புதன், மார்ச் 28, 2012

பிரிட்டன், ஆஸ்திரேலியத் தூதர்கள் முதல்வருடன் சந்திப்பு

சென்னை, மார்ச்.28 - பிரிட்டன், ஆஸ்திரேலியத்தூதர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தமிழ்நாட்டின் தொலைநோக்குத்திட்டம் 2023 க்கு நெஞ்சார வாழ்த்தி பாராட்டுத் தெரிவித்தனர். பிரிட்டன் தூதர் சந்திப்பு: டில்லியில் உள்ள இந்தியாவிற்கான பிரிட்டன் தூதர் ஜேம்ஸ் பீவன் மற்றும் சென்னையில் உள்ள துணைத்தூதர் மைக் நிரித விரியானாகீஸ் ஆகியோர் நேற்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தனர்.அப்போது தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற வைத்து, முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ அரும்பாடுபடும் முதல்வரை ஜேம்ஸ் பீவன் பாராட்டினார்.முதல்வரின் இத்தகைய முயற்சியில் தாங்களும், தங்கள் நாடும் பங்குபெற ஆவலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.அதற்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கும் அவர்களுக்கு தேவையான உதவிச் செய்ய அரசு நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ஆஸ்திரோலியத் தூதர் சந்திப்பு:

இதேபோல இந்தியாவிற்கான ஆஸ்திரேலியத்தூதர் பீட்டர்வர்கீசும் துணைத்தூதர் டேவிட் ஹோலி மற்றும்(வர்த்தகத்துறை) துணைத்தூதர் மைக்கேல் கார்ட்டர் ஆகியோர் நேற்று தலைமைச் செலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தனர்.அவர்களை அன்புடன் முதல்வர் வரவேற்றார்.முதல்வருடன் நடத்திய விவாதத்தின் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, அதிக வளர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ள தமிழகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், அதுவும் குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக வளர்த்து வருவதாகவும், அதற்கு வழிவகுக்கும் வகையில் 2023 தொலைநோக்குத்திட்டம் இருப்பதாகவும் பீட்டர் வர்கீஸ் குறிப்பிட்டார்.தமிழகத்தின் இந்த வளர்ச்சிப் பாதையில், தொழில்கல்விப்பயிற்சிகள், எரிசக்தி, ஆழ்கடல் மீன் பிடிப்பு குறைந்த செலவிலான வீட்டுவசதிகட்டுமானம், மற்றும் கலாசார, பரிமாற்றத்திட்டங்கள் போன்ற பலதுறைகளில் தமிழகத்துடன் ஒத்துழைப்பு அளிக்க தயாராயிருப்பதாக பீட்டர் வர்க்கீஸ் தெரிவித்தார்.இறுதியில் தமிழக வளர்ச்சியில் பங்கேற்க முன்வரும் ஆஸ்திரேலிய முயற்சிக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக