செவ்வாய், ஏப்ரல் 10, 2012

சுனாமி எச்சரிக்கை எதிரொலி: கடலோரப் பகுதி மக்களை வெளியேற்றிய நாடுகள்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து இந்தோனேசியா உள்பட பல நாடுகளின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே அசே பகுதியில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்தி்ல் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளில் வாழ்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எச்சரிக்கை விடப்பட்டாலும் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அந்நாட்டு அதிபர் சுசிலோ பம்பாங் தெரிவித்துள்ளார். அங்கு ஏறப்ட்டுள்ள சேதமதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் அங்கு மீண்டும் 6.5 அளவுக்கு நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் தெருக்களிலேயே அமர்திருந்தனர். இலங்கையின் கடலோரப் பகுதியில் உள்ள மக்களை உடனே வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவித்தது. இன்று மாலை 5 மணிக்கு சென்னையை சுனாமி தாக்கும் என்று கூறப்பட்டதையடுத்து தமிழகத்தின் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தை சுனாமி தாக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலும், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதயைடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் கொல்கத்தாவில் சிறுது நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்கியது. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 8வது மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக