வெள்ளி, ஏப்ரல் 27, 2012

மதுரை - கொழும்பு விமான சேவை: மத்தியரசு ஒப்புதல்

புது டெல்லி, ஏப். 27 - மதுரை - கொழும்பு இடையே முதலாவது சர்வதேச பயணிகள் விமான சேவையை தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித்சிங் கூறியதாக விருதுநகர் எம்.பி. மாணிக்தாகூர் நிருபர்களிடம் தெரிவித்தார். சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அங்கு வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்ல வசதியாக ஓடுதளம் விரிவுபடுத்தப்பட்டு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மதுரை விமான நிலையத்தை சுங்க விமான நிலையம்(கஸ்டம்ஸ் நோட்டிஃபைடு ஏர்போர்ட்) என கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் மாணிக்தாகூர், விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. ராம்பாபு உள்ளிட்டோர் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங்கை சந்தித்து பேசி வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே சர்வதேச பயணிகள் சேவையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய மதுரைக்கு வல்லுனர் குழு அனுப்பி வைக்கப்படும் என்று ஏர் இந்தியா விமான நிறுவன தலைவர் ரோஹித் நந்தன் தெரிவித்தார். டெல்லியில் அவரை முன்னாள் எம்.பி. ராம்பாபு, மதுரை டிராவல்ஸ் கிளப் தலைவர் முஸ்தபா, முன்னாள் தலைவர்கள் வாசுதேவன், ஸ்ரீராம் ஆகியோர் சந்தித்தனர். அப்போது இந்த தகவலை ரோஹித் நந்தன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக