செவ்வாய், மே 08, 2012

தங்கநகை மீது வரிவிதிப்பு வாபஸ் பார்லி.யில் பிரணாப் அறிவிப்பு

புதுடெல்லி,மே.- 8 - தங்கம் மற்றும் வைர நகைகள் மீது பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட கலால் வரி ரத்து செய்யப்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று அறிவித்தார். பாராளுமன்றத்தில் 2012-13-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். அப்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு கலால் வரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நாடு முழுவதும் நகை கடைக்காரர்கள் தீவிர போராட்டம் நடத்தினர். நகைக்கடைகள் மூடப்பட்டன. எதிர்ப்பு வலுவாக இருப்பதை அறிந்த நிதி அமைச்சர் பிரணாப் நேற்று தங்கம்,வைர நகைகள் மீது விதிக்கப்பட்ட கலால் வரி வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தார். முத்திரை பதிக்கப்பட்ட நகைகள், முத்திரை பதிக்கப்படாத நகைகள் என்று பாரபட்சம் பார்க்காமல் நகைகளுக்கு விதிக்கப்பட்ட கலால் வரி வாபஸ் பெறப்படும் என்றும் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பு மிகவும் சொற்பமே. அரசுக்கு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில்தான் இந்த சொற்ப வரி விதிக்கப்பட்டது. இதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பாளர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அந்த கலால் வரி விதிப்பை வபாஸ் பெறப்படும் என்று நிதி மசோதாவை விவாதத்திற்கு தாக்கல் செய்து அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக