சனி, மார்ச் 10, 2012

முஸ்லிம்களை கண்காணிக்கும் நியூயார்க் போலீஸ்: மேலும் ஆதாரங்கள் வெளியீடு!


நியூயார்க்:முஸ்லிம்களையும் அவர்களின் நிறுவனங்களையும் நியூயார்க் போலீஸ் கண்காணித்து வருவது குறித்த மேலும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மதத்தின் அடிப்படையிலேயே நியூயார்க் போலீஸ் முஸ்லிம்களை கண்காணிப்பதை நிரூபிக்கும் விதமாக அசோசியேட் ப்ரஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

சிரியா, எகிப்து, அல்பேனியா ஆகிய நாடுகளில் இருந்து குடியேறியவர்களை நியூயார்க் போலீஸ் கண்காணிக்கிறது. 2007-ஆம் ஆண்டு சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள் முஸ்லிம்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டனர். சிரியாவில் இருந்து குடியேறியவர்களில் பெரும்பாலோர் யூதர்களாக இருந்த போதிலும் முஸ்லிம்களை மட்டுமே கண்காணிக்க பணிக்கப்பட்டோம் என்று போலீஸ் அறிக்கை கூறுகிறது.

முஸ்லிம்களின் வசிப்பிடங்கள், வியாபார ஸ்தாபனங்கள், மஸ்ஜிதுகள் ஆகியவற்றின் புகைப்பட்டங்களை பதிவுச் செய்வது, ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பலகார கடைகள் ஆகியவற்றில் சென்று முஸ்லிம்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்பது, ரகசியமாக முஸ்லிம்கள் குறித்த விபரங்களை சேகரிப்பது ஆகிய பணிகளை போலீஸார் முக்கியமாக மேற்கொண்டுள்ளனர்.

எகிப்தைச் சார்ந்த காப்டிக் கிறிஸ்தவர்களையும், அல்பேனியா குடியேற்றக்காரர்களில் இதர மதத்தவர்களையும் தவிர்த்து முஸ்லிம்கள் மட்டுமே கண்காணிக்கப்பட்டனர் என்று போலீஸ் அறிக்கை கூறுகிறது.

முன்பு இதைப் போன்றதொரு குற்றச்சாட்டு எழுந்தவேளையில் அவ்வாறு தாங்கள் முஸ்லிம்களை கண்காணிக்கவில்லை என்று போலீஸார் மறுப்பு தெரிவித்தனர். ஆனால், பின்னர் ஆதாரங்கள் வெளியான பிறகு பாதுகாப்பு பீதியை குறித்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில் கண்காணித்ததாக போலீஸ் விளக்கம் அளித்தது.

தற்போது நியூயார்க் போலீஸ் பல்டியடித்துள்ளது. பாதுகாப்பு பீதியை முன்னிட்டு கண்காணிக்கவில்லை என்றும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணித்ததாகவும், மதத்தின் அடிப்படையில் கண்காணிக்கவில்லை என்றும் நியூயார்க் மேயர் மிகாயேல் ப்ளூம்பர்க் புதிய விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அவருடைய கூற்றை மறுக்கும் விதமாக புதிய ஆவணங்கள் அமைந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக