செவ்வாய், ஏப்ரல் 24, 2012

மலேசியாவில் சிபிஐ அதிகாரிகள்: தயாநிதி-ஏர்செல்-மேக்சிஸ் 'டீல்' விசாரணை தீவிரம்!

டெல்லி: முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் சம்பந்தப்பட்ட 2ஜி-ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் பணப் பரிவர்த்தனை குறித்து விசாரிக்க சிபிஐ குழு மலேசியாவில் முகாமிட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார் தயாநிதி மாறன். அந்த காலகட்டத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்தது. ஆனால், லைசென்ஸ் தராமல் தயாநிதி மாறன் இழுத்தடித்ததாகவும், மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அனந்த கிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் சிவசங்கரன் சிபிஐயிடம் வாக்குமூலம் தந்தார். கடும் நெருக்கடியால் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்ற பிறகுதான், ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்சை தயாநிதி மாறன் கொடுத்ததாகவும் சிவசங்கரன் கூறினார். இதற்கு பிரதிபலனாக, தயாநிதி மாறன் குடும்பத்துக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ ஆல் ஏஷியா என்ற நிறுவனம் ரூ.547 கோடியை முதலீடு செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதன் அடிப்படையில், தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் டி.அனந்த கிருஷ்ணன், ஆஸ்ட்ரோ ஆல் ஏஷியா மற்றும் மேக்சிஸ் ரால்ப் மார்ஷல் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் மீது சிபிஐ கடந்த அக்டோபர் மாதம் வழக்குப் பதிவு செய்தது. தயாநிதி மாறனின் சென்னை, டெல்லி வீட்டிலும் அலுவலகங்களிலும் சிபிஐ சோதனையும் நடத்தியது. இந்த விவகாரத்தில் லண்டன், பெர்முடா, மலேசியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் பணப் பரிவர்த்தனை நடந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து இந்த பணப் பரிவர்த்தனை பற்றிய தகவல்களை அளிக்குமாறு இந்த 4 நாடுகளுக்கும் சிபிஐ நீதிமன்றம் கடிதம் அனுப்பியது. இந் நிலையில், பணப் பரிவர்த்தனை பற்றிய தகவல்களை திரட்டுவதற்காக சிபிஐ குழு இப்போது மலேசியா சென்றுள்ளது. மலேசிய சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகளை இந்தக் குழு சந்தித்து பேசி தகவல்களை திரட்டி வருகிறது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மலேசியாவின் மேக்சிஸ் நிறுவன அதிகாரிகளிடமும் சிபிஐ வாக்குமூலம் பெறவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக