புதன், ஜூன் 13, 2012

சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு கிடையாது. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.


ஐ.ஐ.டி. உள்ளிட்ட அரசுக் கல்வி நிலையங்களில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையை மத்திய அரசு வெளியிட்டது. இந்த ஆணை செல்லாது என்று ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் கடந்த 11-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இந்த விவகாரத்தில், எந்தவித ஆதார ஆவணங்களும் இல்லாமல் அரசு மேல் முறையீடு செய்திருப்பது அதிருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இட ஒதுக்கீடு என்ற சிக்கலான பிரச்னையை அரசு மிகவும் சாதாரணமாகக் கையாள்வது அதிருப்தி அளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். சிறுபான்மையினருக்கு 4.5 சதவிவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆதார ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், இவ்வழக்கு விசாரணையை புதன் கிழமை வரை ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐ.ஐ.டி., மாணவர்கள் சேர்க்கையில் சிறுபான்மையினருக்கு உள்ஓதுக்கீடு குறித்து மத்திய அரசின் விளக்கத்தை ஏற்கமுடியாது என அறிவித்து, ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மீண்டும் மறுத்து விட்டனர். நீதிபதிகளின் இந்த உத்தரவால் ஐஐடி மாணவர் சேர்கையில் தற்போதைக்கு உள்ஒதுக்கீடு என்பதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக