புதன், மே 16, 2012

விமானவிபத்தில் பிரபலகுழந்தை நட்சத்திரம் தரிணியும் பலியானார்


சென்னை, மே.- 16 - நேபாள விமான விபத்தில் இறந்த தமிழர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது: இந்த விபத்தில் இறந்த 15 பேர்களில், பிரபல குழந்தை நட்சத்திரம், தரணியும் ஒருவர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்த விபரம் வருமாறு:- 108 திவ்ய வைணவத் தலங்களில் முக்திநாத் என்னும் தலம் நேபாள நாட்டில் உள்ளது. கோடை காலத்தில் இந்த தலத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் சென்று வருவதுண்டு. முக்திநாத் தலத்துக்கு செல்பவர்கள் காட்மண்ட்டில் இருந்து விமானத்தில் திபெத் எல்லை அருகே தொரோஸ்லா இமயமலைக் கணவாய் அருகே உள்ள ஜோம்சோம் விமான நிலையத்துக்கு சென்று பிறகு காரில் செல்லவேண்டும். நேற்று முன்தினம் அப்படி சென்ற 21 யாத்ரீகர்களின் விமானம் எதிர்பாராதவிதமாக மலையில் மோதி விபத்துக்குள்ளானது. அக்னி ஏர் என்னும் விமான நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் டோர்னியர் ரகத்தைச் சேர்ந்தது. கடல் மட்டத்தில் இருந்து 2,600 மிட்டர் உயரத்தில் இருக்கும் ஜோம்சோம் விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மலையில் மோதி நொறுங்கியது. விமானத்தில் இருந்த 21 பேரில் 15 பேர் பலியானார்கள். அவர்களில் 11 பேர் யாத்ரீகர்கள். 2 பேர் விமானிகள். 2 பேர் டென் மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள். பலியான வர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரின் மனைவி லதா. மற்றொருவர் கும்பகோணத்தைச் சேர்ந்த பட்டாச் சாரியார் எல்.எஸ். சுதர்சனம். லதாவின் கணவர் ஸ்ரீகாந்த், அவரது 2 மகள்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார்கள். பொகார நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல் கள் பொகார மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிறகு காட்மண்டுக்கு எடுத்து வரப்பட்டது. பலியானவர்கள் யார்​யார் என்ற விசாரணை நடந்தது. அப்போது பலியான வர்களில்மேலும் 2 பேர் தமிழகத்தைசேர்ந்தவர்கள் எனதெரிய வந்தது. ஒருவர் பெயர் சொர்ணலட்சுமி, மற்றொருவர் கோபி . இரு வரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதுபற்றி உறுதியான தகவலை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பலியான தமிழர்களின் உடல்களை நேற்றே சென்னை கொண்டு வர தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி அசோகன் ஏற்பாடு செய்துள்ளார். நடிகர் அஜ்மல் ஹீரோவாக நடிக்கும் படம் ாவெற்றிச்செல்வன்ா இப்படத்தில் 2-வது கதாநாயகியாக நடித்து வந்தவர் தருணி. மும்பையை சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் படத்தில் அறிமுகமான தருணி ஏற்கனவே மலையாளத்தில் வெள்ளி நட்சத்திரம் சத்யம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். நேபாள கோயிலில் சாமி கும்பிட அம்மாவுடன் சென்ற போதுவிபத்தில் சிக்கி இறந்துள்ளார். இது பற்றி ாவெற்றிச்செல்வன்ா தமிழ்திரைப்பட இயக்குனர் ருத்ரன் கூறியதாவது: வெற்றிச்செல்வன் படத்தில் அஜ்மல், ராதிகா ஆப்தே ஜோடியாக நடிக்கின்றனர். ராதிகாவின் தோழியாக தருணி நடிக்கிறார். ஏற்கனவே நான் இயக்கிய விளம்பர படங்களில் தருணி நடித்திருக்கிறார். இந்நிலையில் அமிதாபச்சன், அபிஷேக் பச்சன் நடித்த பா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழில் இப்போதுதான் அறிமுகமாகிறார். சமீபத்தில் ஊட்டியில் நடத்த ஷூட்டிங்கில் தருணி கலந்து கொண்டார். ராதிகாவுடன் அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. எப்போதும் கலகலப்பாக பேசுவார். ஜீன்ஸ், மல்டி கலர் டாப்ஸ் விரும்பி அணிவார். நேபாளத்துக்கு கோயிலுக்கு செல்ல போகிறேன். எனக்கு பிடித்த ஜீன்ஸ், மல்டி கலர் டாப்ஸ் அனுப்பி வையுங்கள் என்று விரும்பி கேட்டார். அதை பார்சலில் அனுப்பி வைத்தேன். 2 நாட்களுக்கு முன்புதான் அது அவருக்கு கிடைத்திருக்கிறது. 25-ம் தேதி ஷூட்டிங் வந்துவிடுவேன் டிக்கெட் போட்டு வையுங்கள் என்று கூறினார். இது தான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை. தருணி நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்த நிலையில் இறந்துவிட்டார். அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்கும் எண்ணம் இல்லை. அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம் பெறும். அதை வெட்டும் எண்ணமும் கிடையாது. இதுதான் அவருக்கு நான் செய்யும் அஞ்சலி. தருணியை எனக்கு அறிமுகப்படுத்திய ருக்மணிதான் அவர் இறந்த தகவலை நேற்று காலை தெரிவித்தார். இவ்வாறு ருத்ரன் கூறினார். விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் நேபாளம் விரைந்துள்ளனர். உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இந்திய தூதரக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக