வெள்ளி, ஜூலை 27, 2012

பள்ளி சிறுமி பலி எதிரொலி தமிழகம் முழுக்க வாகனங்களில் சோதனை:


பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். சென்னையில் அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றிச் சென்ற 10 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரத்தில் பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக ரோட்டில் விழுந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மக்கள் ஆவேசத்துடன் கூறி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாவும் அறிவித்தார். இதையடுத்து, சிறுமியை பலி வாங்கிய பள்ளி பஸ்சுக்கு தகுதி சான்று வழங்கிய தாம்பரம் ஆர்டிஓ அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் கைது செய்யப்பட்டார். அவரும் ஆர்டிஓ பாடப்பசாமியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாகனங்களை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். வாகனங்கள் நல்ல முறையில் உள்ளதா, பிரேக் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா, அளவுக்கு அதிகமாக மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்கிறார்களா என்று சோதனை நடத்துகின்றனர். விதிமுறைகளை மீறி இயங்கிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை தண்டையார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் (பொறுப்பு) தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் இன்று காலை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அதிக குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் சென்ற 10 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோக்களுக்கு தலா ரூ.750 அபராதம் விதித்தனர். மாணவர்களையோ, பொதுமக்களையோ அதிக அளவில் ஏற்றிச் சென்றால் ஆட்டோ பர்மிட் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக