வெள்ளி, ஜூன் 29, 2012

சென்னை புறநகரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ 231 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் ஜெயலலிதா தகவல்


சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், வேளச்சேரி கொளத்தூர் ஆகிய இடங்களில் ரூ.231 கோடி செலவில் புதிய மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், நடைமேடை ஆகியவை அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெருகி வரும் மக்கள்தொகை, வளர்ந்துவரும் தொழிற்சாலைகள் மற்றும் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கேற்ப சாலைக் கட்டமைப்பில் தேவையான மாற்றங்களை, மேம்பாடுகளை செய்திட முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். சென்னையில், ஜி.எஸ்.டி. சாலை, பல்லாவரத்தில் உள்ள சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து 80 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாலம் மற்றும் ஒரு சுரங்க நடைபாதை அமைத்தல்; சென்னை, வேளச்சேரி, விஜயநகரம் சந்திப்பில் 98 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பில் தரமணி சாலை, தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச் சாலையினை இணைத்து மேம்பாலம் மற்றும் நடைமேம்பாலத்துடன் கூடிய வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட நடைபாதை அமைத்தல்; சென்னை உள்வட்டச் சாலையில், கொளத்தூர் அருகில் இரட்டை ஏரிப் பகுதியில் 52 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பூர் செங்குன்றம் சாலை சந்திப்பில் மேம்பாலம் மற்றும் ஒரு சுரங்க நடைபாதை அமைத்தல், என மொத்தம் 231 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாலங்கள் மற்றும் நடைபாதைகளை அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னை நகரத்தில், மெட்ரோ ரெயிலுக்கு பாதை அமைப்பதன் காரணமாக, ஜிஎஸ்டி சாலையில், சென்னை விமான நிலையம் அருகே அதிகமாக நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம், சென்னை விமான நிலையத்திற்கு அருகே ஜிஎஸ்டி சாலையை ஒரு கிலோ மீட்டர் வரை 1 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்துவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் மேற்படி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைய வழிவகை ஏற்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக