சனி, மே 12, 2012

ஏர் இந்தியா பைலட்டுகளுக்கு அஜித்சிங் வேண்டுகோள்

புதுடெல்லி, மே 12 - ஏர் இந்தியா பைலட்டுகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துக்கழக துறை அமைச்சர் அஜித்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவின் சுமார் 200 பைலட்டுகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4 வது நாளாக இந்த வேலை நிறுத்தம் நீடித்தது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அஜித்சிங் ஒரு ஆலோசனையை கூறியுள்ளார். பைலட்டுகள் தங்களது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினால் அவர்களுடன் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்று அஜித்சிங் கூறியுள்ளார். ஏர் இந்தியா நிறுவனமும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள பைலட்டுகளும் தங்களது பிடிவாத நிலையை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பிடிவாதமாக இருப்பது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. பேச்சு நடத்து வேண்டும் என்று பைலட்டுகள் விரும்பினால் அவர்கள் முதலில் பணிக்கு வரவேண்டும். அதன்பிறகு அவர்களது பிரச்சனைகளுக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வுகாண முடியும். பைலட்டுகளின் இந்த வேலை நிறுத்த போராட்டம் சட்டவிரோதமானது என்று டெல்லி ஐகோர்ட்டே கூறிவிட்டது. எனவே பைலட்டுகள் தங்களது பிடிவாதத்தை தளர்த்தி பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அஜித்சிங் கேட்டுக்கொண்டார். முன்னதாக பைலட்டுகள் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அஜித்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது இந்த முட்டுக்கட்டைக்கு தீர்வுகாணாமல் பிரச்சனையை அரசு இழுத்துக்கொண்டே போவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அஜித்சிங் மேற்கண்ட பதிலை அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக