வெள்ளி, மே 11, 2012

இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


புதுடெல்லி, மே - 11 - இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்துள்ளது. சுற்றுலா துறையில் இந்தியா ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருவது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பாராளுமன்றத்தின் ராஜ்யசபையில் சுற்றுலா துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு 62 லட்சத்து 90 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர் என்றும், இது 9 சதவீத வளர்ச்சி என்றும் குறிப்பிட்டார். கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு 57 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தனர் என்றும் அவர் கூறினார். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்த விபரங்களை இந்திய சுற்றுலா துறை சேகரிக்கவில்லை என்றாலும் சுங்கத்துறை வாயிலாக இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன என்றும் 3 மாதங்களுக்கு ஒருமுறை சுங்கத்துறை இதுபோன்ற புள்ளி விபரங்களை வெளியிட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஊரக சுற்றுலா திட்டத்தை அபிவிருத்தி செய்யவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். சாலைகள், பூங்கா வடிவமைப்பு, கழிவு பராமரிப்பு, சுகாதார மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். கிராமப்புற சுற்றுலா திட்டத்தை மேம்படுத்த அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதற்கு அவர் வரவேற்பு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக