செவ்வாய், ஜூலை 03, 2012

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் தீவிபத்து. மின் தட்டுப்பாடு அதிகரிக்குமா?


தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பு நிலக்கரி மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் 5 யூனிட்களில் மொத்தம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இங்கு மின் உற்பத்திக்காக கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இந்த நிலக்கரியை துறைமுகத்தில் உள்ள கரிதளத்தில் இருந்து நேரடியாக அனல் மின்நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக இரண்டு கன்வேயர் பெல்ட்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் நிலக்கரி, அனல் மின் நிலையத்தில் உள்ள பிரைமரி கிரஷர் ஹவுஸ் மற்றும் செகண்டரி கிரஷர் ஹவுஸ் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு நிலக்கரி உடைக்கப்பட்டு மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் விதமாக மாற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த யூனிட்டில் உள்ள 47, 48வது பெல்ட்களில் திடீர் உராய்வு காரணமாக இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி பிரைமரி கிரஷர் ஹவுஸ் வரையிலும் பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் இரண்டு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கன்வேயர் பெல்ட் மற்றும் மின் மோட்டார்கள், நிலக்கரி ஆகியவை எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘தீ விபத்தில் கன்வேயர் பெல்ட்கள் மற்றும் மின் மோட்டார்கள் ஆகியவை சேதம் அடைந்துள்ளன. செகண்டரி கிரஷர் யூனிட்டை பயன்படுத்தி மின் உற்பத்திக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பணியை தொடர்ந்து மேற்கொள்ள முடியும்’’ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக