வெள்ளி, ஏப்ரல் 13, 2012

ஊட்டி பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ணமலர்கள்

ஊட்டி, ஏப்.13 - ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ணமலர்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் பரவசமடைந்தனர். ஊட்டி விஜயநகரம் பகுதியில் தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமான சுமார் 5 ஹெக்டேர் நிலப்பரப்பில் கடந்த 1993 ம் ஆண்டு அ.தி.மு.க.,ஆட்சிக்காலத்தில் ரோஜா பூங்கா துவங்கப்பட்டது. இப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மஞ்சள், பச்சை, கருப்பு, சிவப்பு, இளம்சிவப்பு, நீலம் உள்ளிட்ட 3600த்திற்கும் அதிகமான ரகங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இப்பூங்காவில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் ரோஜா காட்சி நடத்தப்படும். அதன்படி இந்தாண்டுக்கான ரோஜா காட்சி வரும் மே மாதம் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. தற்போது இப்பூங்காவில் உள்ள ரோஜா செடிகளில் பல வண்ண ரோஜாமலர்கள் பூத்துக்குலுங்க துவங்கியுள்ளன. ரோஜா காட்சி நடக்கும் நாட்களில் அனைவரின் கண்ணைப்பறிக்கும் வகையில் அனைத்து செடிகளிலும் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கும். இதனைக் காண கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களை பார்த்து விதவிதமான பல வண்ணங்களில் உள்ள மலர்களின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ச்சிக்கடலில் நெகிழ்ந்து செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக