ஞாயிறு, மார்ச் 11, 2012

இலங்கையை இந்தியா ஆதரிக்கக்கூடாது: விஜயகாந்த்!


சென்னை: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தேமுதிக தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான நடிகர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரப்பட்டுள்ள மனித உரிமை மீறல் தீர்மானத்தின் மீது ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா இலங்கையை எதிர்த்து வாக்களிக்கவேண்டும் என நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக நேற்று(சனிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"இலங்கையில் விடுதலைப் புலிகளை எதிர்த்து அந்த அரசு நடத்திய போரில் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மன்றம் நிபுணர் குழுவை அமைத்து விசாரித்தது.
மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது; இலங்கை போர்க் குற்றவாளிதான் என்றும் உணரப்பட்டு இலங்கை அரசுக்கும் அது தெரிவிக்கப்பட்டது. இலங்கை அரசு, தானே ஒரு குழுவை அமைத்து விசாரித்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளும் வெளி வந்துள்ளன. இலங்கை அதையும் நிறைவேற்றவில்லை.
இன்று இலங்கையில் தமிழ்ப் பகுதியில் தமிழ் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இளைஞர்கள் சிங்கள இராணுவத்தினரால் கடத்திக் கொல்லப்படுகின்றனர். இளம் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். தமிழ்ப் பகுதிகளில் சிங்கள இனவெறி அரசின் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இன்னும் உள்ளனர்.

தமிழ்ப் பகுதிகள் இராணுவ ஆக்கிரமிப்பிலேயே இன்றும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மனித உரிமைகளின் பேரால், சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து ஜனநாயக நாடுகளின் சார்பில் அமெரிக்க நாடு, ஜெனீவாவில் கண்டனத் தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானம் முழு அளவிற்கு நமக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், இதை நிறைவேற்றுவதன் மூலம் சிங்கள இனவெறி அரசை உலக அபிப்பிராயத்தின் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியும்.
இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். மனித உரிமைக் குழுவில் ஒரு குறிப்பிட்ட நாட்டை எதிர்த்து கண்டனத் தீர்மானம் கொண்டு வரக் கூடாது என்று இந்தியா கூறி வருகிறது. இதன் மூலம் சிங்கள இனவெறி அரசைக் காப்பாற்ற முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு முழு மனதோடு ஆதரிக்க வேண்டும். நடுநிலை வகிப்பதையோ அல்லது அந்த தீர்மானம் வருகின்றபோது அதில் கலந்து கொள்ளாமல் இருப்பதையோ மேற்கொண்டால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது."
மேற்கண்டவாறு தன்னுடைய அறிக்கையில் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக