வியாழன், ஏப்ரல் 26, 2012

”குடிமகன்களால் வருமானம் 18 ஆயிரம் கோடி”

2011 - 2012 ஆண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு கிடைத்திருப்பதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த வருமானத்தை மேலும் பெருக்கிட எலைட் என்ற உயர்ரக மதுவகைகள் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீது அமைச்சர் நத்தம் விசுவநாதன் கொள்கை விளக்கக் குறிப்புகளை சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபான விற்பனையை தனியார் விற்பனை செய்து வந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கு பதிலாக சில்லரை விற்பனை செய்யும் உரிமையை அரசுக்கு முழுவதும் சொந்த நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்துக்கு வழங்குவது என்று 2003-ம் ஆண்டு துணிச்சலான முடிவை அ.தி.மு.க., அரசு எடுத்தது. இதன்மூலம் தனியார் செய்து வந்த தீர்வை செலுத்தப்படாத மதுபான விற்பனை தடுக்கப்பட்டு அரசு வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது குறித்த விவரம் வருமாறு: ரூ.3 ஆயிரத்து 639.93 கோடி ( 2003-2004) , ரூ.4ஆயிரத்து 872.03 கோடி ( 2004-2005 ) , ரூ.6 ஆயிரத்து 030.77 கோடி( 2005-2006), ரூ.7ஆயிரத்து 473.61 கோடி ( 2006-2007) , ரூ.8 ஆயிரத்து 821.16 கோடி (2007-2008 ), ரூ.10 ஆயிரத்து 601.50 கோடி ( 2008-2009 ) , ரூ.12 ஆயிரத்து 498.22 கோடி( 2009-2010 ) , ரூ.14 ஆயிரத்து 965.42 கோடி ( 2010-2011 ) , ரூ.18 ஆயிரத்து 081.16 கோடி (2011-2012 ) மொத்த வருவாய் கிடைத்துள்ளது. எனவே உயர்தர மதுபானம் தயாரிக்க தேவைப்படும் சாராவி தயாரிக்கும் வடிப்பாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக