வெள்ளி, மே 25, 2012

டீசல் விலையும் உயருகிறது..!


புது டெல்லி, மே. 25 - பெட்ரோல் விலை உயர்வால் நாட்டு மக்கள் பெருத்த அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. பெட்ரோல் விலையைப் போல டீசல் விலையையும் உயர்த்தலாமா என்பது பற்றி மத்திய அரசு இன்று முடிவு எடுக்கிறதாம். இது எப்படி இருக்கு? பெட்ரோல் விலை நேற்று முன்தினம் ஒரு லிட்டருக்கு ரூ. 7.54 வீதம் உயர்த்தப்பட்டது தெரிந்ததே. இதனால் அதிர்ச்சி அடைந்த நாட்டு மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் மத்திய அரசை சபித்துக் கொண்டிருக்கிறார்கள். வாகனங்களை மூட்டை கட்டி விடலாமா என்றும் அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீள்வதற்குள் அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. எல்லாம் இரு கோடுகள் தத்துவம்தான் போலும். ஒரு அதிர்ச்சி வந்து தாக்கும் போது மற்றொரு பெரிய அதிர்ச்சி உடனே வந்தால் முன்பு வந்த அதிர்ச்சி சிறியதாகி விடுமாம். இதுதான் சினிமா இயக்குனர் பாலச்சந்தரின் இரு கோடுகள் தத்துவம். இந்த தத்துவம் மத்திய அரசுக்கு எப்படியோ தெரிந்து விட்டது போலும். அதனால்தான் டீசல் விலையையும் உயர்த்தப் போகிறார்களாம். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அரசு குழு இன்று கூடி டீசல் விலையை உயர்த்துவது, கேஸ் விலையை உயர்த்துவது, மண்ணெண்ணெய் விலையை உயர்த்துவது, இதைப் பற்றியெல்லாம் ஆலோசித்து முடிவெடுக்கப் போகிறார்களாம். இத்தகவலை நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக, டீசல் விலையை உயர்த்துவது பற்றி விவாதிக்க இன்று மதியம் கமிட்டி கூடுவதாக தனது பெயரை சொல்ல விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் எண்ணெய் அமைச்சகமும் தனது திட்டங்களை எடுத்துரைக்கவுள்ளது. டீசல், கெரசின், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு இந்திய அரசு அதிகளவில் மானியம் கொடுக்கிறதாம். இதனால் அரசு பெருமளவில் கடன்வாங்க வேண்டியதிருக்கிறதாம். அது மட்டுமல்ல, சர்வதேச எரிசக்தி விலை நிலவரம், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்றவற்றாலும் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாம். அது மட்டுமல்ல, ஒரு லிட்டர் டீசலுக்கு எண்ணெய் கம்பெனிகளுக்கு 14 ரூபாய் இழப்பு ஏற்படுகிறதாம். இதன் காரணமாகவே டீசல் விலையையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, சமையல் கேஸ், கெரசின் விலைகளும் உயரப் போகிறது. இதெல்லாம் ஒரு சரியான நடவடிக்கைதான் என்கிறார் மும்பையில் உள்ள ஒரு பொருளாதார நிபுணர். அவருக்கு இது சரிதான். ஆனால் கஷ்டப்படும் மக்களுக்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக