வியாழன், பிப்ரவரி 16, 2012

பாக். விமானத்தின் கழிப்பறையில் பயணிகளை அழைத்துச்சென்ற அவலம்


 1/1 
இஸ்லாமாபாத், பிப்.- 16 - விமானத்தில் இடமில்லாத காரணத்தால் 2 பயணிகளை விமானத்தின் கழிப்பறையில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார் பாகிஸ்தான் விமானி ஒருவர்.  பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமான கம்பெனிக்கு சொந்தமான விமானம் ஒன்று லாகூரில் இருந்து கராச்சிக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தின் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட  நிலையில் 2 பேர் உட்கார இடம் இருக்கவில்லை. உடனடியாக அந்த விமானத்தின் பைலட் அந்த இரு பயணிகளையும் அழைத்து விமானத்தின் கழிப்பறையில் அமர்ந்து வரமுடியுமா என்று கேட்டார். அவர்களும் இதற்கு சம்மதித்தனர். அதனால் கழிப்பறையில் அமர்ந்தபடியே அந்த இரண்டு பயணிகளும்  கராச்சி வந்து சேர்ந்துள்ளனர்.  பெருத்த நஷ்டத்தில் இந்த விமான கம்பெனி இயங்குவதால் இந்த கம்பெனியை நடத்த பாகிஸ்தான் அரசு பெருத்த  முயற்சிகளை எடுத்துவருகிறது. அத்தோடு  வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்குமாறு இந்த விமான கம்பெனி ஊழியர்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அத்தகைய சிறப்பான சேவையை வழங்கத்தானோ என்னவோ அந்த விமானி பயணிகளை இவ்வாறு கழிப்பறையில் அமர வைத்து அழைத்துச்சென்றுள்ளார்.  பஸ்ஸில் எக்ஸ்ட்ரா  டிக்கெட் ஏற்றுவது போன்று இப்போது விமானத்திலும் எக்ஸ்ட்ரா டிக்கெட் போடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக