வியாழன், ஜனவரி 26, 2012

ஜப்பானிய வர்த்தகக் குழு முதல்வருடன் சந்திப்பு


ஜப்பானிய வர்த்தகக் குழு முதல்வருடன் சந்திப்பு
 1/1 
சென்னை, ஜன.26 - ஜப்பானிய வர்த்தகக் குழுவினர் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சென்னைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.இந்திய ஜப்பானிய வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் தலைவர் நோபுயா ஒகாஷி தலைமையிலான குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த போது, தமிழகத்தில் அன்னிய முதலீடுகள் பெருக அதிக வாய்ப்புள்ள சூழலை உருவாக்கியதற்குப் பாராட்டுத் தெரிவித்தார். ஜப்பானில் உள்ள பெருமளவு சிறிய நடுத்தர ரக தொழிலகங்கள், அதிக அளவில் முதலீடு செய்வதற்கான ஒரு மாநிலமாக தமிழகத்தைக் கருதுகின்றனர் என்றும், ஜப்பானிய வர்த்தகக் குழு இங்குள்ள தொழில் பேட்டைகளைக் கண்டதுடன், தொழில் அதிபர்களையும் சந்தித்துப் பேசி திருப்தி அடைந்ததாகவும் முதல்வரிடம் ஒகாஷி தெரிவித்தார்.
மேலும், ஜப்பானிய தொழில் முதலீட்டுக்கு உரிய ஆதரவை தமிழக முதல்வர் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்குப் பதிலளித்த முதல்வர், அதற்கு நன்றி தெரிவித்ததுடன், தமிழகத்தில் சர்வதேச தரத்திற்கு ஈடாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு நோக்கமாகக் கொண்டு இருக்கிறது என்றும், ஜப்பானிய முதலீடுகளை தமிழகம் வரவேற்க தயாராயிருக்கிறது என்றும், தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றும் உறுதி கூறினார்.
இதற்கு ஜப்பானியக் குழுவின் சார்பில் ஒகாஷி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக