திங்கள், ஏப்ரல் 02, 2012

புதுக்கோட்டை வ.கம்யூ. எம்.எல்.ஏ. விபத்தில் மரணம்


புதுக்கோட்டை, ஏப். -2- புதுக்கோட்டை அருகே நேற்று காலை நடந்த விபத்தில் கார் கவிழ்ந்து வலது கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ முத்துக்குமரன் உடல் நசுங்கி இறந்தார். அவருடன் சென்ற 2 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் வலது கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட முத்துக்குமரன் (வயது 44). திமுக வேட்பாளர் பெரியண்ணன் அரசை தோற்கடித்து எம்.எல்.ஏஆனார். நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் பள்ளி காலம் முதலே கம்யூனிஸ்டு கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அந்த கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று காலை அன்னவாசல் பகுதியை சேர்ந்த வலது கம்யூனிஸ்டு நிர்வாகி ஒருவரது வீட்டில் துக்கம் விசாரிக்க முத்துக்குமரன் எம்.எல்.ஏ தனது கட்சி நிர்வாகிகளுடன் காரில் புறப்பட்டு சென்றார்.

அன்னவாசல் ஒன்றியம் சொக்கநாதம்பட்டி என்ற இடத்தின் அருகே சென்றபோது கார் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதனால் கார் கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறியதில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் முத்துக்குமரன் எம்.எல்.ஏ உடல் நசுங்கி உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த 2 பேர் படுகாயமடைந்தனர். டிரைவர் மட்டும் காயமின்றி தப்பினார்.

விபத்து நடந்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர், ஒன்றிய செயலாளர் சாம்பசிவம், நகராட்சி தலைவர் கார்த்திக் தொண்டைமான், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த முத்துக்குமரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது.

முத்துக்குமரன் மறைவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடக்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

கடந்த தேர்தலில் முத்துகுமரன் பெற்ற ஓட்டுகள் எண்ணிக்கை விபரம் வருமாறு:-

முத்துக்குமரன் (இ.கம்யூ) 65,466

பெரியண்ணன் அரசு (திமுக) 62,365

செல்வம் (பா.ஜ.க) 1748

சீனிவாசன் (ஐ.ஜே.கே.) 4098

இறந்த முத்துக்குமரன் எம்.எல்.ஏவுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமம். இவருக்கு திருமணமாகி சுசீலா என்ற மனைவியும், நர்மதா (15), என்ற 10ம் வகுப்பு படிக்கும் மகளும், நரேன் (12) என்ற 7 ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். சுசீலா விழுப்புரம் கோர்ட்டில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும்போது முத்துக்குமரன் எம்.எல்.ஏ தனது தொகுதி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக அதிக முறை கேள்வி கேட்டுள்ளார். அதிகப்படியான, சரியான கேள்விகளை சட்ட மன்றத்தில் கேட்டதால் சபாநாயகர் ஜெயக்குமார் இவரை பாராட்டி இவரை போல மற்றவர்களும் தேவையான கேள்விகளை அதிக அளவில் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

முத்துக்குமரன் விபத்தில் இறந்த செய்தியால் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக