புதன், ஜனவரி 11, 2012

கடலூரில் மின்கம்பங்களை நடும்பணி இரவுபகலாக நடைபெறுகிறது: மின்துறை அமைச்சர் தகவல்


சென்னை, ஜன.11: தானே புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தில் மின்கம்பங்களை நடும்பணி இரவுபகலாக நடைபெற்று வருவதாக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் தானே புயுலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட  பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களை கடலூர் மாவட்டத்திலேயே தங்கி நிவரணப்பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் அமைச்சர் பெருமக்கள் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்று கடலூர் நத்தப்பட்டு துணைமின்நிலையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில்,
தமிழக முதல்வர் தானே புயலினால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கும் பொங்கல் பண்டிகைக்குள் மின்இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் கடலூர் மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளைச் சார்ந்த 5,000 மின்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு  பணிகள் போர்க்கால அடிப்டையில் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் மின்சீரமைப்பு பணிகளுக்காக 35,000 மின்கம்பங்கள் தேவைப்படுகின்றன. இதில் 28,000 மின்கம்பங்கள் கடலூர் மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த மின்கம்பங்களை நடும்பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மின்கம்பங்கள் நடும் பணிகளில் உள்ளனர். பொதுமக்களும் ஆர்வத்துடன் மின்சார வாரிய பணியாளர்களுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். மீதமுள்ன மின்கம்பங்கள் வந்து கொண்டுள்ளன. இந்த மின்கம்பங்கள் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.
கடலூருக்கு, நெய்வேலியிலிருந்து மின்விநியோகம் செய்துவரும் 230 கி.வோ. மின்பாதையில் தானே புயலினால் முற்றிலும் சேதமடைந்த மூன்று கோபுரங்கள் சீரமைக்கும் பணி மற்றும் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான 47 துணை மின்நிலையங்களை சீரமைக்கும்பணி ஆகிய பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தற்போது மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி கடலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கும் பொங்கல் பண்டிகைக்குள் மின்விநியோகம் வழங்கப்படும்.
இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக