வெள்ளி, பிப்ரவரி 10, 2012

திருமங்கலம் அருகே கிணற்றில் வேன் கவிழ்ந்து 10 பேர் பலி


திருமங்கலம் அருகே கிணற்றில் வேன் கவிழ்ந்து 10 பேர் பலி
 1/1 

திருமங்கலம், பிப். 10 - திருமங்கலம் அருகே கிணற்றில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த திங்களன்று தேவாரத்தை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவருக்கும், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த உமாவிற்கும் திருமணம் தூத்துக்குடியில் நடைபெற்றது. திருமண வீட்டார் மணமக்களை தேவாரத்தில் விட்டு விட்டு நேற்று ஒரு வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருமங்கலம் அருகே உள்ள நக்கலக்கோட்டை என்ற இடத்தின் அருகே வரும் போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கிட்டத்தட்ட 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது. 
இதில் தூத்துக்குடியை சேர்ந்த மணி(46), விருதுநகரை சேர்ந்த மாதவன்(41) மற்றும் சாயல்குடியை சேர்ந்த கருப்பசாமி(45) ஆகியோர் வேனின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்து அருகில் உள்ளோருக்கு தகவல் தெரிவித்தனர். கிணற்றில் நீர் அதிகமாக இருந்ததால் வேன் நீரில் முற்றிலுமாக மூழ்கிப் போனது. இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆர்.டி.ஓ. புகழேந்தி மற்றும் தாசில்தார் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். 
நீரில் மூழ்கிய வேனுக்குள் தூத்துக்குடியை சேர்ந்த சித்ரவேல், முருகம்மாள், பாலகிருஷ்ணன், அருணா, கைலாஷ், சஞ்சய், விஸ்வா, மேலும் ஒருவர் மற்றும் வேனின் ஓட்டுனர் ஆகியோர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாயினர். நீரில் மூழ்கிய வேன் கிரேன் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது. இது குறித்து தகவலறிந்த முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். இந்த விபத்து குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக