வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

லண்டன் கையேந்தி பவன்களின் உணவு அயிட்டங்களுக்கு போட்டி : இந்திய வகை உணவு அசத்தியது


மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் தெருவில் தள்ளுவண்டிகளில் விற்கப்படும் சாட் உணவு வகைகள் உலகம் முழுவதும் பிரசித்தம். கையேந்தி பவன் என்று அழைக்கப்படும் இந்த சாலையோர ஓட்டல்களில் விலை குறைவு. இந்த கடைகளை நம்பி இருப்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். இந்நிலையில் கையேந்தி பவன்களில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. லண்டனில் பிரிட்டிஷ் ஸ்ட்ரீட் ஃபுட் அவார்ட்ஸ் 2012 என்ற பெயரில் சுவையான, சுகாதாரமான தெரு வகை உணவுகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. சுமார் 3,000 வகை உணவுகள் போட்டியிட்ட இதில் 16 வகையான உணவுகள் பரிசுக்குரியவையாக போட்டி நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டது. இதில் சமோசா, பேல்பூரி உள்ளிட்ட இந்திய சாட் உணவுகளை கொண்டு இந்தியர் ஒருவரால் புதுமையாக தயாரிக்கப்பட்ட உணவுக்கு பரிசு கிடைத்துள்ளது. அடுத்த மாதம் 15, 16ம் தேதிகளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வகை உணவுக்கு இங்கிலாந்தில் பெருத்த வரவேற்பு கிடைத்து உள்ளது. லண்டன், லீட்சில் தள்ளுவண்டியில் உணவு விற்கும் இந்திய பெண்மணி மஞ்சித். இவரது தள்ளுவண்டி கடைக்கு மஞ்சித் கிச்சன் , தேலா (நம்பர் 1 சாட் ஸ்டேஷன்) என்று பெயரிட்டு கடந்த 2009ம் ஆண்டு முதல் இந்திய வகை உணவுகளை விற்பனை செய்து வருகிறார். வாடிக்கையாளர்களை கவர சுவையாக உணவுகளை தயாரித்து சுடச்சுட பரிமாறுகிறார். உணவின் ப்ரத்யேக சுவையால் இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். போட்டிக்காக சமோசா, பேல்பூரி போன்ற உணவுகளின் கலவையாக இவர் தயாரித்த சாட் உணவு பரிசு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மஞ்சித் கூறுகையில், தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்தேன். தனியாக தொழில் செய்ய விரும்பி, தள்ளுவண்டி கடை போட்டேன். சைவ சாட் வகை இந்திய உணவுகளை தயாரித்து விற்க தொடங்கினேன். ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு இருந்தது எனக்கு உற்சாகம் அளித்தது. இப்போது பரிசும் கிடைத்துள்ளதுÕ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக