வெள்ளி, மே 18, 2012

இந்தியாவில் கணிணி விற்பனையில் லினோவா முதலிடம்


பெங்களூர், மே. - 18 - இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சீன நிறுவனமான லினோவாவின் கணிணிகளே அதிக அளவுக்கு விற்பனையாகி உள்ளன. டெல் மற்றும் எச்.பி. நிறுவனங்களின் கணிணிகள் சரிவையே சந்தித்துள்ளன. இந்தியாவில் நடப்பு காலாண்டில் மட்டும் 26.30 லட்சம் கணிணிகள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த நிதி ஆண்டின் காலாண்டைக் காட்டிலும் 7.7 விழுக்காடு அதிகமாகும். நடப்பு 2012-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி- மார்ச்) டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களின் கணிணிகளைவிட சீனாவின் லினோவா நிறுவன கணிணிகளே அதிகம் விற்பனையாகி உள்ளன. கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் லினோவா நிறுவனமானது கணிணி விற்பனையில் 4-வது இடத்தில்தான் இருந்தது. முதலிடத்தில் டெல் இருந்தது. ஆனால் டெல் இப்பொழுது 2-வது இடத்துக்குச் சென்றுவிட்டது. 3-வது இடத்தில் எச்.பி. நிறுவனம் இருக்கிறது. பொதுவாக லேப்டாப்களின் விற்பனை அதிகரித்து வருவதால் டெஸ்க்டாப் கணிணிகளின் விற்பனை சரிந்துள்ளது. அசெம்பிள் செய்யப்படும் கணிணிகளின் விற்பனையானது 38 விழுக்காடு அளவு சரிவை சந்தித்துள்ளது. நடப்பு 2012-ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சர்வர்கள் விற்பனை மூலம் 75.45 கோடி டாலராக (ரூ.4,000 கோடி) உயரும் என ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. சர்வர்கள், ஸ்டோரேஜ், நெட்வொர்க்கிங் சாதனங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு சாதனங்கள் பிரிவின் மொத்த வருவாயில் சர்வர்களின் பங்கு மட்டும் 37 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ஆம் ஆண்டிற்குள் இந்த வருவாய் 300 கோடி டாலராக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக