புதன், செப்டம்பர் 04, 2013

ஆபிஸில் ராகிங் : மனமுடைந்த 19 வயது பெண் தற்கொலை- சக பணியாளர்கள் 10 பேர் கைது


நாசிக்: சக பணியாளர்கள் ராகிங் செய்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குற்றத்தில் சம்பந்தப்பட்ட 10 ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாசிக்கில் உள்ள இந்திரா நகர் குடியிருப்பில் வசித்து வந்த பிரனாளி பிரதீப் என்ற 19 வயது இளம்பெண் சாத்பூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணி புரிந்து வந்தார். கடந்த ஞாயிறன்று திடீரென கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டு, தூக்கில் தொங்கியுள்ளார் பிரனாளி. பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரனாளியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இறப்பதற்கு முன் பிரனாளி எழுதிய கடைசிக் கடிதம் ஒன்று சிக்கியதன் பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவருடன் பணி புரிந்த சக ஊழியர்களின் ராகிங்கே பிரனாளியின் மரணத்திற்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இது குறித்து பிரனாளியின் தந்தை கூறுகையில், பிரனாளி அலுவலக விஷயமாக ஜெர்மனி செல்ல இருந்ததாகவும், அதனைப் பொறுக்க முடியாமலே அவரது சக ஊழியர்கள் அவரைத் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பிரனாளியின் கடைசி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 10 ஊழியர்களில் நான்கு பேர் பெண்கள். தற்போது அவர்கள் அனைவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், அவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு, பயிற்சிக்காலமாக அங்கு பணி புரிந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக