செவ்வாய், ஜனவரி 17, 2012

சாலை& விமான போக்குவரத்து காஷ்மீரில் கடும் பாதிப்பு


ஸ்ரீநகர் : காஷ்மீரில் இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி இடைவிடாமல் கடந்த 3 நாட்களாக பனிப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. தலைநகர் ஸ்ரீநகரில் நேற்றுமுன்தினம் இரவு மட்டும் 4 செ.மீ பனிப்பொழிவு பதிவானது. வடக்கு காஷ்மீரில் உள்ள குல்மார்க் நகரில் 15 செ.மீ பனிப்பொழிவு ஏற்பட்டது. சோனாமார்க்கில் அதிகபட்சமாக 20 செ.மீ பனிப்பொழிவு பதிவாகி இருந்தது. 

தொடர் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர்& ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. சாலையின் பல பகுதிகள் பனியால் மூடிகிடக்கிறது. பனியை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தின் ஓடுபாதையும் பனிப்பொழிவால் மூடப்பட்டது. இதனால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீநகரில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகர் முசாபராபாத்துக்கு வாரந்தோறும் இயக்கப்படும் பஸ் நேற்று இயக்கப்படவில்லை. பனிபொழிவு காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பஸ் இயக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக