புதன், ஜூன் 20, 2012

மெரினாவில் ஒரே நபருக்கு 50 கடைகளா? விசாரணை செய்ய மேயர் சைதை துரைசாமி உத்தரவு.


மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கேள்வி நேரத்தின்போது 11 கவுன்சிலர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது: மெரினா கடற்கரையில் மொத்தம் 1,200 கடைகள் உள்ளன. இதில், ஒரு சில தனிப்பட்ட நபர்கள் 25 கடைகள், 50 கடைகள் என வைத்திருப்பதாக தெரிகிறது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இது குறித்து தீவிரமாக விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக, நிரந்தரமாக உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்படும். பின்னர், அவர்களுக்கு கடைகள் நடத்துவது குறித்து உரிய ஆலோசனை வழங்கப்பட்டு அவ்வண்ணமே அவர்கள் செயல்பட அறிவுறுத்தப்படுவார்கள். ஒருவர் பல கடைகள் வைத்திருப்பது தவிர்க்கப்படும். மெரினாவை சுற்றியுள்ள தலைவர்கள் சிலைகள் நவீன யுக்தியுடன் புதுப்பிக்கப்படும். விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில் நடத்தப்படும் கலை, பொறியியல், மருத்துவ கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் கட்டிடங்கள் பல இடங்களில் அனுமதியின்றியும், பல இடங்களில் விதி மீறலுடன் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இத்தகைய கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு எத்தகைய விதி மீறல்கள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டு, தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். கோடம்பாக்கம், அடையாறு, தேனாம்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் தனியார் மூலம் குப்பை அகற்றப்பட்டு வருகிறது. அவர்கள் பணியை ஒழுங்காக செய்யவில்லை என்பதால் 3 மண்டலத்திலும் தலா 2 வார்டுகளை மாநகராட்சி எடுத்துள்ளது. இனிமேல் அவர்கள் ஒழுங்காக பணி செய்யவில்லை என்றால் சட்டப்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். பின்னர் சட்டப்படி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற மற்றும் அவற்றை பயனுள்ள முறையில் பயன்படுத்த உலக அளவில் 32 நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்றப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக