சனி, ஏப்ரல் 07, 2012

ராமஜெயம் படுகொலை - காயின் போட்டுப் பேசும் தொலைபேசி மூலம் துப்பு கிடைத்தது!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மார்ச் 29 ம் தேதியன்று மர்மநபர்களால் கடத்திப் படுகொலை செய்யப் பட்டார். ராமஜெயம் சயனைடு விஷம் கொடுத்துப் படுகொலை செய்யப் பட்டுள்ளார் எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ராமஜெயத்தைக் கொலை செய்த கொலையாளிகளைப் பிடிக்க 7 தனிப் படைகள் அமைக்கப் பட்டு விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீ ரங்கம் கோவில் முன்பு இருந்த காயின் போட்டுப் பேசும் தொலைபேசியில் இருந்து சிலர் அடிக்கடி பேசியதாக காவல்துறைக்குக் கிடைத்த தகவலை அடுத்து அந்த தொலைபேசியில் இருந்து யாருக்கெல்லாம் பேசப் பட்டது என்று விசாரணை நடத்தப் பட்டது. விசாரணையில், காயின் போட்டுப் பேசும் தொலைபேசியில் இருந்து திருநெல்வேலியில் உள்ள ஒரு நம்பருக்கு அடிக்கடிப் பேசி இருப்பது காவல்துறையினருக்குச் சந்தேகத்தை கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நடத்தப் பட்ட விசாரணையில் திருநெல்வேலி உள்ள செல்போன் எண்ணில் இருந்து சென்னையில் உள்ள இரு செல்போன் நம்பருக்கு பேசியுள்ளதன் அடிப்படையில் சென்னையில் இருவரைக் கைது செய்து காவல்துறை விசாரித்து வருவதாகத் தெரிகிறது. மேலும் அந்த செல்போன் நம்பருக்கு தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் சாந்தியும் தொடர்பு கொண்டு பேசியுள்ளது விசாரணையில் தெரிய வந்து காவல்துறையினர் அதிமுக கவுன்சிலர் சாந்தியையும் அவரது கணவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். காவல்துறை விசாரணைக்குப் பின்னர் அதிமுக கவுன்சிலர் சாந்தி விடுவிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக