புதன், மார்ச் 28, 2012

பிரதமர் மன்மோகன் சிங்குடன் கிலானி சந்திப்பு


சியோல், மார்ச் 28 - தென் கொரியா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானி நேற்று சியோல் நகரில் சந்தித்து பேசினார். நான்கு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் தென் கொரியா சென்றுள்ளார். அங்கு சர்வதேச அணுசக்தி மாநாட்டில் அவர் பங்கேற்றார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பிரான்ஸ் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசி உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கு கொண்டனர். இந்த மாநாட்டின் புற நிகழ்ச்சியாக பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஜா கிலானி சந்தித்து பேசினார்.

இந்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டு உறவுகள் குறித்து இருவரும் கூடிப்பேச தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது பரஸ்பரம் இரு நாடுகளும் ஆர்வம் கொண்டுள்ள துறைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வரும் நம்பிக்கையின்மையை அகற்றி பரஸ்பரம் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இரு நாட்டு தலைவர்களின் நோக்கம் நன்றாகவே இருக்கிறது என்றும் ஆனால் இரு தரப்பு உறவில் ஒரு புதிய உத்தியை பின் தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இரு தலைவர்களும் கருத்து கூறியதாக அவர் மேலும் கூறினார். பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்கு ஆசிய சங்கம் பாகிஸ்தானுக்கு ஒரு முக்கியமான மேடையாக இருக்கிறது என்றும் ஹீனா ரப்பானி கர் கூறினார்.

இதுபோன்ற பிராந்திய ஒத்துழைப்பு மன்றங்களை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஜூலை மாத பாகிஸ்தான் வருகையை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். சர்வதேச அணு சக்தி மாநாட்டின் துவக்க நாள் அன்று நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் மன்மோகன் சிங்கும் கிலானியும் கை குலுக்கி கொண்டதை தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக