புதன், மே 09, 2012

எந்த சவாலையும் சந்திக்க ராணுவம் தயாராக இருக்கிறது



திருவனந்தபுரம்,மே.9 - எந்த சவாலையும் சந்திக்க இந்திய ராணுவத்தின் முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதாக தலைமை தளபதி வி.கே. சிங் கூறியுள்ளார். பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங் நாளை ஓய்வு பெறுகிறார். இந்தநிலையில் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வி.கே. சிங் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்திய ராணுவமானது வெளியில் இருந்து வரும் எந்த சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறது. அதற்கான தளவாடங்கள், போர் கருவிகள் போதுமான அளவில் உள்ளது என்றார். உங்கள் வயது விவகாரத்தை நீங்கள் கைவிட்டுவிட்டீர்களா அல்லது மத்திய அரசு கைவிட்டுவிட்டதா என்று நிருபர்கள் கேட்டதற்கு இந்த பிரச்சினையை நான் அனைவரும் கைவிட்டுவிட வேண்டும் என்று கூறி தப்பித்துக்கொண்டார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ராணுவ நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் உம்மன்சாண்டி கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினார். வடகிழக்கு மாநிலங்களின் வளமும் பலதரப்பட்ட கலாசாரம் என்ற தலைப்பில் இந்த புத்தகம் 3 பகுதிகளாக வெளியிடப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வி.கே. சிங் ரகசியமாக எழுதிய கடிதம் வெளியாகிவிட்டது. அதில் இந்திய ராணுவத்திற்கு போதுமான ஆயுதங்கள் இல்லை. இருக்கும் ஆயுதங்களும் பழமையானவைகள் என்று கூறியிருந்ததாக செய்தி வெளியாகியது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையொட்டி வெளிநாடுகளில் ஆயுதம் வாங்கும் முயற்சியில் மத்திய அரசும் ராணுவ அமைச்சகமும் மும்முரமாக இறங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக