புதன், மே 09, 2012

10 விமானிகள் நீக்கம்: ஏர்-இந்தியா அதிரடி



புதுடெல்லி, மே 9 - போராட்டம் நடத்திய 10 விமானிகளை ஏர் இந்தியா நிறுவனம் டிஸ்மிஸ் செய்துள்ளது. மேலும் விமானிகள் தொழிற்சங்க அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு அவ்வப்போது நிதி உதவி அளித்து வருகிறது. தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் உள்ளிட்ட பல்வேறு நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் விமானங்களை ஓட்ட முடியாது என்றும் சுமார் 160 ஏர் இந்தியா நிறுவன விமானிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 10 விமானிகள் பணிக்கு வர மறுத்துவிட்டனர். இதனால் அவர்களை ஏர் இந்தியா நிறுவனம் அதிரடியாக பணியிலிருந்து நீக்கியது. இதனால் ஏர் இந்தியாவின் 5 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. டெல்லி - டொரண்டோ, டெல்லி - சிகாகோ, மும்பை -நியூயார்க், மும்பை - ஹாங்ஹாங் ஆகிய இந்த 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் விமான பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள். விமானிகள் கிடைக்காததால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய விமானிகள் தொழிற்சங்க அங்கீகாரத்தையும் ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்தது. விமானிகளின் போராட்டத்திற்கு காரணமானவர்கள் மீது ஏர் இந்தியா நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங் கூறினார். வேலை நிறுத்தம் குறித்து எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை. இவர்கள் உடல்நிலையை காரணம் காட்டி விடுப்பு கொடுத்துவிட்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 160 விமானிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது ஏர் இந்தியா நிறுவனம் உரிய நடவடிக்கையை எடுக்கும் என்றும் அவர் கூறினார். ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கை விமானிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக