வெள்ளி, ஏப்ரல் 26, 2013

கோவை வணிக வளாகத்தில் நேற்றுகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் கருகி பலியாயினர்.


கோவை : கோவை வணிக வளாகத்தில் நேற்றுகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் கருகி பலியாயினர். தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். கோவை மாநகரின் முக்கிய சாலையான அவினாசி சாலை, பாப்பநாயக்கன்பாளையம் சந்திப்பில் லட்சுமி மில் ஜங்ஷன் உள்ளது. இதன் வடக்கு பகுதியில், விக்னேஷ்வரா பம்ப்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நான்கு மாடி கட்டிடம் (தரை தளம் மற்றும் 3 மாடி) உள்ளது. தரை தளத்தில் ஆக்ஸிஸ் வங்கி செயல்படுகிறது. முதல் தளத்தில் விக்னேஸ்வர் கிரெஸ்டா, ஐபிகாம், எப்சிஎம் டிராவல் சொலியூசன், டோமின், கேரியர் லாஞ்சர் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. 2வது தளத்தில் ஷேர்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் பங்குவர்த்தக நிறுவனம் இயங்குகிறது. 3வது தளத்தில் ஐசிஐசிஐ லம்பார்டு இன்சூரன்ஸ் கம்பெனி இயங்குகிறது. நான்கு தளத்திலும் சேர்த்து மொத்தம் 8 கம்பெனிகள் இயங்கின. இவற்றில், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நேற்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். காலை 9.50 மணியளவில் மின்சாரம் தடைபட்டு மீண்டும் வந்தது. அப்போது, 2வது தளத்தில் உள்ள பங்கு வர்த்தக நிறுவனத்தின் இன்வெர்டரில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு தீ பிடித்துள்ளது. இதை, அங்கிருந்த ஊழியர்கள் யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் கருகிய வாடை வந்துள்ளது. அப்போதுதான் ஊழியர்கள் உஷாராயினர். ஏதோ ஒரு இடத்தில் தீ பிடித்துள்ளது என்பதை உணர்ந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற துவங்கினர். வெளியேறுவதற்கு ஒரே ஒரு படிக்கட்டுதான் உள்ளது. அதன்வழியாக, ஆண், பெண் ஊழியர்கள் முண்டியடித்துக்கொண்டு வெளியேறினர். இந்த தகவல் இதர மாடிகளில் இருப்பவர்களுக்கும் பரவியது. நான்காவது தளத்தில் இருந்தவர்கள் அப்படியே மொட்டை மாடி மீது ஏறிக்கொண்டனர். மீதமுள்ளவர்கள் ஒரே ஒரு படிக்கட்டு வழியாக அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். சுமார் 10 நிமிடத்துக்குள் தீயின் வேகம் அதிகரித்து வணிக வளாகம் முழுவதும் ஒரே புகை மூட்டமாக காட்சியளித்தது. மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருட்டானது. இதில், பங்கு வர்த்தக நிறுவனத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்த தடாகம் சாலை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராஜகோபால் மகள் கீர்த்தனா (22), அதே நிறுவனத்தில் பணிபுரிந்த பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்த ஸ்ரீலட்சுமி (32), வணிக வளாக துப்புரவு ஊழியர்கள் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி விஜயலட்சுமி (50), புலியகுளம் பகுதியை சேர்ந்த ஜான் மனைவி மார்க்கரெட் மேரி (55) ஆகியோர் மாட்டிக்கொண்டனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினர். மூச்சு திணறல் மற்றும் தீக்காயம் காரணமாக அதே இடத்தில் உயிரிழந்தனர். இவர்களில், கீர்த்தனா கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். செயற்கை சுவாச கருவி: தீயணைப்பு படையினர் 10 வாகனங்களில் வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை தீயை அணைக்க போராடினர். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர்களாலும் கட்டிடத்துக்குள் செல்ல முடியவில்லை. செயற்கை சுவாச கருவி வரவழைக்கப்பட்டு, அதை மாட்டிக்கொண்டு உள்ளே சென்றனர். காலை 11.40 மணிக்குத்தான் இறந்த நான்கு பெண்களின் உடலையும் அடையாளம் கண்டு மீட்டனர். 40 அடி உயரத்தில் இருந்து குதித்த பெண்கள் தீ விபத்தின்போது தனியார் பங்கு சந்தை நிறுவனத்தை சேர்ந்த சுகன்யா (28), ஜீவிதா ஆகிய இருவரும் சுமார் 40 அடி உயரமுள்ள 2வது மாடி பால்கனியில் இருந்து வெளியே குதித்தனர். இவர்களுக்கு காலில் முறிவு ஏற்பட்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு லாரி மீது நின்றுகொண்டு, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்த கோவை கணபதி தீயணைப்பு நிலைய அலுவலர் ராமு (54), வீரர் ரகுநாதன் (46) ஆகியோர் நிலைதடுமாறி அடுத்தடுத்து கீழே விழுந்து காயம் அடைந்தனர். கணபதி தீயணைப்பு நிலைய வீரர் முருகன் (41) ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழையும்போது காயம் ஏற்பட்டது. ஆக்ஸிஸ் வங்கி ஊழியர் சக்திவேல் (47) மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீயணைப்பு வீரர்களுக்கு, மாநகர போலீசாரும் உதவிபுரிந்தனர். பல லட்சம் சேதம் இந்த தீ விபத்தில் தரை தளத்தை தவிர, மீதமுள்ள அனைத்து தளங்களில் உள்ள அலுவலக பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இவை பல லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக்ஸிஸ் வங்கிக்கு சொந்தமான உடமைகள் மட்டும் தப்பின. காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக, ‘108’ ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. ராணுவ ஹெலிகாப்டர் தீயணைப்பு படை வீரர்களுடன், மாநகர போலீசார் மற்றும் கோவை முகாமில் உள்ள இந்திய விமானப்படை வீரர்களும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடம் தீ பற்றி எரிந்துக் கொண்டிருந்தபோது அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் நின்றுக்கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்களை மீட்க விமானப்படையின் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் தீயணைப்பு படையினரின் ராட்சத ஏணி மூலம் அனைவரும் பத்திரமாக கிழே இறக்கப்பட்டு விட்டனர். இதனால், ஹெலிகாப்டர் திரும்பிச் சென்று விட்டது. www.nidurin.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக