செவ்வாய், பிப்ரவரி 14, 2012

சவூதி அரேபியாவில் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி


 1/1 
துபாய்,பிப்.- 14 - இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் உயர்மட்ட குழுவினர் சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர். இந்தியா-சவூதி அரேபியா இடையே ராணுவ ஒத்துழைப்பு சம்பந்தமாக ஒப்பந்தங்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது. அரபு நாடுகளுடன் இந்தியா சுதந்திரம் வாங்கியதில் இருந்து நல்லுறவை பேணி வருகிறது. அமெரிக்காவின் பகை நாடுகளான ஈராக், ஈரான் ஆகிய நாடுகளுடன் கூட இந்தியாவுக்கு நல்லுறவு உள்ளது. அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அரபு நாடுகளிடையே எண்ணெய் வளம் அதிகம் உள்ள சவூதி அரேபியாவுடனும் இந்தியா தொடர்ந்து நல்லுறவை பேணி வருகிறது. அந்த நாட்டுடன் ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவினர் நேற்று பிற்பகல் தனி விமானம் மூலம் ரியாத் நகருக்கு சென்றனர். அந்தோணியுடன் இந்திய ராணுவ செயலாளர் ஷஷி கே.சர்மா, ராணுவ துணை தலைமை தளபதி எஸ்.கே. சிங், கப்பல் படை ஊழியர் துணை தலைமை தளபதி சதீஷ் சோனி, ஏர்மாஷல், எம்.ஆர். பவார் ஆகியோர் சென்றுள்ளனர். இன்று சவூதி அரேபியாவின் ராணுவ அமைச்சரும் இளவரசருமான சல்மானை ஏ.கே. அந்தோணி சந்தித்து பேசுகிறார். இருநாடுகளிடையே ராணுவ ஒப்பந்தம் இதுவரை செய்யப்படவில்லை என்றாலும் ராணுவம் தொடர்பாக இருநாடுகளிடையே தகவல் பரிமாற்றம் மற்றும் வந்து போவதும் நடந்து வருகிறது. சவூதி உயரதிகாரிகளையும் ஏ.கே. அந்தோணி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது, தீவிரவாதத்தையும் கடல் கொள்ளைகளையும் தடுத்து நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று இந்திய ராணுவ அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக