புதன், மே 16, 2012

ஏர் இந்தியா பணிநிறுத்தத்தால் பயணிகள் அவதி


இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானிகள் ஏழாவது நாளாகவும் பணிநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குறைந்தது 14 ஏர் இந்தியா விமானங்களின் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் மாட்டிக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிறுவனத்திடமிருந்து முறையான அறிவுறுத்தல்கள் இல்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர். தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம், மனித உரிமை, உலகம், மன்மோகன் சிங், காங்கிரஸ் கடந்த சில தினங்களில் மட்டும் 70க்கும் அதிகமான விமானிகளை ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இதேவேளை, பணிநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விமான சேவைகளுக்கான அமைச்சர் அஜித் சிங் விமானிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டும் குறைந்தது 8 சர்வதேச சேவைகளையும் 6 உள்ளுர் சேவைகளையும் ஏர் இந்தியா நிறுவனம் ரத்துசெய்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். புதிய போயிங் 787 விமானங்களுக்கான பயிற்சிகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனைக்கு மத்தியில் குறைந்தது 200 விமானிகள் கடந்த செவ்வாய்க் கிழமையிலிருந்து சுகயீன லீவு போராட்டத்தில் உள்ளனர். 2007ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட இந்திய விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானிகளுக்கு புதிய விமானங்களை ஓட்ட பயிற்சியளிக்கும் தீர்மானத்தை ஏர் இந்தியா விமானிகள் எதிர்க்கின்றனர். விமான நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கப்படுவதற்கு முன்னரே, இந்த புதிய விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் போடப்பட்டதால் தமக்கே பயிற்சியில் முன்னுரிமை வேண்டும் என்று விமானிகள் வாதிடுகின்றனர். பணி நிறுத்தப் போராட்டம் தொடங்கிய மறுநாளே 'இந்தப் போராட்டம் சட்டமுரணானது, விமானிகள் வேலைக்குத் திரும்ப வேண்டும்' என்று தில்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது. எனினும் பெரும்பாலான விமானிகள் வேலைக்குத் திரும்ப மறுத்துவருகின்றனர். இந்த நிலைமையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நோக்கிச் செல்லும் விமான சேவைகளுக்கான பயணச் சீட்டு விநியோகத்தை மே 15ம் திகதி வரை நிறுத்திவைத்துள்ளதாக ஏர் இந்தியா கடந்த வாரம் தெரிவித்திருந்தது. கடந்த வெள்ளியன்று, விமான சேவைகளுக்கான அமைச்சர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேச்சு நடத்தியிருந்தார். நிதி நெருக்கடியில் இருக்கின்ற இந்த ஏர் இந்தியா நிறுவனம் அண்மைக்காலமாகவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக