Aug21 வடகிழக்கு மக்களிடம் பீதியை கிளப்பி வதந்தி பரப்பிய 250 இணைய தளங்கள் முடக்கம்.

வடகிழக்கு மக்களிடம் பீதியை கிளப்பி வந்த 250 இணைய தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநில மக்களை பீதிக்குள்ளாக மூல காரணமாக இருந்து செயல்பட்டது பாகிஸ்தானில் உள்ள சில மதவாத அமைப்புகள். அவர்கள் அங்கிருந்து தவறுதலான, வீண் வதந்திகளை பரப்ப ஒட்டுவேலை மூலம் சித்தரித்து வீடியோக்கள், படங்களை அனுப்பினர். அவற்றை இந்தியாவில் உள்ள சிலர் திட்டமிட்டு பலருக்கும் எம்எம்எஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இவற்றை கண்டதும், தென் மாநிலங்களில் படித்துக்கொண்டிருந்த, வேலையில் இருந்த பல வடகிழக்கு மாநிலத்தவரும் கூட்டம் கூட்டமாக வெளியேற ஆரம்பித்தனர். கடந்த நான்கு நாட்களில் பல ஆயிரம் பேர், பெங்களூர், சென்னை வழியாக அசாம் திரும்பினர். இவர்களை பீதிக்குள்ளாக்கிய இணைய தளங்கள், ‘ப்ளாக்’ பக்கங்கள் மற்றும் திட்டமிட்டு ஒட்டிவெட்டி தயாரிக்கப்பட்ட வீடியோக்களை மத்திய உளவுத்துறை கண்டுபிடித்தது. இவை எல்லாம் பாகிஸ்தானில் இருந்து தான் அனுப்பப்பட்டவை என்று ஆதாரங்கள் திரட்டியது.
இதுபோன்ற வதந்தியை பரப்புகிறவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. செல்போன்கள் மூலம் மொத்தமாக குறுந்தகவல்கள் அனுப்ப தடை விதிக்கப்பட்டது. வதந்தியை பரப்பிய 250-க்கு மேற்பட்ட இணைய தளங்களுக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து `பேஸ்புக்', `டுவிட்டர்', `யூ டியூப்' போன்ற இணைய தளங்களின் குறிப்பிட்ட பக்கங்கள் முடக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை வரை 130 இணைய தளங்கள் முடக்கப்பட்டன.மீதி உள்ள இணைய தளங்களும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சமீப காலங்களில் இணையங்கள் மூலம் `இந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போரி'ல் மிகப்பெரிய அளவிலான நிகழ்வு இது என்பதால், இந்த பிரச்சினை குறித்து இணைய குற்றங்கள் தொடர்பான சர்வதேச அமைப்பில் முறையிடவும் இந்தியா பரிசீலனை செய்து வருகிறது.
இதுகுறித்து உள்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இது ஒரு மிகப்பெரிய சைபர் போர். இதை சர்வதேச அரங்கில் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களுடன் விரைவில் அனுப்பப்பட உள்ளது” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக