புதன், பிப்ரவரி 08, 2012

எல்லா துறைகளிலும் உரிமங்கள் ஒதுக்கீடு ஏல முறைதான்


உரிமங்கள் ஒதுக்கீடு: இனி ஏல முறைதான்: மத்திய அரசு அதிரடி முடிவு
 1/1 

புது டெல்லி, பிப்.8 - தொலைத் தொடர்பு துறையில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கடந்த 2008 ம் ஆண்டு 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் பெரியளவில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ.யும், மத்திய கணக்கு தணிக்கை குழுவும் கண்டுபிடித்து உறுதி செய்தன. ரூ. 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்புக்கு காரணமான இந்த கொள்கை முடிவால் ராசா, கனிமொழி உட்பட 14 பேர் கைதாகினர். இது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியையும் தலைகுனிவையும் ஏற்படுத்தியது. எனவே அரசு சொத்துக்களான இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ததில் வேறொரு கொள்கை முடிவை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதற்காக முன்னாள் நிதியமைச்சக செயலாளர் அசோக் சாவ்லா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 
அந்த குழு பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து பல பரிந்துரைகளை மத்திய அரசிடம் அறிக்கையாக கொடுத்துள்ளது. அதில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்பது சில பெரிய நிறுவனங்களின் ஏகாதிபத்யத்துக்கு வழிவகுத்து விடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உரிமங்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏல முறைதான் சிறந்தது என்றும் அந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மின்னணு ஏல முறையையும் கடைப்பிடிக்கலாம் என்று கூறியுள்ளது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே மத்திய அரசின் எல்லா துறைகளிலும் ஏல முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக