வியாழன், மே 17, 2012

சர்வதேச விமானங்களை ஏர்இந்தியா இயக்கியது


புதுடெல்லி, மே - 17 - பைலட்டுகள் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான போக்குவரத்து சேவையை சகஜ நிலைக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுக்கு நேற்று சர்வதேச விமானங்களை இயக்கியது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவின் சுமார் 200 பைலட்டுகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் இந்த போராட்டம் சட்ட விரோதமானது என்று டெல்லி ஐகோர்ட்டு கூறியிருந்த போதிலும்கூட இவர்கள் தங்களது வேலைநிறுத்தத்தை கைவிடவில்லை. பைலட்டுகளின் வேலை நிறுத்தம் நேற்று 9 வது நாளாக நீடித்தது. பைலட்டுகளின் போராட்டத்தால் கடந்த 8 நாட்களாக சர்வதேச விமான போக்குவரத்தை ஏர் இந்தியா நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தனது விமான போக்குவரத்து சேவையை சகஜ நிலைக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ஏர் இந்தியா நேற்று சர்வதேச விமானங்களை இயக்கியது. இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த நாடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். கடந்த எட்டு நாட்களாக சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. ஆனால் நேற்று ஏர் இந்தியா நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு சர்வதேச விமானங்களை இயக்கியதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். விரைவில் தங்களது விமான போக்குவரத்து சேவை சகஜ நிலைக்கு திரும்பிவிடும் என்று ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று டெல்லி-பாரீஸ்-நியூயார்க், டெல்லி-பிராங்பர்ட்-சிகாகோ விமானங்கள் இயக்கப்பட்டன. டெல்லி - ஷாங்காய், டெல்லி - லண்டன் சர்வதேச விமானங்களும் நேற்று இயக்கப்பட்டதாக அவர் அறிவித்தார். மும்பை - லண்டன், மும்பை - ஷாங்காய் விமான சேவை டெல்லி - லண்டன், டெல்லி- ஷாங்காய் விமான சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு டிக்கெட் பதிவு செய்தவர்கள் நேற்று இந்த சர்வதேச விமானங்களில் அனுப்பிவைக்கப்பட்டனர். பைலட்டுகளின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு முடிவுகட்ட மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினால் பைலட்டுகளுடன் பேச்சு நடத்த தயார் என்று சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத்சிங் ஏற்கனவே கூறியிருக்கிறார். ஆனால் இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் நேற்று மாலை வரை புலப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக