வெள்ளி, ஜூன் 08, 2012

குளிர்ந்த காற்றுடன் குற்றாலத்தில் சீசன் துவங்கியது

தென்காசி. ஜூன்.8 - குற்றாலத்தில் சீசன் துவங்கும் அறிகுறியாக குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் அடித்தது. இதனால் குற்றாலத்தில் சீசன் துவங்கியுள்ளது. குற்றாலத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதே நிலை நீடித்தால் இன்னும் 2 நாட்களில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கிவிடும். தென்மேற்கு பருவமழை பெய்யும் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் குற்றாலத்தில் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குளிர்ந்த காற்றுடனன் மழை பெய்யும் நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வரும் இந்த காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான கேரளாவிற்கு அருகாமையில் உள்ள தமிழகப் பகுதிகளில் மட்டுமே பெய்யும் இந்த சாரல் மழை பெய்யும். இந்த சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, புலி அருவி, குண்டர் தோப்பு அருவி, புது அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும் இந்த அருவிகளில் குளிக்கவும், குளிர்ந்த காற்றுடன் பெய்யும் சாரல் மழையில் நனையவும் உலகம் முழுவதும் உள்ள உல்லாசப் பயணிகள் குற்றாலம் வருகை தருவார்கள். இந்த சீசன் காலத்தில் குற்றாலம் வருகை தரும் உல்லாச பயணிகளின் வசதிக்காக மாவட்ட நிர்வாகமும், குற்றாலம் பேரூராட்சி நிர்வாகமும் அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து வருகிறது. மேலும் குற்றாலம் வருகை தரும் உல்லாசப் பயணிகள் சீசனை அச்சமின்றி அனுபவிக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் ஏராளமான போலீஸார் குற்றாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி ஆகிய பகுதிகளில் உல்லாச பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை குற்றாலம் பேரூராட்சி நிர்வாகமும், பழைய குற்றாலத்தில் ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகமும், சிறப்பாக செய்து வருகிறது. மேலும் சீசன் காலத்தை முன்னிட்டு தற்காலிக கடைகள் நடத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக குற்றாலம் மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது. பகல் முழுவதும் குற்றாலத்தில் வெயில் இல்லை. நேற்று பகல் முழுவதும் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் அடித்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதே நிலை நீடித்தால் விரைவில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்துவங்கிவடும் இதனால் உல்லாசப் பயணிகள் மட்டுமல்லாமல் குற்றாலம், தென்காசி பகுதி பொது மக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக