செவ்வாய், ஏப்ரல் 23, 2013

காவல் பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்படும்: முதல்வர்


சென்னை, ஏப்.24 - காவல் துறையினருக்கான பயிற்சி மையங்கள் ரூ.38 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காவல்துறை மானியக்கோரிக்கைக்குப்பிறகு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவலர் பயிற்சிப் பிரிவின் கீழ் காவலர் உயர் பயிற்சியகம், காவலர் பயிற்சிக் கல்லுாரி, காவலர் தேர்வு பள்ளிகள் மற்றும் பணியிடைப் பயிற்சி மையங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பயிற்சிப் பள்ளியில் 22 வாரங்களுக்கு மட்டுமே அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. விரிவான பயிற்சி திட்டத்திற்கு குறைந்தது 7 மாத கால அளவு அடிப்படை பயிற்சியும், 1 மாத கால செயல்முறை பயிற்சியும் தேவைப்படுவதால் பயிற்சிக் காலத்தை நீட்டித்து 7.3.2012-ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதனை கருத்திற்கொண்டு, சென்னை, அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி மற்றும் தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, வேலூர், கோயம்புத்தூர், ஆவடி, விழுப்புரம், சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் பரங்கிமலை, புதுப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள காவலர் பயிற்சி மையங்களின் கட்டுமான வசதிகள் 38 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார். www.nidurin.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக