபீரியாவில் உள்ள டியூமென் நகரில் இருந்து 35 கி,மீட்டர் தொலைவில் விமானம் விழுந்து நொறுங்கிக் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இதில் முதலில் 43 பயணிகளும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 29 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று ரஷ்ய அவசர நிலைக்கான துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

புதுக்கோட்டை வ.கம்யூ. எம்.எல்.ஏ. விபத்தில் மரணம்


புதுக்கோட்டை, ஏப். -2- புதுக்கோட்டை அருகே நேற்று காலை நடந்த விபத்தில் கார் கவிழ்ந்து வலது கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ முத்துக்குமரன் உடல் நசுங்கி இறந்தார். அவருடன் சென்ற 2 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் வலது கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட முத்துக்குமரன் (வயது 44). திமுக வேட்பாளர் பெரியண்ணன் அரசை தோற்கடித்து எம்.எல்.ஏஆனார். நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் பள்ளி காலம் முதலே கம்யூனிஸ்டு கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அந்த கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று காலை அன்னவாசல் பகுதியை சேர்ந்த வலது கம்யூனிஸ்டு நிர்வாகி ஒருவரது வீட்டில் துக்கம் விசாரிக்க முத்துக்குமரன் எம்.எல்.ஏ தனது கட்சி நிர்வாகிகளுடன் காரில் புறப்பட்டு சென்றார்.

அன்னவாசல் ஒன்றியம் சொக்கநாதம்பட்டி என்ற இடத்தின் அருகே சென்றபோது கார் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதனால் கார் கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறியதில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் முத்துக்குமரன் எம்.எல்.ஏ உடல் நசுங்கி உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த 2 பேர் படுகாயமடைந்தனர். டிரைவர் மட்டும் காயமின்றி தப்பினார்.

விபத்து நடந்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர், ஒன்றிய செயலாளர் சாம்பசிவம், நகராட்சி தலைவர் கார்த்திக் தொண்டைமான், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த முத்துக்குமரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது.

முத்துக்குமரன் மறைவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடக்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

கடந்த தேர்தலில் முத்துகுமரன் பெற்ற ஓட்டுகள் எண்ணிக்கை விபரம் வருமாறு:-

முத்துக்குமரன் (இ.கம்யூ) 65,466

பெரியண்ணன் அரசு (திமுக) 62,365

செல்வம் (பா.ஜ.க) 1748

சீனிவாசன் (ஐ.ஜே.கே.) 4098

இறந்த முத்துக்குமரன் எம்.எல்.ஏவுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமம். இவருக்கு திருமணமாகி சுசீலா என்ற மனைவியும், நர்மதா (15), என்ற 10ம் வகுப்பு படிக்கும் மகளும், நரேன் (12) என்ற 7 ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். சுசீலா விழுப்புரம் கோர்ட்டில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும்போது முத்துக்குமரன் எம்.எல்.ஏ தனது தொகுதி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக அதிக முறை கேள்வி கேட்டுள்ளார். அதிகப்படியான, சரியான கேள்விகளை சட்ட மன்றத்தில் கேட்டதால் சபாநாயகர் ஜெயக்குமார் இவரை பாராட்டி இவரை போல மற்றவர்களும் தேவையான கேள்விகளை அதிக அளவில் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

முத்துக்குமரன் விபத்தில் இறந்த செய்தியால் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது

வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு சி.பி.ஐ. கட்டுப்பாடு


புதுடெல்லி. ஏப்.- 2 - இந்திய ராணுவத்திற்கு டாட்ரா டிரக்குகளை கொள்முதல் செய்ததில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரமை நடத்தி வரும் சி.பி.ஐ. நேற்று லண்டனிைல் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர் ரவி ரிஷி என்பவருக்கு கட்டுப்பாட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு டாட்ரா நிறுவனத்தின் 600 டிரக்குகளை கொள் முதல் செய்ய தனக்கு ரூ. 14 கோடி லஞ்சம் கொடுக்க சிலர் முன் வந்ததாக ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங் சமீபத்தில் புகார் கூறியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டாட்ரா நிறுவனத்தின் தரம் குறைந்த 600 டிரக்குகளை ராணுவம் கொள்முதல் செய்ய தனக்கு லஞ்சம் கொடுக்க லெப்டினன்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் முன்வந்தார் என்றும் வி.கே. சிங் கூறியுள்ளார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை தேஜிந்தர் சிங் மறுத்துள்ளார். மேலும் வி.கே.சிங்கிற்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றையும் தேஜிந்தர் சிங் தொடர்ந்துள்ளார்.

டாட்ரா டிரக்குகள் கொள்முதல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்திய ராணுவத்திற்கு டாட்ரா டிரக்குளை வாங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும் சி.பி. ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டாட்ரா கம்பெனியை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் ரவி ரிஷி என்பவர் மீது சி.பி. ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரவி ரிஷியிடம் ஏற்கனவே இரு முறை சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த சி.பி. ஐ. அதிகாரிகள் முயற்சி நேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து தகவல் தெரிவிக்க டாட்ரா கம்பெனி ஊழியர்கள் மறுத்து விட்டனர்.

தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்றும் துரதிருஷ்டமானவை என்றும் தனது கம்பெனியின் டாட்ரா டிருக்குள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் மூலமாகத்தான் இநதிய ராணுவத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும் ரவி ரிஷி கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரவி ரிஷி வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விடாமல் இருக்க சி.பி. ஐ. அதிகாரிகள் கட்டுப்பாடு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு அறைகளுக்கு இது தொடர்பாக சி.பி. ஐ. அதிகாரிகள் உஷார்படுத்தியுள்ளனர்.

ரவி ரிஷி தப்ப முயன்றால் அது குறித்த தகவலை உடனே தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையங்களின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்

ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

16-ம் தேதி கொழும்பு செல்கிறது இந்திய குழு



புதுடெல்லி,மார்ச்.31 - இலங்கையில் நடந்த இறுதிப்போருக்கு பின்னர் அங்கு தற்போது வாழும் தமிழர்களின் நிலைமையை ஆய்வு செய்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்திய குழு வருகின்ற 21-ம் தேதி கொழும்பு செல்கிறது. இலங்கையில் உரிமைக்காக போராடிய ஈழத்தமிழர்களை சிங்கள ராணுவத்தினரால் வெல்ல முடியவில்லை. அதனால் இறுதிக்கட்டமாக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ரகசிய உதவியால் தமிழர் பகுதியில் சிங்கள ராணுவத்தினர் அதிபர் ராஜபக்சேயின் உத்தரவால் ரசாயன குண்டுகளை வீசி அப்பாவி தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் கொன்றனர். விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மகன் உள்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்து கொன்றனர். இது போர்க்குற்றமாகும். அதனால் அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்றவாளி தீர்மானம் ஒன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற திரிசங்கு நிலையில் இருந்த மத்திய அரசு,தமிழக அரசின் கடும் எதிர்ப்பை கருத்தில் கொண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்தது.

இலங்கையில் போருக்கு பின்னர் அந்தநாட்டு வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகளை இலங்கை அரசு சரிவர செய்யவில்லை. மேலும் தமிழர்களுக்கு வீடுகட்டி தரும் இந்திய திட்டமும் எந்த அளவுக்கு இலங்கை அரசு செயல்படுத்தி வருகிறது என்பதும் தெரியவில்லை. இதனால் தமிழர்கள் பெரும் துயரத்திற்கும் கஷ்டத்திற்கும் ஆளாகி இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் எம்.பி. தலைமையில் இந்திய குழு ஒன்று வருகின்ற 16-ம் தேதி இலங்கை செல்கிறது. இந்த குழு 6 நாட்கள் இலங்கையில் குறிப்பாக தமிழர்கள் பகுதிக்கு செல்கிறது. இங்கு மறுவாழ்வு பணிகளை ஆய்வு செய்வதோடு போருக்கு பின் தமிழர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வுக்கு பின்னர் ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு அந்த குழு தாக்கல் செய்யும். இலங்கைக்கு வரும் இந்திய குழுவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அதிபர் ராஜபக்சேவை மத்திய அரசு கேட்டுக்கொண்டியிருப்பதாக தெரிகிறது.