திங்கள், பிப்ரவரி 13, 2012

முத்தரப்பு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது


 1/1 
அடிலெய்டு, பிப்.- 13 - முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4 - 0 என்ற நிலையில் இழந்தது. இதையடுத்து நடைபெற்ற டுவெண்டி - 20 போட்டியில் 1 - 1 என்ற நிலையில் சமன் செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் பேங்க் சீரிஸ் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா - இலங்கை நாடுகள் விளையாடி வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா 2 வெற்றிகளையும் இந்தியா ஒரு வெற்றி ஒரு தோல்வியை  பெற்ற நிலையில் தங்களது இரண்டாவது லீக் போட்டியில் நேற்று அடிலெய்டில் மோதின. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். ஆஸ்திரேலியாவிற்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் இந்திய வீரர் வினய்குமார். 6 ரன்களை எடுத்திருந்த ரிக்கி பாண்டிங், வினய் பந்தில் விராட் ஹோலியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆஸி.யின் ஸ்கோர் அப்போது 14 ஆக இருந்தது. அடுத்து கேப்டன் மைக்கேல் கிளார்க் களமிறங்கினார். வார்னர்- கிளார்க் ஜோடி மெதுவாக ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. அதிலும் கிளார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 53 ஐ எட்டியபோது 18 ரன்களை எடுத்திருந்த வார்னர், அற்புதமாக ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்ததாக கிளார்க்குடன் அறிமுக வீரர் ஃபாரஸ்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நல்ல முறையில் விளையாடி ரன்களை உயர்த்தியது. இந்நிலையில் அதிரடியாக விளையாடிய கிளார்க் 38 ரன்களை எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் மித வேகமாக வீசிய அற்புதமான பந்தில் கிளீன் போல்டானார். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17.5 ஓவர்களில் 81 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து டேவிட் ஹஸ்ஸி களமிறங்கினார். ஃபாரஸ்ட் மற்றும் ஹஸ்ஸி ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. அதிலும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கிய ஃபாரஸ்ட் மிகச் சிறப்பாக விளையாடி தனது முதலாவது அரை சதத்தை கடந்தார். 71 பந்துகளில் இவர் அரை சதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து டேவிட் ஹஸ்ஸியும் அரை சதம் கடந்தார். இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 35.3 ஓவர்களில் 179 ஆக இருந்தபோது 66 ரன்களை எடுத்திருந்த ஃபாரஸ்ட், உமேஷ் யாதவின் பந்தில் வினய்குமாரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். தொடர்ந்து ஹஸ்ஸியுடன், கிறிஸ்டியன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தது. இந்நிலையில் நல்ல முறையில் விளையாடிக்கொண்டிருந்த ஹஸ்ஸி, ஜாஹீர்கான் பந்தில் சேவாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 72. அப்போது ஆஸ்திரேலிய அணி 44.2 ஓவர்களில் 235 ரன்களை எடுத்திருந்தது. கடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய வாடே இம்முறை பின்வரிசையில் களமிறக்கப்பட்டார். இவரும் கிறிஸ்டியனும் இறுதிக் கட்டத்தில் அதிரடியைக் காட்ட ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களை சேர்த்தது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் வினய்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாஹீர்கான் 1விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் 3 விக்கெட்டுகள் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டன.
தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை துரத்தியது இந்திய அணி. இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சினுக்கு ஓய்வு வழங்கப்பட்டதால் துவக்க வீரர்களாக காம்பீரும் சேவாக்கும் களமிறங்கினர். இந்த ஜோடி நல்ல துவக்கத்தை தந்தது. அணி 52 ரன்களை கடந்தபோது அதிரடி வீரர் சேவாக் 20 ரன்களை எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் ஹஸ்ஸியால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். தொடர்ந்து இளம் வீரர் விராட் ஹோலி களமிறங்கினார். இம்முறை ஹோலி 18 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் ஃபாரஸ்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து காம்பீருடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தது. காம்பீர் அரை சதம் கடந்தார். அணியின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்தபோது ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரிஸின் பந்தில் ஸ்டார்க்கால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். அருமையாக விளையாடிவந்த காம்பீர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் 92 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். அடுத்து அணித் தலைவர் தோனியும், ரெய்னாவும் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். இந்நிலையில் 46.1 ஓவரில் அணியின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்தபோது  ரெய்னா 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோகர்த்தியின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இவர் 8 பந்துகளில் 12 ரன்களை எடுத்த நிலையில் தோகர்த்தியால் அவுட் ஆக்கப்பட்டாலும் தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் இந்திய அணி 49.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தோனி ஆட்டமிழக்காமல் 44 ரன்களுடனும் அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸி. தரப்பில் மெக்கே 3 விக்கெட்டையும், தோகர்த்தி 2 விக்கெட்டையும், ஹாரிஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 92 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட காம்பீர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக