செவ்வாய், ஜனவரி 08, 2013

காரைக்கால் கடலில் குளித்து மாயமான கல்லூரி மாணவன் உடல் கரை ஒதுங்கியது


காரைக்கால், ஜன.8/(மு.இ.) நேற்று மாலை காரைக்கால் கடலில் குளித்து மாயமான, காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவன் சையது முகமது அன்சாரியின் உடல் இன்று பிற்பகல் 1 மணிக்கு கரை ஒதுங்கியது. காரைக்கால் சுண்ணாபுக்கார வீதியைச் சேர்ந்தவர் முகமது உஷேன் மகன் சையது முகமது அன்சாரி(21). இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை சுமார் 4 மணிக்கு, நண்பர்கள் 4 பேருடன் கடலில் குளித்த போது, அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, காரைக்கால் கடலோர காவல் நிலையம், நகர காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இன்று பிற்பகல் வரை கடலில் மாயமான மாணவனை கரையோரத்தில் தேடிவந்தனர். இந்நிலையில், பிற்பகல் சுமார் 1 மணிக்கு, மாணவனின் உடல் கரை ஒதுங்கியது. இது குறித்து அங்குள்ள மீனவர்கள் கூறியதாவது: நேற்று மாலை கடல் சீற்றமாகவும், தண்ணீர் உள்வாங்கலாகவும் இருந்ததால், அலையில் சிக்கிய மாணவன் உடல் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டது. அதனால்தான் நேற்று முழுவதும் உடல் கரை ஒதுங்கவில்லை. இன்று பிற்பகல் 12 மணிக்கு பிறகு தண்ணீரின் அளவு கூடியதால் கடலுக்குள் இழுத்துசெல்லப்பட்ட மாணவன் உடல் மீண்டும் அவர் குளித்த இடத்தின் அருகே கரை ஒதுங்கியுள்ளது. பொதுவாக, முகத்துவாரம் கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் கடல் ஆழமாகவும், அலையின் சீற்றம் அதிகமாகவும் இருப்பதால், அலையில் சிக்கும் மாணவர்கள் உடல் கற்களில் மோதி நிலைதடுமாற செய்கிறது. எனவே கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் எக்காரணம் கொண்டும் குளிக்க கூடாது என்றனர். மாவட்ட எஸ்.எஸ்.பி ஆன்டோ அல்போன்ஸ் கூறியதாவது: சுனாமிக்கு பிறகு காரைக்ககால் கடலின் தன்மை மாறியுள்ளது. முகத்துவாரம் அருகில் இந்த மாற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. மீனவர்களே கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல அஞ்சுகின்றனர். கடற்கரை ஓரம் கடலில் யாரும் குளிக்கவேண்டாம் என விளம்பபர போர்டுகள் வைத்தும், காவலர்கள் கண்காணித்தும், அதையும் மீறி சென்று குளிப்போர் உயிர் இழக்க நேரிடுகிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் காரைக்கால் கடல் குறித்து எச்சரிக்கை செய்யவேண்டும். காவலர்களும் கடற்கரையோரம் இனி கூடுதலாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். பள்ளி, கல்லூரிகள் அளவில் மிக விரைவில் இது குறித்து விழ்ப்புணர்வு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக