புதன், ஜூன் 06, 2012

வேலைநிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால் புதிய பைலட்டுகள் நியமனம். ஏர் இந்தியா அதிரடி முடிவு.


வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், புதிய பைலட்டுகளை நியமிக்க முடிவு செய்துள்ளது. அந் நிறுவனத்துக்கு ரூ. 1,200 கோடி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்னும் 2 நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா நிறுவன பைலட்டுகள் கடந்த மே 7-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் இப்போது 75 சதவீத விமானங்களே இயக்கப்படுகின்றன. வேலைநிறுத்தம் முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், புதிதாக பைலட்டுகளை நியமித்து விமானங்களை இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்துக்கு உதவ, புதிய வியாபாரத் திட்டத்தை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் அடுத்த 9 ஆண்டுகளுக்கு ரூ.30 ஆயிரம் கோடியை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசு வழங்கும். முதல்கட்டமாக ரூ. 1,200 கோடியை இப்போது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.250 கோடி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரை தவிர்த்து மற்ற ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும். மீதமுள்ள தொகையில் வரி பாக்கிகளை செலுத்தவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான சேவை குறைப்பு: இதற்கிடையே விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் கூறியதாவது: வேலைநிறுத்தத்தால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நாள்தோறும் ரூ. 10 முதல் 15 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை ரூ. 5 முதல் 6 கோடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலானோர் பயணிக்கும் வெளிநாடுகளுக்கான விமானங்களின் சேவையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை ஏர் இந்தியாவுக்கு தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்க முடியாது. அடுத்த 9 ஆண்டுகளில் வழங்கப்பட உள்ள இந்த ரூ. 30 ஆயிரம் கோடிதான் நாங்கள் அளிக்கும் கடைசி நிதி உதவியாகும்'' என்றார் அமைச்சர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக