வெள்ளி, ஜூன் 15, 2012

பிரேசில்-இந்தியா வர்த்தகத்தின் இலக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 750 லட்சம் கோடி.


பிரேசில்-இந்தியா இடையேயான வர்த்தகத்தின் மதிப்பு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 750 லட்சம் கோடியை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்திருக்கிறார். இந்தியா-பிரேசில் வர்த்தக மேம்பாடு குறித்து விவாதிக்க நான்கு நாள் பயணமாக பிரேசில் வந்திருக்கிறார். தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு தொழிலகங்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியது: இப்போது இரு நாடுகளிடையே உள்ள வர்த்தகத்தின் மதிப்பு ரூ. 500 லட்சம் கோடி. அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியா-பிரேசில் இடையே உள்ள வர்த்தகத்தின் மதிப்பு ரூ. 750 லட்சம் கோடியை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்றார்.அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய உள்கட்டமைப்புத் துறையில் ரூ. 50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரேசில் தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். வேளாண் துறை, ஜவுளி, தகவல் தொடர்பு, மருந்துகள் தயாரிப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளின் தொழிலதிபர்களும் இணைந்து செயலாற்றலாம். தேசிய தயாரிப்புக் கொள்கையை இந்தியா சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த உற்பத்தி விகிதத்தில் 25 சதவீதத்தை தயாரிப்புத் துறை மூலம் நிறைவு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். இதனை நிறைவேற்றும் பொருட்டு, மாபெரும் தொழில் மண்டலங்களை உருவாக்க இருக்கிறோம். இந்த தொழில் மண்டலங்களில் ரூ. 50 லட்சம் கோடி அளவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். இது போன்ற உள்கட்டமைப்பு முயற்சிகளில் பிரேசில் தொழிலதிபர்கள் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆனந்த் சர்மா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக