சென்னை, ஜன.22 - குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். மேலும் குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. கவர்னர் ரோசையா தேசியகொடி ஏற்றுகிறார். முதல் அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள், அதிகாரிகள் இதில் பங்குபெறுகிறார்கள். நிகழ்ச்சியில் அலங்கார அணி வகுப்புகள், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இப்போதே கண்காணிக்கப்படுகிறது.
மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் சோதனை நடத்துகின்றனர். இது தவிர கோட்டை, மத்திய மாநில அரசு அலுவலகங்கள், ரெயில்வே, பஸ் நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய பகுதி களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி வைத்து சோதனை நடத்துகின்றனர். சென்னை நகருக்குள் நுழையும் அனைத்து சாலைகளிலும், 'செக்போஸ்ட்' அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்துகின்றனர்.
லாட்ஜ் சோதனையும் நடக்கிறது. வெளிமாநில நபர்கள் சந்தேகத்திற்கிடமாக யாரேனும் தங்கி உள்ளார் களா? என்றும் விசாரணை நடக்கிறது. கடலோர பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. குடியரசு தின விழா நடைபெறும் பகுதிகளில் வாகனம் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்படுகிறது. அங்கும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் அதிகாரி கூறினார்.
குடியரசு தினத்தையொட்டி மெரீனா கடற்கரை சாலையில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி அன்றைய தினம் காலையில் போக்குவரத்து திருப்பி விடப்படுவதாகவும் போலீசார் அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக