திங்கள், ஏப்ரல் 09, 2012

அசாம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து

கோலாகாட்(அசாம்), ஏப். - 9 - அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு உல்பா பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இது தொடர்பாக சுத்திகரிப்பு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், மாலை 6.30 மணியளவில் ஆலையில் பெரும் வெடி சப்தம் கேட்டது. அதை தொடர்ந்து ஆலையில் தீப்பற்றியது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். பல மீட்டர் உயரத்திற்கு தீ ஜூவாலை கிளம்பியதால் சுமார் 15 கி.மீ. தூரம் சுற்றளவில் உள்ளவர்கள் ஆலையில் தீப்பற்றியதை அறிந்துள்ளனர். தீ பரவியவுடன் அனைவரும் வெளியேறி விட்டதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பின் இரவு 9 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. சேத மதிப்பு குறித்து மதிப்பிட்டு வருகிறோம். தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார். அதே நேரத்தில் இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று உல்பா பயங்கரவாதிகள் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு இமெயில் அனுப்பி உள்ளனர். அதில் தங்கள் எழுச்சி நாளை முன்னிட்டு நவீன வெடிகுண்டு மூலம் இந்த பெரும் தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாகவும், போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக