வெள்ளி, மார்ச் 30, 2012

பிரமோஸ் ஏவுகணை 2-வது முறை சோதனை வெற்றி

பாலசோர். மார்ச் 31 -ராணுவ பயன்பாட்டிற்கான சூப்பர்சானிக் பிரமோஸ் ஏவுகணை சோதனை நேற்று இரண்டாவது முறையாக வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. இதுவரை பல்வேறு வகையான ஏவுகணைகளை சோதித்துள்ள இந்தியா, பிரமோஸ் என்ற ஏவுகணையையும் தயாரித்துள்ளது. ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரமோஸ் ஏவுகணை கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இப்போது இதே ஏவுகணையின் ராணுவ மாடல் சூப்பர்சானிக் பிரமோஸ் ஏவுகணை சோதனையும் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த சோதனை ஒடிசா மாநிலம் பாலசோர் அருகில் உள்ள சந்திப்பூர் சர்வதேச சோதனை தளத்தில் நடைபெற்றது. ராணுவத்தில் பயன்படுத்துவற்கான இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நடமாடும் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த சோதனை நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. ஏற்கனவே கடந்த 28-ம் தேதி இதே பிரமோஸ் ஏவுகணை சோதனை இதே ஏவுதளத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணை 300 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை தாங்கி 290 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணை இரு பிரிவு எரிபொருள்களை கொண்டதாகும். முதல் கட்டத்தில் திட எரிபொருளும் இரண்டாம் கட்டத்தில் திரவ எரிபொருளும் பயன்படுத்தப்பட்டு செலுத்தப்படும்.

இந்த ஏவுகணை ஏற்கனவே தரைப்படை, கப்பல் படை ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இதில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதற்காக இப்போது மீண்டும் சோதனை செய்யப்பட்டுள்ளது.

பிரம்மபுத்திரா நதியின் பெயரில் உள்ள முதல் இரண்டெழுத்துக்களையும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் பெயரில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களையும் இணைத்து பிரமோஸ் என்று இந்த கூட்டு முயற்சி ஏவுகணைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக